ஒரு ஆராதனை தலைவர் இப்படியாக விளக்கினார்; “அனுபவம் தான் முக்கியம்; அதாவது சபைக்கு வருபவர்கள் தனித்தனியாக வண்ணங்களைக் காண வேண்டும், இனிமையான ஒளி நறுமணமாக இருக்க வேண்டும், புகை மண்டலமாக காட்சியளிக்க வேண்டும். பின்னர் பரிசுத்த ஆவியானவர் செயல்பட முடியும், மேலும் மக்களும் நன்றாக உணருவார்கள். டான்ஸ் பார்கள், டிஸ்கோ ஹவுஸ்கள் மற்றும் சினிமாக்களில் நடக்கும் கச்சேரிகளைப் பார்த்து இதுபோன்ற நுட்பங்களைக் கற்றுக் கொள்ளும்படி அவர் தனது உடனிருப்பவர்களைக் கேட்டுக் கொண்டார். துரதிர்ஷ்டவசமாக, இந்த தலைவர்கள் பரிசுத்த ஆவியானவரைப் பற்றி அறிந்திருக்கவில்லை என்றே சொல்ல வேண்டும், சிருஷ்டித்தவருக்கு அவரை வெளிப்படுத்த செயற்கையான சூழல் தேவையில்லை (ஆதியாகமம் 1:2). தேவையானது உணர்ச்சிகரமான அனுபவம் அல்ல, ஆனால் தேவ தொடுதலின் ஆவிக்குரிய அனுபவம் மற்றும் தேவ சத்தமும் ஆகும்.
தேவ மகிமை:
தேவனின் மகிமையும், அவருடைய வல்லமையும் எவ்வாறு புகை போல வெளிப்பட்டது என்பதை அப்போஸ்தலனாகிய யோவான் தான் கண்ட பரலோகத்தின் காட்சியை விவரிக்கிறார் (வெளிப்படுத்துதல் 15:8). கர்த்தர் அக்கினியாய் சீனாய் மலையில் இறங்கியதால், அது முற்றிலும் புகையால் சூழப்பட்டது. புகை சூளையின் புகையைப் போல எழுந்தது, மலை முழுவதும் பயங்கரமாக அதிர்ந்தது (யாத்திராகமம் 19:18). மேலும் ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து வெளியே வந்தபோது, மேகம் கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பியது (1 இராஜாக்கள் 8:10). இவை தெய்வீக வெளிப்பாடுகளே தவிர மனிதனின் எந்திரத்தனமான திட்டம் அல்ல.
போலிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்:
ஆரோனின் மகன்கள் தேவ வெளிப்பாட்டைப் போல தோற்றமளிக்க தாங்கள் சொந்தமாக நறுமண கலசத்தில் நெருப்பை உருவாக்க முயன்றனர், அதன் விளைவு கர்த்தரின் சந்நிதானத்திலேயே மரித்துப் போயினர் (லேவியராகமம் 10:1). காணிக்கையை ஏற்றுக் கொள்ள தேவன் நெருப்பை அனுப்புவார் என்று விசுவாசத்தில் எதிர்பார்ப்பதற்குப் பதிலாக, அவர்கள் ஒரு விசித்திரமான நெருப்பை உருவாக்கினர், அது போலியானது. அனனியாவும் சப்பீராளும் பரிசுத்த ஆவியிடம் பொய் சொல்லத் துணிந்து இறந்தனர் (அப்போஸ்தலர் 5).
உண்மையான வழிபாடு:
முதலில் , புகை, நிறம், மணம், குரல், சத்தம் போன்றவற்றின் வெற்றுத்தன்மையில் அல்லாமல் பரிசுத்தத்தின் மகிமையில் தேவனை வணங்குங்கள். இரண்டாவது , சரியான ஆராதனை சத்தியத்திலும், தேவனின் வார்த்தையிலும் உள்ளது, ஆம், தேவனை வழிபடுகிற மக்கள் ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ள வேண்டும் (யோவான் 4:24). மூன்றாவது, தேவன் மாம்சத்தில் (சரீர பிரகாரமாக, மனித அறிவின்படி மற்றும் உலகப்பிரகாரமாக) அல்ல, ஆவியில் வழிபடுவதை எதிர்பார்க்கிறார். நான்காவது , வழிபாடு மனதை உள்ளடக்கியது, இயந்திரத்தனமாக திரும்பத் திரும்ப அல்லது உணர்ச்சிபூர்வமான ஒத்திகை அல்ல (1 கொரிந்தியர் 14:15). ஐந்தாவது , நியாயமான வழிபாடு என்பது ஒரு ஜீவனுள்ள பலியாக தன்னை முற்றிலுமாக அர்ப்பணிப்பதாகும் (ரோமர் 12:1).
நான் ஜீவனுள்ள தேவனை ஆவியோடும் உண்மையோடும் வணங்குகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்