ஆகஸ்ட் 2, 1557 இல், வில்லியம் பாங்கேயர், வில்லியம் புர்காஸ், தாமஸ் பெனோல்ட், ஆக்னஸ் சில்வர்சைட், ஸ்மித், ஹெலன் எவ்ரிங் மற்றும் எலிசபெத் ஃபோல்க்ஸ் ஆகியோர் மதங்களுக்கு எதிராக நின்றதற்காக உயிருடன் எரிக்கப்பட்டனர். ஆறு பேரும் ஆணியில் அடிக்கப்பட்டு, அவர்கள் மீது நெருப்பு வைத்து எரிந்தது, ஆனால் அவர்கள் நெருப்பில் மகிழ்ச்சியுடன் கைதட்டினர். சாத்ராக் மேஷாக் மற்றும் ஆபேத்நேகோ ஆகிய மூன்று இளைஞர்களைப் போலவே, இந்த ஆறு பேரும் அக்கினி மரணத்தின் வழியாகச் சென்று அவருடைய மகிமையான பிரசன்னத்திற்குள் நுழைவதில் மகிழ்ச்சியடைந்தனர் (தானியேல் 3:8-18).
இறுதி வார்த்தைகள்:
எலிசபெத் ஃபோல்க்ஸ் அவர்கள் தனது இறுதி வார்த்தைகளை வெளிப்படுத்தினார்; "உலகம் முழுவதற்கும் பிரியாவிடை! விசுவாசத்திற்கு பிரியாவிடை! நம்பிக்கைக்கு பிரியாவிடை! அன்பே வருக வருக!” அட, என்ன ஒரு தைரியமான மற்றும் உண்மையான அறிக்கை அல்லவா! ஆம், மரணத்தை எதிர்கொண்டார், அவர் பயப்படவில்லை ஆனால் தன் எதிரிகளுக்கு நற்செய்தியின் சாராம்சத்தைக் கொடுத்தார். “இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இந்த மூன்றும் நிலைத்திருக்கும்; ஆனால் இவற்றில் அன்பே பெரியது" (1 கொரிந்தியர் 13:13) என்று பவுல் எழுதுகிறார்.
விசுவாசம்:
"விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது” (எபிரெயர் 11:1). கிறிஸ்தவ வாழ்க்கைக்கு விசுவாசமே அடிப்படை. விசுவாசத்தினால், கிருபையால், நாம் இரட்சிக்கப்படுகிறோம், அது தேவனிடமிருந்து கிடைத்த ஈவு (எபேசியர் 2:8-10). தேவ பிள்ளைகள் எதை விசுவாசிக்கிறார்களோ அதன்படி வாழ்கிறார்கள்; எதைப் பார்க்கிறார்களோ அதன்படி வாழ்வதில்லை (2 கொரிந்தியர் 5:7). இருப்பினும், விசுவாசிகள் பரலோகத்தில் நுழையும்போது, எலிசபெத் ஃபோல்க்ஸ் அவர்கள் செய்தது போல் விசுவாசிகளும் விடைபெறலாம். விசுவாசத்தின் மூலம் உத்தரவாதம் மற்றும் நம்பிக்கை பரலோகத்தில் நிஜம்.
நம்பிக்கை:
நம்பிக்கை என்பது எதிர்காலத்தைப் பற்றியது. நமது தேவனும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்குக் காத்திருக்கும்போது அவ்விதமாய் நாம் வாழவேண்டும். அவரே நமது பெரும் நம்பிக்கை. அவர் மகிமையுடன் வருவார் (தீத்து 2:13). இருந்தாலும், நம்பிக்கை பரலோகத்தில் நிஜமாகிறது. ஆதலால் இனி காத்திருக்கவோ எதிர்பார்க்கவோ தேவை இல்லை. எல்லா எதிர்பார்ப்புகளும், எதிர்பார்க்கும் காரியங்களும் பரலோகத்தில் நிறைவேறும். எனவே, இந்த நம்பிக்கையின்படி எலிசபெத் அவர்களால் “நம்பிக்கைக்கு பிரியாவிடை” என கூற முடியும்.
அன்பு:
தேவன் அன்புள்ளவர் மற்றும் அவரது சமூகமும் அன்பால் நிறைந்தது, ஆக பரலோகம் அன்பு நிறைந்தது (1 யோவான் 4:16). அன்பின் ஆழம், அகலம், நீளம், உயரம் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள பவுல் விரும்பினார் (எபேசியர் 3:18-21). பரலோகம் என்பது மனிதனின் புரிதலுக்கும் கற்பனைக்கும் அப்பாற்பட்ட அன்பின் கடல். மரணத்தை எதிர்கொள்ளும் போது எலிசபெத் ஃபோல்க்ஸ் அவர்கள் செய்தது போல் ஒரு விசுவாசி அன்பை நம்பிக்கையுடன் வரவேற்க முடியும்.
ஆண்டவரே நம் மாதிரி:
கர்த்தராகிய இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது, அவர் சபிக்கவில்லை அல்லது கசந்து கொள்ளவில்லை, ஆனால் துன்புறுத்தியவர்களுக்காக பிதாவிடம் மன்னிப்பு கேட்டு அன்பை வெளிப்படுத்தினார் (லூக்கா 23:34).
அவருடைய மகிமையான அன்பான பிரசன்னத்திற்குள் நுழைய நான் எப்போதும் தயாராக இருக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்