போலிச் செய்திகள் என்பது ஒன்றும் புதிய நிகழ்வு அல்ல. கல்லறையைக் காத்துக்கொண்டிருந்த காவலர்களால் ஆண்டவரின் உயிர்த்தெழுதல் வல்லமையைத் தாங்க முடியவில்லை. உண்மையில், அவர்கள் உயிர்த்தெழுந்த தேவ குமாரனுக்கு முன்பாக பணிந்தனர் அல்லது வீழ்ந்தனர் என்றே சொல்ல வேண்டும். பரிதாபத்திற்குரிய காவலர்கள் இந்த விஷயத்தை யூத மதத்தின் பிரதான ஆசாரியர்களிடம் அறிவித்தனர். இந்த மதத் தலைவர்கள் உயிர்த்தெழுதல் மற்றும் சத்தியத்தைப் பற்றி பயம் கொண்டனர். உண்மை வெளிவரும் முன், பொய்யான செய்திகளை உருவாக்க முடிவு செய்தனர். "இவர்கள் மூப்பரோடே கூடிவந்து, ஆலோசனைபண்ணி, சேவகருக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்து; நாங்கள் நித்திரைபண்ணுகையில், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டு போய்விட்டார்கள் என்று சொல்லுங்கள். இது தேசாதிபதிக்குக் கேள்வியானால், நாங்கள் அவரைச் சம்மதப்படுத்தி, உங்களைத் தப்புவிப்போம் என்றார்கள். அவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு, தங்களுக்குப் போதிக்கப்பட்டபடியே செய்தார்கள். இந்தப் பேச்சு யூதருக்குள்ளே இந்நாள்வரைக்கும் பிரசித்தமாயிருக்கிறது" (மத்தேயு 28:12-15).
1) சொந்த நலன்கள்:
போலியான செய்திகளை வெளியிடும் இந்த பிரதான ஆசாரியர்கள் மற்றும் அவர்களது நண்பர்களுக்கு சில உள்ளான நோக்கம் இருந்தது. இந்த சம்பவத்தில், அவர்கள் தங்கள் மதம், அரசியல், சமூக அதிகாரம், கௌரவம் மற்றும் சலுகைகளை தக்க வைத்துக் கொள்ள விரும்பினர்.
2) ஊழல்:
அதிகார வெறி கொண்ட தலைவர்கள் போலி செய்திகளை உருவாக்க போதுமான தொகையை கொடுத்தனர்.
3) செய்திக்கு ஊதியம்:
உயிர்த்தெழுதல் சத்தியத்தை அடக்குவதற்காக அல்லது உண்மை வெளிவராமல் இருப்பதற்காக பணத்தைக் கொடுத்து போலி செய்தியாக வெளியிட்ட முதல் செய்தி அநேகமாக இதுவாக தான் இருக்க வேண்டும்.
4) செல்வாக்கு மற்றும் பாதுகாப்பு:
அரசியல் அல்லது சட்டரீதியான தாக்கங்கள் ஏதேனும் இருந்தால், அவர்களின் செல்வாக்கைப் பயன்படுத்தி, போலி செய்தியை உருவாக்குபவர்களை பாதுகாக்க முடியும். பிரதான ஆசாரியர்கள் போலிச் செய்தித் தொடர்பாளர்களுக்குப் பாதுகாப்பு அல்லது வழக்குத் தொடரும் அதிகாரிகளிடமிருந்து விலக்கு அளிக்க முடியும் என்பதற்கான உத்தரவாதம் அளித்தனர்.
5) போலி செய்தி கூட்டாளர்கள்:
சமூக ஊடகங்களில் ட்ரோல் (troll) என்ற ஒன்றை உருவாக்கி எப்படி மற்றவர்களுக்கு விரைந்து அனுப்பப்படுகிறதோ, அதுபோல காவல் சேவகர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு சமூகத்தில் பொய்களை பரப்பினர். இந்த காவலர்கள் உண்மையை விட பணத்தை மதிப்பார்கள் போலும். இன்றைய ஊடகங்களும் எண்ணற்ற போலிச் செய்திகளையும் கதைகளையும் வெளியிடுவதில் ஆச்சரியம் ஏதுமில்லையே.
ஆக; இச்சூழலில், எது உண்மை என்பதை பகுத்தறியும் பொறுப்பு கேட்பவர்களிடமே உள்ளது. போலிச் செய்திகளை உருவாக்குபவர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களைக் குறை கூறுவதில் பயனில்லை. நாம் தான் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் உஷாராகவும் இருக்க வேண்டும்.
உண்மை எது என கண்டறியும், விழிப்புணர்வடையும் மற்றும் பகுத்தறியும் திறன் என்னிடம் உள்ளதா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்