லேடி மக்பெத் என்பது ஷேக்ஸ்பியரின் கதாபாத்திரங்களில் வரும் மக்பெத்தின் மனைவி. லேடி மக்பெத் தானும் தனது கணவனும் சேர்ந்து செய்த குற்றங்கள் மற்றும் பதவிக்காக செய்த கொலையால் மனம் வெடிக்கிறாள்; நாட்கள் செல்லச் செல்ல தூக்கத்தில் நடப்பதுமாக இருக்கிறாள்; தனது கைகளில் இரத்தக் கறைகள் ஒட்டிக் கொண்டிருப்பதாக நினைத்து அதை கழுவ முயற்சிக்கிறாள். அதை கழுவ முடியாததால் விரக்தியடைகிறாள். ஆம், செய்த பாவத்தின் குற்ற உணர்வு அவள் மனதையும் இருதயத்தையும் கறைப்படுத்தியது.
யூத வழக்கத்தைப் பின்பற்றிய பொந்தியு பிலாத்துவை இவள் நமக்கு நினைவூட்டுகிறாள் அல்லவா. உபாகமம் 21 இஸ்ரவேல் ஜனங்களுக்கு சொல்வது என்னவென்றால் யாரென்றே தெரியாத நபர் ஒருவர் கொலைச் செய்யப்பட்டுக் கிடந்தால் அந்த இரத்தப்பழி இஸ்ரவேலின்மேல் சுமராது; ஏனெனில் தெரியாத நபர் மீது வழக்குத் தொடர முடியாது என்பதால் இரத்தக் குற்றத்திலிருந்து விடுவிக்கப்படலாம். பொந்தியு பிலாத்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை குற்றமற்றவர் என்று அறிவித்தாலும், சிலுவையில் அறையப்படுவதற்கு யூத மதத் தலைவர்களின் விருப்பத்திற்கு அவரை ஒப்படைத்தான். யூதர்களின் சடங்குகளைச் செய்வதன் மூலம் தான் குற்ற மனசாட்சியிலிருந்து தப்பிக்க முடியும் என்று அவன் நினைத்தான் (மத்தேயு 27:24).
பாவம்:
பிலாத்துவைப் போலவே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதற்கு முழு மனிதகுலமும் பொறுப்பு. பிலாத்து உட்பட அனைவரும் அவருடைய இரத்தத்தால் சுத்திகரிக்கப்பட வேண்டும். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கிறது என்று (1 யோவான் 1:7) அப்போஸ்தலனாகிய யோவான் உறுதிப்படுத்துகிறான்.
குற்றம்:
பிலாத்து அவரின் சத்தத்தைக் கேட்காமல் குற்றத்தை கழுவ முடியாது; ஆம் சத்தியவான் எவனும் அவரின் சத்தத்தைக் கேட்கிறான் (யோவான் 18:37). பிலாத்து, இஸ்ரவேல் தேசத்தைப் போலவே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சத்திய சத்தத்தைக் கேட்டபோதிலும், தன் இருதயத்தைக் கடினப்படுத்தினான் (சங்கீதம் 95:7-11). கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் மட்டுமே குற்ற மனசாட்சியை சுத்தப்படுத்த முடியும் (எபிரெயர் 9:14; 10:22).
நீதி:
பிலாத்து நீதி நியாயத்தை சொல்லும் இடத்தில் இருந்தான்; பொய்யான குற்றச்சாட்டுகள், பொறாமைகள், கும்பல்களின் வெறி ஆகியவை நீதிக்கான அடிப்படை அல்ல. ஒரு விவேகமான நிர்வாகியாக ஆண்டவர் இயேசு குற்றமற்றவர் என்று உறுதியாக நம்பினான் (லூக்கா 23:4; யோவான் 19:4). பிலாத்து கர்த்தராகிய இயேசுவை குற்றவாளி அல்ல என்று அறிவித்தான், ஆனால் மரண தண்டனையையும் அறிவித்தான். சொல்லப்போனால் அவன் நீதியையும் நியாயத்தையும் அகற்ற முயன்றான். தீர்க்கதரிசி ஆமோஸ் கூறியது போல்; அவன் நியாயத்தை எட்டியாக மாற்ற முயன்றான்; நீதியைக் கொன்றான் (ஆமோஸ் 5:7).
வீண் முயற்சிகள்:
லேடி மக்பெத் மற்றும் பிலாத்து போன்ற மக்கள் பல்வேறு வீணான வழிகளில் தங்கள் பாவங்களை கழுவுகிறார்கள்; வெறுமனே சரீரத்தை கழுவுதல், சுத்திகரிப்பிற்கான பொருட்கள், நறுமணங்களைப் பயன்படுத்துதல், புனித நீரில் கழுவுவது போன்ற சடங்காச்சாரியங்கள் ஆகியவை ஒரு நபரை பாவங்களிலிருந்து பரிசுத்தப்படுத்த முடியாது. அதுபோல, யாத்திரை, தவம், தர்மம், நன்மை செய்தல் ஆகியவை ஒரு மனிதனை நீதிமானாக மாற்ற முடியாது.
தேவஆட்டுக்குட்டியின் இரத்தத்தால் நான் கழுவப்பட்டேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்