மக்களிடம் கேட்கப்பட்ட போது:
நீங்கள் எப்போது நேசிக்கப்பட்டதாக உணர்ந்தீர்கள் என மக்களிடம் கேட்கப்பட்ட போது கணக்கெடுப்பில் ஆறு முக்கிய பதில்கள் இருந்தன. தேவன் மனிதகுலத்தின் மீதான தனது அன்பை ஒரு முன்மாதிரியான முறையில் வெளிப்படுத்தியுள்ளார்.
ஒருவர் நம் பேச்சைக் கவனமாகக் கேட்கும்போது:
உலகில் பலவிதமான இரைச்சல்கள், சத்தங்கள் உள்ளன. இருப்பினும், அன்பு, உறுதிமொழி, நீதி மற்றும் தேவைகளுக்காக சத்தமிட நினைக்கும், வாஞ்சித்து நிற்கும் சிலர் உள்ளனர். இந்தக் குரல்கள் அல்லது அழுகைகள் அல்லது கூக்குரல்கள் பெரும்பாலான மக்களுக்குக் கேட்காது. நேசிப்பவர்களால் மட்டுமே இதுபோன்ற முணங்கல்களையும் கவனித்து நேர்மறையான மற்றும் ஆறுதலான பதில்களை அளிக்க முடியும். களைப்புடனும், சோர்வுடனும், கொஞ்சம் கூட முடியாத நிலையிலும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, வருந்துகிற திருடனின் ஜெபத்தைக் / சத்தத்தைக் கேட்டார் (லூக்கா 23:43).
ஒருவர் நம்மை முக்கியமாக உணரும் போது:
பிரபலமான போதகரான கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றி சகேயு கேள்விப்பட்டிருந்தான். அவரை தூரத்தில் இருந்தாகிலும் எப்படியாவது பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். அவன் குட்டையான மனிதனாக இருந்தபடியால் அவரைத் தெளிவாக காணும்படியாக, ஒரு காட்டத்தி மரத்தின் மீது ஏறினான். இருப்பினும், கர்த்தராகிய இயேசு மரத்தடியில் நின்று, சகேயு என்று அழைத்தது மாத்திரமல்ல, மேலும் அவனுக்கு மரியாதையையும் விருந்தளிப்போன் பாக்கியத்தையும் கொடுத்தார். சமுதாயத்தால் விலக்கப்பட்ட வரி வசூலிப்பவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவால் ஏற்றுக்கொள்ளப்பட்டவனாகவும் முக்கியமானவனாகவும் உணரப்பட்டான் (லூக்கா 19:1-10).
ஒருவர் நம்மை ஊக்கப்படுத்தும் போது:
கர்த்தர் பவுலுக்குத் தோன்றி, கொரிந்து நகரத்தில் பிரசங்க ஊழியத்தைத் தொடர ஊக்குவித்தார். பல பிரச்சனைகளையும் எதிர்ப்பையும் எதிர்கொண்டதால், பவுல் ஊக்கம் இழந்தார். அன்பான தேவன் தம் ஊழியரை ஊக்கப்படுத்துகிறார் (அப்போஸ்தலர் 18:10).
ஒருவர் நம்மை தூண்டி விடும் போது:
நாசரேத்திலிருந்து ஏதாவது நல்லது வருமா என்று நாத்தான்வேலுக்கு உறுதியாக தெரியவில்லை. நாத்தான்வேல் ஒரு அத்தி மரத்தடியில் இருந்தபோது பார்த்ததாக கர்த்தர் சொன்னார். "பின்னும், அவர் அவனை நோக்கி: வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்" (யோவான் 1:51) என்று நாத்தான்வேலிடம் ஒரு ஆர்வத்தை ஆண்டவர் தூண்டினார்.
ஒருவர் நம் காயங்களைக் கண்டு ஆறுதல் அளிக்கும் போது:
மக்கள் உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் பாதிக்கப்படும்போது, அன்பு, நம்பிக்கை மற்றும் அக்கறைக்காக ஏங்குகிறார்கள். விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை ஆண்டவர் இயேசு கண்டிக்கவில்லை. அவர் அவள் மீது அக்கறைக் கொண்டதால் இனி பாவம் செய்ய வேண்டாம் என்று கட்டளையிட்டார். "இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார்" (யோவான் 8:11) கரிசனையோடு.
ஒருவர் நாம் எதிர்பாராத வேளையில் பரிசளிக்கும் போது:
பிறரை நேசிப்பவர்கள் பரிசுகளை வழங்குவதன் மூலம் தங்களின் அன்பை வெளிப்படுத்துகிறார்கள். தேவன் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நமக்களித்து, அவர் மூலமாக நமக்கு ஒரு விவரிக்க முடியாத பரிசாக இரட்சிப்பையும் கொடுத்தார் (2 கொரிந்தியர் 9:15).
தேவனின் அன்புக்காக நான் அவரை கனம் பண்ணுகிறேனா, அளவில்லா அன்பிற்காக சந்தோஷப்படுகிறேனா மற்றும் அதற்காக நன்றி செலுத்துகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்