ஜெர்மனியின் ஹேமலின் பலவண்ண குழலூதி பற்றி ஒரு புராணக்கதை உள்ளது. பிளேக் நோயை வரவழைத்த எலிகளால் அந்த நகரம் அலைக்கழிக்கப்பட்டது. அதனால் நகர்மன்றத் தலைவருடன் இணைந்து இதற்கு ஒரு தீர்வு காண விரும்பினர். பல வண்ண ஆடையுடன் ஒரு குழலூதி வந்து எலிகளை அகற்ற முன்வந்தார். 1000 வெள்ளி நாணயம் என்ற வாக்குறுதியுடன் ஒப்புக்கொள்ளப்பட்டது. குழலூதி தனது குழலை எடுத்து ஊத ஆரம்பித்ததும், ஊரில் இருக்கும் எலிகளை எல்லாம் அந்த இசை ஈர்த்தது, வேஸர் ஆற்றில் அவை மூழ்கின. நகர்மன்றத் தலைவர் வாக்குறுதியை கண்டு கொள்ளாமல் வெறும் 50 வெள்ளிப்பணம் மட்டுமே கொடுத்தார், மேலும் அவர் பணம் பறிக்க மட்டுமே எலிகளை அனுப்பினார் என்று குழலூதி மீது குற்றம் சாட்டப்பட்டது. கோபமடைந்த குழலூதி, பழிவாங்குவேன் என்று நகர மக்களை எச்சரித்தார். 26 ஜூன் 1284 அன்று, புனித யோவான் மற்றும் புனித பவுலின் நாளில், பெரியவர்கள் எல்லாம் திருச்சபையில் இருந்தனர். குழலூதி இசையை வாசித்ததும், 130 குழந்தைகள் ஈர்க்கப்பட்டனர், அவர்களெல்லாம் நகரத்தை விட்டு வெளியேறினர், அதன்பிறகு குழந்தைகளை பார்க்கவே இல்லை.
வஞ்சக தலைவர்கள்:
தலைமையும் ஊர் மக்களும் நன்றியுள்ளவர்களாக இருக்கவில்லை. வாதையின் பின்விளைவுகள் முடிந்ததை பார்வோன் கண்டபோது, அவன் தன் இருதயத்தைக் கடினப்படுத்திக்கொண்டு, தன் வாக்குறுதியிலிருந்து பின்வாங்கினான் (யாத்திராகமம் 8:15). வஞ்சனையல்ல நேர்மையே தேவனுக்குப் பிரியமானது. நீதி ஒரு தேசத்தை உயர்த்துகிறது. தெய்வீகத் தலைவர்களால் மட்டுமே ஒரு தேசத்தை மேன்மைப்படுத்த முடியும். ஆம், நல்ல குணம் நாட்டைப் பெருமைக்குரியதாக்கும். ஆனால் பாவமோ ஜனங்களை வெட்கப்பட வைக்கும் (நீதிமொழிகள் 14:34) என்பதை நினைவில் கொள்வோம்.
மதப் பெரியவர்கள்:
நகரவாசிகள் நேர்மையற்றவர்களாக இருந்தாலும், மதவாதிகளாக இருந்தனர். அவர்கள் அனைவரும் திருச்சபைக்குள்ளே பக்தியுள்ளவர்கள். ஆனால் அவர்கள் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள் என்று கர்த்தரால் கண்டனம் செய்யப்பட்ட பரிசேயர்களைப் போன்ற பாசாங்குக்காரர்கள் (மத்தேயு 23:27-28).
கைவிடப்பட்ட குழந்தைகள்:
குழந்தைகள் தங்களைத் தற்காத்துக் கொள்ள தங்கள் வீடுகளில் விடப்பட்டனர். குழந்தைகளை எகிப்தில் விட்டுவிட்டு ஆராதனைக்கு செல்ல மோசே மறுத்துவிட்டார் (யாத்திராகமம் 10:9-12). குடும்பத்தில் குழந்தைகளுக்கு தேவபக்தியைக் கற்பிப்பதும் பயிற்றுவிப்பதும் முதன்மையானது. ஆம், கர்த்தருக்கு பயப்படுவதே ஞானத்தின் ஆரம்பம் (நீதிமொழிகள் 1:7). குழந்தைகளை உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல் சிந்திக்க கற்றுக்கொடுப்பதும், உலக காரியங்களில் சிக்கி விடாமல் ஜாக்கிரதையாக இருப்பதும் மிக முக்கியம்.
கள்ள மேசியா:
பலவண்ண குழலூதி எலிகளின் தொல்லையில் இருந்து விடுதலை வழங்குவதாக உறுதியளித்தார், அவருக்கு வெகுமதி அல்லது கௌரவம் கிடைக்காதபோது, அவருக்குள் பிசாசின் தன்மைகளான மயக்குதல், கொலை செய்வது, திருடுவது மற்றும் அழிப்பவராக ஆனார் (யோவான் 10:10). பல கள்ளப் போதகர்களும், கள்ளத் தீர்க்கதரிசிகளும், கள்ள மேசியாக்களும் அவ்வப்போது தோன்றுகிறார்கள்; எச்சரிக்கையாயிருப்போம்.
இன்றைய காலத்தில் குழந்தைகளை மயக்கும் பலவண்ண குழலூதிகளிடமிருந்து அடுத்த தலைமுறையை நான் பாதுகாக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்