இன்று கால்களைக் கழுவுதல், ஒரு அரசியல் பகட்டு வித்தை போலத் தெரிகிறது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கால்களைக் கழுவுவதை ஆவிக்குரிய செயலாக அறிமுகப்படுத்தினார்.
சடங்கு சுத்திகரிப்பு:
கால் கழுவுதல் பண்டைய காலம் முதல் அறியப்பட்டிருந்தது. பக்தர்கள் மற்றும் பூசாரிகள் ஒரு புனித இடத்திற்குள் நுழைவதற்கு முன்பு கால்களைக் கழுவுதல் பல மதங்களால் நடைமுறைப்படுத்தப்பட்டது. பழைய ஏற்பாட்டில், ஆசாரியர்கள் சேவைக்காக தேவாலயத்திற்க்குள் செல்ல பாதங்களைக் கழுவுதல் கட்டாயமாக்கப்பட்டது (யாத்திராகமம் 30:17-21). சில மதங்களில், சீடர்கள் குருவின் பாதங்களைக் கழுவுவதன் மூலம், பயபக்தியையும், விசுவாசத்தையும், பணிவையும் வெளிப்படுத்தினார்கள்.
விருந்தோம்பல் கலாச்சாரம்
விருந்தினர்கள் எப்போதும் மரியாதையுடன் நடத்தப்பட்டனர். ஆபிரகாம் தெய்வீக விருந்தினர்கள் கால்களைக் கழுவினார் (ஆதியாகமம் 18:4) அவர் விருந்தோம்பலுக்கு முன்மாதிரியாகிறார்.
சுகாதாரம்
பணியாளர்கள் எஜமானர்களின் கால்களைக் கழுவ வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அடிமைகள் எஜமானர்களின் கால்களை மட்டுமல்ல, விருந்தினர்களின் கால்களையும் கழுவினார்கள். யூத கலாச்சாரத்தில் மனைவி தன் கணவனின் கால்களைக் கழுவ வேண்டும்.
ஆவிக்குரிய கோட்பாடுகள்
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இவை அனைத்தையும் தாண்டி தம் சீஷர்களுக்கு ஆவிக்குரியப் பாடங்களைக் கற்பித்தார்.
1) அடையாளம் காணுதல்:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தன்னை மனிதனோடு மனிதனாக அடையாளம் காட்டிக் கொண்டார், அதுவும் மிகவும் குறைத்து மதிப்பிடும் அடிமையின் ரூபம் எடுத்தார். வெறும் 'பெயரளவு செயல்பாடு' என்றல்ல, அல்லது 'குறியீடு' அல்ல, இதுவே வீழ்ந்து போன மனிதர்களின் உண்மையான அடையாளம்.
2) ஊழிய மனப்பான்மை:
'ஊழியம் செய்வது' மனிதர்களின் தலையாய கடமை அல்லது வாழ்வதற்கான நோக்கம் என கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நிரூபித்தார். தேவனை சேவிப்பது சக மனிதர்களுக்கு ஊழியம் செய்வதும் எல்லா சீஷர்களின் மிக முக்கிய பணி. 'ஊழியம் கொள்வதல்ல, ஊழியம் செய்வது' கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் குறிக்கோள் (மத்தேயு 20:28). ஆகவே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஒவ்வொரு சீஷர்களும் வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் அந்த மனப்பான்மையைக் கொண்டிருக்க வேண்டும்.
3) ஊழியத்தின் முன்னுதாரணம்:
"ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்" (யோவான் 13:14). ஆதிக்கம் செலுத்துவது, ஆணையிடுவது மற்றும் இயக்குவது என்பது உலகின் தலைமைத்துவ பாணி. ஊழியம் செய்வது, இரட்சிப்புக்கு உதவுவது மற்றும் நன்மைகளை பகிர்வது என்பது வேதாகமத்தின் படி வாழும் தலைவர்களின் வாழ்க்கை முறை.
4) அன்பு மற்றும் பணிவை செயல்படுத்து:
எல்லா மனித உறவுகளும் அன்பிலும் பணிவிலும் வேரூன்றி இருக்க வேண்டும் என்று தேவன் எதிர்பார்த்தார். ஒருவேளை அன்பும் மனத்தாழ்மையும் மனித உறவுகளுக்கு அடிப்படையாக அமையுமானால்; அனைத்து உறவுகளும் அதாவது கணவன், மனைவி; பெற்றோர் மற்றும் குழந்தைகள்; ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள்; மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள்; விற்பனையாளர் மற்றும் நுகர்வோர்; ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்; அரசாங்க அதிகாரிகள் மற்றும் மக்கள்; என அனைத்துமே பெரும் மாற்றத்திற்குள்ளாகுமே. மேலும் ஏற்றத்தாழ்வு விருப்பு வெறுப்பு, பொறாமை மற்றும் சுரண்டல் ஆகியவை அகன்று சமத்துவம் மற்றும் அன்பு என்பதாக இடமாற்றம் பெறுமே.
சவால்
கால்களைக் கழுவுதல் என்பது வருடாந்திர சடங்கு அல்லது பாரம்பரியமாக குறைக்கப்படக்கூடாது. மாறாக, அது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அனைத்து சீஷர்களின் கருத்தோட்டத்தையும் மனநிலையையும் மாற்ற வேண்டும்.
Rev. Dr. J. N. Manokaran