தொட்டாற் சுருங்கி அல்லது தொட்டாற் சிணுங்கி அல்லது தொட்டால் வாடி என்னும் இத்தாவரத்தின் தாவரவியற் பெயர் மிமோசா பியூடிகா (Mimosa pudica) என்பதாகும். இந்த தாவரத்தைப் போன்ற சில மனிதர்கள் உண்டு. சிறிய விஷயங்கள் ஆனாலும் ஐயோ என்னைக் காயப்படுத்தி விட்டார்களே அல்லது என்னை மிகவும் வருத்தப்படுத்தி விட்டார்களே என தொட்டாற்சிணுங்கி போன்று சிணுங்குவதுண்டு. கிறிஸ்தவர்களாகிய நமக்கு எதற்கெடுத்தாலும் அல்லது எல்லாவற்றிற்கும் சிணுங்குவதற்கு அல்லது காயப்பட்டு விட்டேன் என்று நிற்பதற்கு உரிமை இருக்கிறதா? இன்று, கோடிக்கணக்கான நீதிமன்ற வழக்குகள் உள்ளன, அதில் சிலர் தங்களுக்கு ஏற்பட்ட காயங்களுக்காக, இழப்பீடு மற்றும் நீதி கேட்டு காத்திருக்கின்றனர். சிலர் உணர்ச்சிக் கொந்தளிப்பில் உள்ளனர். தனிநபர்கள், நிறுவனங்கள், ஊடகங்கள் மற்றும் அரசாங்கங்கள் யாரையும் காயப்படுத்த முடியும்.
அன்பானவர்களால் புண்படுதல்:
நெருக்கமாக இருப்பவர்கள் தான் மோசமாக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவர்கள். பெற்றோர்கள், மனைவிகள் மற்றும் குழந்தைகள் என குடும்பத்திற்குள் பெரிதும் பாதிக்கப்படலாம். அபூரணமான உலகில், எல்லாருமே பாவிகளே, காயப்படுத்தக்கூடிய ஒன்றைச் சொல்லலாம் அல்லது செய்யலாம். சீஷர்கள் இத்தகைய சூழ்நிலைகளுக்கு வேதாகம புரிதலுடனும் நம்பிக்கையுடனும் எதிர் வினையாற்றுவார்கள்.
விமர்சனங்களைக் கண்டு கொள்ளாமல் இருங்கள்:
கோலியாத்தின் மீதான வெற்றிக்காக தாவீதின் பெருமையை பெண்கள் பாடினர், இது சவுலின் பாதுகாப்பை காயப்படுத்தியது. ஆனால் சீமேயி அவனை சபித்தபோது தாவீது காயப்படவில்லை (2 சாமுவேல் 16:5-13). ஆவிக்குரிய பக்குவமுள்ள சீஷர்கள் தேவையற்ற மற்றும் பொய்யான விமர்சனங்களால் பாதிக்கப்படுவதில்லை.
தேவனிடம் சொல்லுங்கள்:
மக்கள் காயப்படுத்தும்போது, நாமும் காயப்படும்போது நம் இதயங்களை ஊற்றுவதற்கான சிறந்த இடம் தேவ பிரசன்னம். பெனின்னாவால் காயப்பட்டு, அன்னாள் தன் வேதனையை தேவ சமூகத்தில் ஊற்றினாள், அதன் பிறகு அவள் வருத்தப்படவில்லை (1 சாமுவேல் 1:12,18).
பொறுமையாக பேசுங்கள்:
“என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்” என யாக்கோபு 1:19ல் வாசிக்கிறோமே. காயமடைந்த உணர்வுகள் உடனடியாக எதிர்வினையாற்றும், தேவையற்ற வார்த்தைகள் மேலெழும்பி பெரும் சேதத்தை உண்டாக்கும். பதிலுக்கு பதில் ('Tit for Tat') என்பது உலக விதிமுறை, ஆனால் கிறிஸ்தவர்கள் அப்படி இருக்க கூடாது. உடனே பதிலடியாக பேசக்கூடாது. வார்த்தைகள் அளவிடப்பட்டதாகவும், பொருத்தமானதாகவும், கண்ணியமாகவும் இருக்க வேண்டும்.
கோபிக்க தாமதப்படுங்கள்:
எந்த ஆத்திரமூட்டலுக்கும் பதிலளிப்பது தோல்விதான். சாத்தான் யாரையும் தோற்கடிக்க சாதாரண அல்லது எளிய, பலவீனமான மனிதர்களைப் பயன்படுத்த முடியும். மனித கோபம் நீதியைக் கொண்டுவரவோ அல்லது புண்படுத்தப்பட்ட நபரைக் குணப்படுத்தவோ முடியாது.
மன்னிப்பு என்னும் பரிசளியுங்கள்:
தான் மன்னித்ததைப் போல நீங்களும் மன்னியுங்கள் என தேவன் தம் சீஷர்களுக்குக் கற்றுக் கொடுத்துள்ளார். மன்னிப்பவர் கடந்ததையே நினைக்கும் காலத்தின் கைதி அல்ல, ஆனால் எதிர்காலத்தை நோக்கி நகர்கிறார். மன்னிப்பவர் அமைதியை அனுபவிக்கிறார், கோபம், கசப்பு, வெறுப்பு மற்றும் பழிவாங்கும் மனப்பான்மை இருக்காது.
எதுவும் காயப்படுத்தி அதிலேயே நான் நின்று விடாதபடிக்கு அதை கையாளும் அளவுக்கு நான் ஆவிக்குரிய ரீதியில் பக்குவப்பட்டுள்ளேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்