ஒரு பெண் தனது மூன்று படுக்கையறைகள் கொண்ட வீட்டை விற்று, பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு தன்னை இளமையாகக் காட்டினார். 50 வயதில் இருக்கும் அப்பெண்மணி இளமையாக இருக்க மருந்து சாப்பிடுவதும், முகத்திற்கு க்ரீம் பூசுவதுமாக இருக்கிறார். இருப்பினும், இதெல்லாம் போதாது என்று அவர் உணர்ந்தார், எனவே அவர் அறுவை சிகிச்சை செய்ய அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள தனது வீட்டை விற்கும் விபரீத நடவடிக்கையை எடுத்தார். இப்போது, வீடுன்றி அவர் ஒரு வேனில் வசிக்கிறார். அழகாகவும் கவர்ச்சியாகவும் தோற்றமளிக்க வேண்டும் என்ற காரணத்தால் தனது வீட்டின் வசதியை நிராகரித்து, வேனில் வசிக்கிறார் (நியூயார்க் போஸ்ட் ஜூலை 31, 2023) “செளந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்" (நீதிமொழிகள் 31:30) என்பதாக வேதாகமம் கற்பிக்கிறது.
தற்காலிக நாட்டம்:
அழகு வீண் என நீதிமொழிகளில் வரும் பாக்கியம் பெற்ற பெண்ணைப் போல இப்பெண்மணி புரிந்து கொள்ளவில்லை. வாழ்க்கையில் முக்கியமான விஷயம், ஞானத்தை வழங்கும் தேவனுக்கு பயப்படுதல் ஆகும். அந்த ஞானம் மாணிக்கங்கள், வெள்ளி அல்லது தங்கத்தை விட சிறந்தது (நீதிமொழிகள் 9:10, 3:15). ஒருவேளை, இந்தப் பெண் தேவனுக்கு பயப்படுவதைக் காட்டிலும், தன் அழகை இழந்துவிடுவதிலும் அல்லது வயதாகிவிடுவதிலும் அதிக பயம் கொண்டிருந்திருக்கலாம்.
புத்திசாலித்தனமான பரிமாற்றம்:
அவருடைய அன்பினாலும், கிருபையினாலும் மனிதர்களுக்குக் கொடுக்கப்படுவதுதான் மிகப் பெரிய பரிசு. பாவிகளை தன் பிள்ளைகளாக்குவதை உலகில் உள்ள எதனோடும் ஒப்பிட முடியாது. கர்த்தராகிய இயேசு இரண்டு உவமைகளை போதித்தார், இரண்டு சந்தர்ப்பங்களிலும், அவர்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பொக்கிஷத்தையும் பெரும் மதிப்புள்ள முத்துவையும் பெறுவதற்காக அனைத்தையும் விற்றார்கள் (மத்தேயு 13:44-46). அந்தப் பெண் தன் சொத்துக்களையோ அல்லது தன்னிடம் உள்ள அனைத்தையும் அழிந்துபோகக்கூடிய, தற்காலிகமான காரியத்திற்காக விட்டுவிடத் தயாராக இருந்தாள். வாணலியில் இருந்து அக்கினி கந்தகத்தில் குதிப்பது போன்றது.
நித்திய கண்ணோட்டம்:
(மத்தேயு 16:26) சொல்வது போல், மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயப் படுத்தினாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? ஆம், உலகில் பல விஷயங்கள் அபிமானமாகவும், போற்றத்தக்கதாகவும், லாபகரமானதாகவும் தெரிகிறது உண்மைதான். அதில் இந்த சொத்துக்கள், அறிவு, திறமைகள் மற்றும் அழகு கூட அவற்றில் சில. இவை அனைத்தையும் அடைந்த பிறகும், ஒரு மனிதன் அவற்றை உலகில் விட்டுவிட்டு நித்தியத்தை எதிர்கொள்ள வேண்டும். இந்த பெண்ணின் லாபம் ஒரு அழகு, ஒருவேளை அவள் அதைப் பெற்றாள். ஆனால் இரட்சகராகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் தேவனுடன் ஒப்புரவாகி அவள் ஜீவனைப் பெற்றாளா?
என் பாவத்தையும், துக்கத்தையும், அவமானத்தையும் கர்த்தராகிய இயேசுவுக்குள் நித்திய ஜீவனுக்காக பரிமாற்றிக் கொண்டேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்