பழைய ஏற்பாட்டில் சிறு தீர்க்கத்தரிசிகளின் தீர்க்கத்தரிசன புத்தகங்கள் என்று 12 புத்தகங்கள் உள்ளன. முதல் ஒன்பது சிறு தீர்க்கத்தரிசிகள் (ஓசியா , யோவேல், ஆமோஸ், ஒபதியா, யோனா, மீகா, நாகூம், ஆபகூக் மற்றும் செப்பனியா) எருசலேம் அழிக்கப்படுவதற்கும் யூதர்கள் பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்படுவதற்கும் முன்பு தீர்க்கத்தரிசனம் உரைத்தார்கள். பாபிலோனுக்கு கடத்தப்பட்டப் பிறகு மூன்று சிறிய தீர்க்கத்தரிசிகள் இருந்தார்கள் அவர்கள் யார் என்றால் ஆகாய், சகரியா மற்றும் மல்கியா ஆகியோர். எஸ்றா மற்றும் நெகேமியாவின் தலைமையில் பாபிலோனிய சிறையிலிருந்து நாடுகடத்தப்பட்டவர்கள் திரும்பிய பிறகு இந்த மூன்று தீர்க்கத்தரிசிகள் தான் தீர்க்கத்தரிசனம் உரைத்தார்கள்.
இடிபாடுகள், மறுசீரமைப்பு மற்றும் மறுகட்டமைப்பு
எழுபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பெரிய தேவாலயம் இப்பொழுது இல்லாமல் போய்விட்டது. எருசலேம் நகரம் இடிபாடுகளிலும் அழிவிலும் இருந்தது. எஞ்சியிருந்த மக்கள் மட்டுமே திரும்பி வந்தனர். இலட்சக்கணக்கானோர் நாடு கடத்தப்பட்ட நிலையில், 50000 பேர் மட்டுமே திரும்பி வந்தனர். அவர்கள் வாக்களிக்கப்பட்ட தேசத்தையும் ஆலயத்தையும் நேசித்த போதிலும், ஆலயத்தின் மறுசீரமைப்பு மற்றும் புணரமைப்பு என்பது அவர்களுக்கு சவாலாக இருந்தது. தேவாலயத்தை மீண்டும் கட்டுவதற்கு அவர்களுக்கு போதியளவு ஆவிக்குரிய பலமும் இல்லை, உடலிலும் வலுவில்லை.
வரலாற்று சூழல்
பெர்சியாவின் இராஜாவான கோரேசு, 70ஆண்டுகளாக அதாவது கிமு 538 இல் சிறைபிடிக்கப்பட்டுக் கொண்டு போகப்பட்ட யூதர்களை எருசலேமுக்குள் திரும்பி வர அனுமதித்தார். செருபாபேலின் தலைமையில், கிமு 536 இல் மீண்டும் தேவாலயம் கட்டத் தொடங்கினர் . இருப்பினும், கிமு 534 இல் பணி நிறுத்தப்பட்டது. 14 ஆண்டுகளாக இக்கட்டடத் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் அது மீண்டும் கி.மு 520 இல் தொடங்கி கி.மு. 516 ல் முடிக்கப்பட்டது (எஸ்றா 6:15)
கிமு 520 இல் ஆகாய் தீர்க்கத்தரிசி யூத மக்களுக்கு நான்கு செய்திகளை வழங்கினார். அவர் துல்லியமாக தேதிகளையும் கொடுக்கிறார். முதலாவது ஆகஸ்ட் 29, கி.மு.520 இரண்டாவது அக்டோபர் 17, கி.மு. 520 மற்றும் இறுதியாக டிசம்பர் 18, கி.மு.520 (ஆகாய் 1:1; 2;1 2:10, 20) எஸ்றாவின் புத்தகத்திலும் ஆகாய் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது (எஸ்றா 5:1-2; 6:14).
ஆகாய் இன்று நமக்கு சொல்வது என்ன?:
ஆம், ஆகாய் தீர்க்கத்தரிசி இன்றும் நம்மோடு பேசுகிறார்.
1. கவனித்துப் பாருங்கள்:
நமது எண்ணங்கள், மனப்பான்மை, நடவடிக்கைகள், உறவுகள் மற்றும் செயல்களை எப்போதும் வேதத்தின் வெளிச்சத்தில் கவனிக்க வேண்டும், குறிப்பாக நம்மைச் சுற்றி நடக்கின்ற காரியங்கள் எதுவும் நமக்கு சாதகமாகவோ அல்லது மகிழ்ச்சியாகவோ நடப்பதும் இல்லை மற்றும் நமக்கு சமாதானமும் மனநிறைவும் இருப்பதும் இல்லை.
2. முன்னுரிமை அளியுங்கள்:
மத்தேயு 6:33ல் கூறப்பட்டது போல எப்பொழுதும் தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுவதே நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும். நம்முடைய முன்னுரிமையை நாம் மறந்துவிடும் பொழுது நமக்கு விரும்பத்தகாத மற்றும் எதிர்பாராத விளைவுகள் உண்டாகும்.
3. வாக்குத்தத்தங்கள் நிறைவேற கீழ்ப்படியுங்கள்:
தேவன் தம்முடைய வாக்குத்தத்தங்கள் அனைத்தையும் நிறைவேற்ற உண்மையுள்ளவராய் இருக்கிறார் . சில நேரங்களில், அது தாமதமாகிறது, ஏனென்றால் ஒருவேளை நாம் தகுதியற்றவர்களாகவோ அல்லது ஆவிக்குரிய ரீதியில் பக்குவமற்றவர்களாகவோ அல்லது அவற்றை பெறுவதற்கு வேண்டிய கீழ்ப்படிதல் நம்மிடம் இல்லாததினாலோ இருக்கலாம் .
4. நம்பிக்கை:
பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் மேசியாவுக்காகக் காத்திருந்தது போல, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்காக நாமும் காத்திருக்க வேண்டும்.
Author: Rev. Dr. J. N. Manokaran