விஐபி (மிக முக்கியமான நபர்) கலாச்சாரம் இந்தியா உட்பட பல நாடுகளில் நடைமுறையில் உள்ளது. ஒரு விஐபி தனது சுய-முக்கியத்துவத்தையும் மற்றவர்களை விட மேன்மையையும் கருதுகிறார், ஆகையால் அவருக்கு முதன்மையும் முன்னுரிமையையும் கிடைக்க விரும்புகிறார். விஐபி ஒரு சாலையை கடக்கிறார் என்றால் பொதுவான வழிகள் எல்லாம் அடைக்கப்பட்டு போக்குவரத்து ஸ்தம்பித்து விடுகிறது, மாணவர்கள் தேர்வுகளைத் தவற விடும் நிலை, இளைஞர்கள் வேலைக்கான நேர்க்காணலுக்கு சரியான நேரத்திற்கு செல்ல முடியாத நிலை, அது மாத்திரமல்ல நோயாளிகள் ஆம்புலன்ஸில் இறக்கும் சூழலும் ஏற்படுகிறது. விஐபிகளைப் பொறுத்தவரை, சுற்றி இருக்கும் மனிதர்கள் குறித்து கவலையே கிடையாது, மற்றவர்கள் பற்றி ஒரு அலட்சியப்போக்கு.
அதோனியா மற்றும் அப்சலோம்:
தாவீது ராஜாவின் இந்த இரண்டு மகன்களும் தங்களை விஐபிகள் என்று நினைத்தார்கள். "அதோனியா என்பவன்; நான் ராஜா ஆவேன் என்று சொல்லி, தன்னைத்தான் உயர்த்தி, தனக்கு இரதங்களையும் குதிரை வீரரையும், தனக்குமுன் ஓடும் ஐம்பது காலாட்களையும் சம்பாதித்தான்" (1 இராஜாக்கள் 1:5). அநேகமாக அதோனியா தன் சகோதரன் அப்சலோமை போல செய்திருக்கலாம். "அப்சலோம் இரதங்களையும் குதிரைகளையும், தனக்கு முன் ஓட ஐம்பது சேவகரையும் சம்பாதித்தான்" (2 சாமுவேல் 15:1). ஓட்டப்பந்தய வீரர்கள் உண்மையுள்ள வீரர்களாக நியமிக்கப்பட்டனர், மெய்க்காப்பாளர் பிரிவின் ஒரு பகுதியாக இருக்கலாம். எனினும் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மார்க்கெட்டிங் உத்தி:
அதோனியாவும் அப்சலோமும் தங்களை ராஜாவாகவோ அல்லது வாரிசாகவோ காட்ட விரும்பினர். அதற்காக, மக்களைக் கவர ஒரு அரசனின் பாசாங்குகள் அல்லது பாவனைகளைப் பயன்படுத்தினர். அதன் மூலம் அவர்கள் அரியணைக்கு உரிமை கோரினர். அவர்களுக்கு முன் ஓடிய வீரர்கள் வாரிசுப் போரைச் செய்ய அவர்களின் தனிப்பட்ட போராளிகள்.
தன்னை உயர்த்திக் கொண்டான்:
அதோனியா தன்னை உயர்த்திக் கொண்டான், அது பயனற்றது. உடல் ரீதியாக, எந்தவொரு நபரும் தன்னைத்தானே உயர்த்திக் கொள்ள முடியாது. மேன்மை அல்லது பதவி உயர்வு என்பது கிழக்கிலிருந்தோ மேற்கிலிருந்தோ அல்லது தெற்கிலிருந்தோ அல்ல, மாறாக தேவனிடமிருந்து வருகிறது. "கிழக்கிலும் மேற்கிலும் வனாந்தரதிசையிலுமிருந்து ஜெயம் வராது. தேவனே நியாயாதிபதி; ஒருவனைத் தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறார்" (சங்கீதம் 75:6-7). அதோனியா தனது நேர்மையான முயற்சிகளால் ராஜாவாக பதவி உயர்வு பெறலாம் என்று நினைத்தான், அதெல்லாம் வெறும் வித்தைகளே.
வீண் பெருமை:
வீண்பெருமை என்பது நன்மையின் நற்பண்புகளை அல்லது சாதனைகளை மிகுந்த ஆரவாரத்துடன் காட்டுவதாகும். வீண்பெருமைக்கு எதிராக வேதாகமம் எச்சரிக்கிறது, ஏனெனில் அது பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்துகிறது: உறவுகளை உடைக்கிறது. இது மற்றவர்களை பொறாமை கொள்ள தூண்டுகிறது. "வீண்புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர் பொறாமைகொள்ளாமலும் இருக்கக்கடவோம்" (கலாத்தியர் 5:26).
வீண் பெருமை மற்றும் புகழ்:
மக்களின் நற்பெயர் மற்றவர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் கருத்துக்களால் கட்டமைக்கப்படுகிறது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய, மக்கள் முகமூடி அணிந்துள்ளனர். அத்தகைய நிகழ்வு அல்லது முகமூடியை உருவாக்க மற்றும் பராமரிக்க, முழு நேரமும் செலவழிகின்றனர். மையமோ உள்ளடக்கமோ உருவாக்கப்படவில்லை, வெளிப்புற தொகுப்பு மட்டுமே.
மிகைப்படுத்தல்:
அடக்கமான ஆவிக்குரிய சாதனைகள் அல்லது அனுபவங்கள் விசுவாசிகளால் உயர்ந்த சாதனையாக விளம்பரப்படுத்தப்படும் போது, அது வீண் பெருமை ஆகும்.
நான் மிகைப்படுத்தி, முகமூடி அணிந்து, என்னையே பெருமைப்படுத்திக் கொள்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்