தேவன் எல்லா தேசங்களையும் ஆளும் இறையாண்மையுள்ள தேவன். எல்லா நாடுகளும் அவர் அதிகாரத்திற்கு உட்படுகின்றன, அவர் அவர்களிடமிருந்து கணக்குகளைக் கோருவார், அவர்களைத் தண்டிப்பார், தீர்ப்பளிப்பார். தேவன் ஏன் பத்து வாதைகளை எகிப்துக்கு அனுப்பினார்? வாதைகள் எகிப்தை அழித்தன; தப்பி ஓடிய அடிமைகளை அவர்களால் வெல்ல முடியவில்லை. வாதைகளுக்கு பல காரணங்கள் உள்ளன.
தேவன் யார்?
எகிப்தியர்கள் பார்வோன் ஒரு உயிருள்ள கடவுள் என்றும் இன்னும் பல கடவுள்கள் எகிப்திய தெய்வங்களாக நம்பினர். தேவன் தம் மக்களை போக விடுமாறு கட்டளையிட்டார் என மோசே பார்வோனிடம் சொன்னபோது, பார்வோன் அதற்கு தேவன் யார் என கேள்வி எழுப்பினான். எகிப்தில் ஏற்பட்ட வாதைகள், அடையாளங்கள் மற்றும் அதிசயங்கள் ஜீவனுள்ள தேவன் யார் என நிரூபித்தன.
தேவ வல்லமை வெளிப்பட்டது:
உண்மையில், தேவன் பார்வோனை எகிப்தின் ஆட்சியாளராக உயர்த்தினார். அதனால் தேவன் தனது அற்புதமான வல்லமையைக் காட்டவும், நிரூபிக்கவும், பிரஸ்தாபப்படுத்தவும் முடியும். இதன் மூலம் வல்லமை தேவனுடையது என்பதை மற்ற நாடுகளும் புரிந்து கொள்ளும் (யாத்திராகமம் 9:16).
இஸ்ரவேலுக்கு சாட்சி:
எகிப்து மீதான தேவ நீதியான தீர்ப்பின் இந்த உண்மையை இஸ்ரவேல் தேசம் தங்கள் குழந்தைகளுக்கு அறிவிக்க வேண்டும். தலைமுறைகள் யெகோவாவை தேவனே சிருஷ்டிகர் என்றும் மீட்பர் என்றும் அறியலாம் (யாத்திராகமம் 10:2). இஸ்ரவேலின் சந்ததியினர் தேவனைப் பற்றியும், இஸ்ரவேலிடம் அவர் காண்பிக்கும் அன்பு, வாக்குத்தத்தம், உடன்படிக்கை, பிரமாணம் மற்றும் வரலாறு ஆகியவற்றைப் பற்றியும் கற்பிக்கக் கட்டளையிடப்பட்டனர்.
பொய் கடவுள்கள் மீதான தீர்ப்பு:
எகிப்தியர்கள் சாத்தானால் கண்மூடித்தனமாக இருந்தனர், எனவே அவர்கள் தொடர்ந்து பொய்யான தெய்வங்களை வணங்கினர். ஒவ்வொரு வாதையும் எகிப்தின் ஒரு குறிப்பிட்ட தெய்வத்தைக் குறிக்கும் தீர்ப்பு ஆகும். உண்மையில் எகிப்தின் தெய்வங்களை தேவன் நியாயந்தீர்த்தார்; அதாவது ஹாபி, ஐசிஸ், குனும், ஹெகெட், செட், ரீ அல்லது ரா, உட்சிட், ஹாத்தோர், அபிஸ், செக்மெட், நட், ஒசைரிஸ், ஹோரஸ் மற்றும் மின் ஆகும்.
தேசங்களுக்கான எச்சரிப்பு:
தேவன் நீதியுள்ளவர், அவர் தேசங்களை நியாயந்தீர்க்கிறார் என்பதைச் சுற்றியுள்ள தேசங்கள் நினைவுகூர்ந்தன. இஸ்ரவேலுக்காகவும் எகிப்துக்கு எதிராகவும் தேவனுடைய வல்லமையான செயல்களைப் பற்றி தங்கள் ஜனங்கள் எப்படி அறிந்திருக்கிறார்கள் என்பதை ராகாப் உளவாளிகளிடம் கூறினார் அல்லவா (யோசுவா 2:10-11). 400 ஆண்டுகளுக்குப் பிறகும், எகிப்தில் வாதைகளை ஏற்படுத்திய இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை பெலிஸ்தர்கள் நினைவுகூர்ந்தனர் (1 சாமுவேல் 4:8).
தேவனின் மகத்துவத்தின் சாட்சி:
அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்து தம்முடைய ஜனங்களை விடுவித்த வேறெந்த தேசத்திலும் இப்படியொரு தேவன் இல்லையே (உபாகமம் 4:34). “கர்த்தாவே, தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்?" (யாத்திராகமம் 15:11).
இப்படிப்பட்ட அற்புதமான தேவனை அவர் வல்லமையை நான் அறிந்திருக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்