ஒருவேளை, பவுல் இந்த டிஜிட்டல் தலைமுறையைப் பற்றி தீர்க்கதரிசனமாக தான், எப்போதும் கற்றுக்கொண்டே இருப்பார்கள் ஆனால் சத்தியத்தைப் பற்றிய அறிவை அடைய முடியாமல் இருப்பார்கள் என்பதாக 2 தீமோத்தேயு 3:6ல் எழுதினார் போலும். வேறு எந்த முந்தைய தலைமுறையையும் போலல்லாமல், இந்தத் தலைமுறையினர் எப்போதும் தங்கள் ஸ்மார்ட்போன்கள் மூலம் மக்களோடும் அல்லது படங்கள் அல்லது கேம்கள் அல்லது வீடியோக்கள் அல்லது ஆடியோக்களுடன் ஓய்வில்லாமல் ஈடுபாடுடன் காணப்படுகின்றனர். ஆம், இவர்களெல்லாம் இணையவழி தகவல் நெடுஞ்சாலையில் அடிக்கடி பயணிப்பவர்கள்.
1) எப்போதும் ஸ்க்ரோலிங்:
விரல்கள் எப்போதும் மொபைல் திரையை கிட்டத்தட்ட எல்லா நேரங்களிலும் மேலேயும் கீழேயும் நகர்த்திக் கொண்டு உள்ளது. அவர்கள் ஒரு வித்தியாசமான டிஜிட்டல் நோயாலும் பிடிக்கப்படுகிறார்கள்; ஆம் தனித்து விடுவோமோ என்ற பயம் (FOMO). இந்த நோய்க்கான ஒரே சிகிச்சை முழுமையான விலக்கு அல்லது இணைய இணைப்பு இல்லாமல் இருப்பதேயாகும்.
2) எப்போதும் பார்ப்பது:
பார்ப்பது என்பது எளிதாகவும் வசதியாகவும் இருப்பதாக பலர் உணர்கிறார்கள். ஒருவேளை, பார்ப்பதை மனதிற்குள் போட்டு அடைக்க வேண்டிய அவசியமில்லை, உண்மையில் நேபுகாத்நேச்சரின் கனவுகள் போல் தடயமே இல்லாமல் மறைந்துவிடும் (தானியேல் 2:1-3). ஒவ்வொரு நிமிடமும் நீரோட்டம் போன்று பலவிதமான உள்ளடக்கம் கொண்ட வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
3) எப்போதும் கேட்பது:
ஒருவேளை அவர்களுக்கு வேறு வேலைகள் இருந்தால், அவர்கள் தங்கள் காதுகளில் காதொலிப்பானைச் (head/earphones) சொருகி, தொடர்ந்து இசையையோ அல்லது பிற உள்ளடக்கத்தைக் கொண்ட ஆடியோ செய்தியையோ கேட்கிறார்கள்.
4) எப்போதும் முன்னனுப்புதல் (forwarding):
வித்தியாசமான விஷயம் என்னவெனில், சமூக ஊடகங்களில் வரும் விஷயத்தின் உள்ளடக்கத்தை புரிந்து கொள்ளாவிட்டாலும் அல்லது மதிப்பிட முடியாவிட்டாலும் கூட; அவர்கள் அதை மகிழ்ச்சியாகவும் கடமையாகவும் பலருக்கு அனுப்புகிறார்கள். அதில் தொல்லையும் முட்டாள்தனமும் மாத்திரமே உள்ளது.
5) எப்போதும் குழப்பம்:
ஆடியோ, செய்திகள், படங்கள், வீடியோக்கள், கலந்துரையாடல்கள் என பலவற்றைக் கற்றுக்கொள்வதன் மூலம் அவர்கள் முற்றிலும் குழப்பம் தான் அடைகிறார்கள். தகவல் என்று அழைக்கப்படும் பிரமையில், விவேகமானதோ அல்லது அர்த்தமுள்ளதோ எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
ஞானத்தின் ஆதாரம்:
"கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு" (நீதிமொழிகள் 9:10). கூகுள் அல்லது வாட்ஸ்அப் அல்லது தேடுதல் தளங்கள் என எதுவும் ஞானத்தின் ஆரம்பமோ அல்லது ஆதாரமோ அல்ல. தேவ வார்த்தையே எல்லா ஞானத்தின் களஞ்சியமான சத்தியம் (யோவான் 17:17; சங்கீதம் 119:160). செயற்கை நுண்ணறிவு அல்லது டிஜிட்டல் உதவியாளர்களால் சத்தியத்திற்கு நம்மை வழிநடத்த முடியாது. பரிசுத்த ஆவியானவரால் மட்டுமே சத்தியத்திற்கு நம்மை வழிநடத்த முடியும் (யோவான் 16:13).
இந்த 'வாட்ஸ்அப் பல்கலைக்கழகத்தால்' ஆத்மா, உள்ளுணர்வு அல்லது உள்ளான மனிதனின் கேள்விகளுக்கு ஒருபோதும் பதிலளிக்க முடியாது. துரதிர்ஷ்டவசமாக, பவுல் எழுதுவது போல், இது ‘எப்போதும் கற்றுக்கொள்வது’ என்ற தவறான எண்ணத்தை அளிக்கிறது, ஆனால் சாராம்சத்தில் பார்த்தால் உருப்படியாக எதையும் கற்றுக்கொள்வதில்லை.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் நான் ஞானத்தைக் கண்டேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்