ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, தான் இந்த உலகத்தில் வந்த நோக்கம் என்ன, பிதாவின் சித்தம் என்ன என நன்கு அறிந்திருந்தார், ஆனாலும் அவர் ஆத்துமாவில் மிகுந்த வேதனை கொண்டார். அது அன்பின்மையோ அல்லது விருப்பமின்மையோ காரணமல்ல. பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமென்றால் தன்னையே பலியாக கொடுக்க வேண்டும் என்பதை கர்த்தராகிய ஆண்டவர் அறிந்திருந்தார். அதற்காக அவரை யாரேனும் வற்புறுத்தவோ அல்லது அச்சுறுத்தவோ அல்லது ஏமாற்றவோ இல்லை. கெத்செமனேயில் தனது ஜீவனைக் கொடுக்க அவர் விருப்பத்துடன், மகிழ்ச்சியுடன் தீர்மானித்தார்.
கோபாக்கினை பாத்திரம்
பரிசுத்த தேவன் மனந்திரும்பாத, கலகக்கார, நிரந்தரமாக பின்வாங்கும் பாவிகளிடம் கோபமாக இருக்கிறார். அவர் அவர்களை தண்டிக்கிறார். அப்படியிருந்தும், அவர்கள் மனந்திரும்பவில்லை என்றால் தேவன் அவர்களை நியாயந்தீர்க்கிறார். அதனை கூறும் விதமாக, தேவ கோபம் மற்றும் சாபங்கள் கொண்ட பாத்திரம் கர்த்தருடைய கையில் இருப்பதாக விவரிக்கப்படுகிறது (சங்கீதம் 75:8).
பாத்திரத்தை நீக்குதல்
இறையியலாளர் கிரேக் ஏ ப்ளேசிங் கெத்செமனேயில் ஆண்டவரின் ஜெபத்திற்கு ஒரு நுண்ணறிவு விளக்கம் அளிக்கிறார். கர்த்தராகிய இயேசு ஏசாயாவில் ஊழியக்காரராக சித்தரிக்கப்படுகிறார். இஸ்ரவேல் தேசத்தின் மீது தண்டனையாக உக்கிரத்தின் பாத்திரம் ஊற்றப்படுகிறது, அவர்கள் குடித்த பிறகு, பாத்திரம் நீக்கப்பட்டது. அவர்கள் தண்டனையை முழுமையாக அனுபவித்தப் பின்னர் தேவனின் ஆசீர்வாதத்தைப் பெற்றனர் (ஏசாயா 51:19-22) . ஆண்டவரின் ஜெபம், கோபத்தின் பாத்திரத்தை அருந்திய பிறகு, தேவன் இஸ்ரவேல் தேசத்திற்கு செய்தது போல் பாத்திரத்தை நீக்கி பிதாவோடு ஐக்கியத்தை அனுபவிக்க வேண்டும் என்பதை அர்த்தப்படுத்துகிறது.
இரத்த வியர்வை
லூக்கா ஒரு மருத்துவராக ஆண்டவரின் வியர்வை எவ்வாறு இரத்தமாக விழுந்தது என்பதை எழுதுகிறார். இந்த அரிய மருத்துவ நிலை தீவிர மன அழுத்தம், பதட்டம் காரணமாக ஏற்படுகிறது. நுண்குழாய்கள் சிதைந்து இரத்தம் வியர்வை சுரப்பிகளில் நுழைகிறது. இது உட்புற இரத்தப்போக்கு மூலம் மரணத்தை ஏற்படுத்தும். ஆகையால் பிதாவிடம் இந்த பாத்திரத்தை அகற்றுமாறு கேட்டார், அவர் தோட்டத்தில் மரிக்க விரும்பவில்லை, ஆனால் கல்வாரி சிலுவையில் மரணத்தை தழுவினார். எனவே, தேவ தூதர்கள் ஊழியம் செய்ய வந்தார்கள், அவரைப் பலப்படுத்தினார்கள் (லூக்கா 22:43-44).
இரண்டாம் ஆதாம்
ஏதேன் தோட்டத்தில் முதல் ஆதாம் பாவம், சுயம், உலகம் மற்றும் சாத்தானைத் தேர்ந்தெடுத்து மனிதகுலத்தை பாவத்திலும் மரணத்திலும் ஆழ்த்தினார். கெத்செமனே தோட்டத்தில் இரண்டாவது ஆதாம் கீழ்ப்படிதல், மரணம் மற்றும் பலி ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து, சோதனை, பாவம் மற்றும் சாத்தானை தோற்கடித்து, மனிதகுலத்திற்கு மீட்பைக் கொண்டுவந்தார்.
மீட்பையும் வெற்றியையும் தந்த ஆண்டவரின் வேதனை எனக்குப் புரிகிறதா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்