தேவன் மனித புரிதலுக்கு அப்பாற்பட்டவர்; ஆம், அவர் கற்பனைக்கும் எட்டாத வழிகளில் செயல்படுகிறார். மதுரை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்க செல்வின் என்பவர் தேர்வானார். முதலாம் ஆண்டு விடுதியில் தங்கி படிக்க வேண்டியதாயிற்று. அந்தக் காலத்தில் சீனியர் ஜூனியர் கேலிக் கிண்டல் சீண்டல் என்பது மிக சாதாரணமான ஒன்றாக இருந்தது. இன்றைய காலங்களில் தான் இது மிக கொடுமையானதாகவும் வன்முறையாகவும் வன்மமாகவும் மாறிவிட்டது. அன்று ஒரு நாள் 6-7 சீனியர் மாணவர்கள் செல்வின் அவரின் அறைக்கு வந்தனர். அவர்கள் மிரட்டவும், வம்பு இழுக்கவும் தொடங்கினர். அந்த சீனியரில் ஒருவர் செல்வினிடம் உன் சட்டை பாக்கெட்டில் இருப்பதையெல்லாம் வெறுமையாக்கு என்று சொன்னார்கள். அதாவது அவரிடம் இருப்பதை கொள்ளையடிக்க எண்ணினார்கள். அப்படி செல்வின் செய்தபோது, ஒரு சிறிய புத்தகம் இருந்ததைக் கண்டார்கள். ஆம், அது ஒரு 'பாக்கெட் டெஸ்டமென்ட் லீக்' தயாரித்த ஆத்தும ஆதாயப்பணிக்கான புதிய ஏற்பாடு மாத்திரம் உள்ள சிறிய அளவிலான புத்தகம். அந்த சீனியர்கள் செல்வினை அப்புத்தகத்தைத் திறந்து ஆள்காட்டி விரலை எதேச்சையாக வைக்க வேண்டும்; அது எந்த வாக்கியமோ அதைப் படிக்கச் சொன்னார்கள். செல்வினும் திறந்து படித்தார்; அதில் "விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று" என்று படித்ததும் அவர்களெல்லாம் திகைத்துப் போயினர். பின்பு செல்வின் தைரியத்தை வரவழைத்து, முந்தைய பகுதியை வாசித்தார். "அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்" (யோவான் 3:18). அப்போது உடனிருந்த மாணவர்களில் ஒருவர் தனது சகோதரியும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர் என்று கூறினார்; பின்பதாக சீனியர் கூட்டமும் கலைந்தது ('குயவனின் கையில்' - டாக்டர் செல்வின் எபினேசரின் வாழ்க்கை வரலாறு).
சாட்சி:
அனைத்து விசுவாசிகளும் ஒரு சாட்சியாக இருக்க வேண்டும் என்பது ஆணை (அப்போஸ்தலர் 1:8). 1970களில் கிறிஸ்தவர்கள் மத்தியில் புதிய ஏற்பாட்டை எடுத்துச் செல்வது பொதுவானது, இது இப்போது ஸ்மார்ட்போன்களுக்கான பயன்பாடாக மாறியுள்ளது. பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும் காலக்கட்டங்களில் பேருந்திற்காக காத்திருக்கும் போது பல விசுவாசிகள் புதிய ஏற்பாட்டை வாசிப்பார்கள். ஆனால் வருத்தம் என்னவெனில், இப்போதெல்லாம் அது வீடியோ கேம்களாக மற்றும் சமூக வலைத்தளங்களில் பார்க்கின்ற (ஒன்றுக்கும் உதவாத) வீடியோக்களை மற்றவர்களுக்கும் அனுப்பும் பணி தான் மும்முரமாக நடைபெறுகிறது.
தைரியம்:
செல்வினுக்கு, தன்னை பயமுறுத்தியவர்களை எதிர்கொள்ளும் தைரியத்தை தேவன் கொடுத்தார். ஆம், வார்த்தை மிகவும் வலிமை வாய்ந்தது, உடல் ரீதியான பலவான்கள் கூட பலவீனமாக உணர்ந்தனர். அதற்குப் பின்பு அவர்கள் அவரைத் தொந்தரவு செய்யவோ அல்லது தீங்கு செய்யவோ இல்லை.
தரிசனம்:
செல்வின் அவர்களின் தரிசனமே மற்றவர்களுக்கு தேவனை அறிமுகப்படுத்துவதாக இருந்தது. அதற்காக, அவர் ஆத்தும ஆதாயப் பணிக்கான புதிய ஏற்பாட்டை வாங்கினார், இது நற்செய்தியைப் பகிர்ந்து கொள்ள ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டது. தேவன் மீதான அவரது அன்பும் தரிசனமும் அவரை நற்செய்தியைப் பகிர்ந்து கொள்வதற்கான புதிய திறன்களையும் கருவிகளையும் பெறத் தூண்டியது.
பாதுகாப்பு:
நற்செய்தியைப் பகிர்ந்துகொள்வதில் நாம் ஈடுபடும்போது, அவருடைய பிரசன்னத்தைப் பற்றிய தேவனின் வாக்குறுதி உண்மையானது. "இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்" (மத்தேயு 28:18-20). உண்மையில் அது விரோதத்தின் மத்தியில் கிடைத்த வெற்றி.
நான் அவருக்கு தைரியமான சாட்சியா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்