திட்டமிட தவறுகிறவர்கள், தோல்வியடைய ஆயத்தமாகிறார்கள். அதாவது சரியான ஆயத்தமின்மை தோல்வியில் அல்லது முட்டாள்தனத்தில் முடிவடையும். ஐந்து முட்டாள் கன்னிகள் புத்திசாலித்தனமாகவும், போதுமானதாகவும், திறம்படவும் திட்டமிடாததால் தோல்வியடைந்தனர். விளக்குக்கு கூடுதல் எண்ணெய் தேவை என்பது அவர்களுக்குத் தெரியும், அது கிடைக்கும் இடத்தில், வாங்குவதற்கு ஏதுவான சூழ்நிலைகள் இருந்தும், வாங்காமல் விட்டனர் (மத்தேயு 25:1-13).
சாதாரணமானது தீவிரமானது அல்ல:
மரியாதைக்குரிய விருந்தினராகவும், மணமகனை வரவேற்கும் குழுவில் ஒருவராகவும் இருப்பது என்பது ஒரு சிறப்பு பாக்கியம். முட்டாள் கன்னிகள் இதை ஒரு அற்புதமான பொறுப்பாக கருதவில்லை, ஆனால் ஒரு சாதாரண பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக கருதினர். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்கான கிரயத்தைப் பலர் எண்ணுவதில்லை (லூக்கா 14:25-33). அப்படி சர்வசாதாரணமாக எடுத்துக் கொள்பவர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவால் நிராகரிக்கப்பட்டனர் (லூக்கா 9:57-62).
சேவைகளைப் பெறுதல் (அயலாக்கம்):
ஒருவேளை, அவர்கள் எண்ணெயை வெளிப்புற சப்ளையரிடமிருந்து (அவுட்சோர்சிங்) பெற்றுக் கொள்ளலாம் என்ற மனநிலையில் இருந்திருக்கலாம். கடன் வாங்கவோ, திருடவோ, பிச்சை எடுக்கவோ முடியாது என்பதை அவர்கள் உணரவில்லை. இது சம்பாதிக்கப்பட வேண்டும் அல்லது கொள்முதல் செய்ய வேண்டும். ஒவ்வொரு நபரும் தனிப்பட்ட முறையில் ஆயத்தம் செய்ய வேண்டுமேயன்றி, மற்றவர்களைச் சார்ந்திருக்க முடியாது. ஒரு நபர் பெற்றோர் அல்லது உறவினர்கள் அல்லது நண்பர்கள் அல்லது துணையிடம் இருந்து 'விசுவாசத்தை' கடன் வாங்கி இரட்சிக்கப்பட முடியாதே. தேவனுடைய வார்த்தையைப் படிப்பதும், தியானிப்பதும் என ஆவிக்குரிய உணவை சீஷர்கள் தானே எடுத்துக் கொள்ள வேண்டும், அதையும் அவுட்சோர்ஸ் செய்ய முடியாதே. ஆவிக்குரிய வாழ்க்கைக்கு அவரவரே பொறுப்பு. சாக்குபோக்குக்கோ அல்லது மற்றவர்களை குற்றப்படுத்துவதற்கோ அங்கு இடமே இல்லை.
நிறைய நேரம்:
மாப்பிள்ளை உடனே வருவார் என்று முட்டாள் கன்னிகள் நினைத்தார்கள். அப்படி இருந்திருந்தால், கொண்டாட்டத்திற்கு உள்ளே இருந்திருப்பார்கள். ஆனால், மணமகன் வருவதில் தாமதம் ஏற்பட்டது. திட்டமிடலில், முட்டாள் கன்னிகள் தாமதத்தின் சாத்தியத்தை கருத்தில் கொள்ளவில்லை. அதாவது "தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்" (2 பேதுரு 3:9) என்பதை நாமும் நினைவில் கொள்ள வேண்டும்.
கடைசி நிமிட நெரிசல்:
சிலருக்கு தள்ளிப்போடும் பழக்கம் இருக்கும். அவர்கள் விரும்பத்தகாத அல்லது கடினமான பணிகளை எதிர்காலத்திற்குத் தள்ளுவார்கள். இதனால், அவசர அவசரமாக கடைசி நேரத்தில் பணிகளை முடிக்கின்றனர். அதற்கு தங்களுக்கு சாதகமாக அவர்கள் சிலுவையில் அறையப்பட்ட இரட்சகரின் வலது பக்கத்தில் இருந்த திருடனைச் சுட்டிக்காட்டுகிறார்கள், அவன் கடைசி நிமிடத்தில் பரதீசுக்குள் நுழைந்தானே (லூக்கா 23:43) என்கிறார்கள்.
குருட்டாம்போக்கு:
பிரச்சனைகள் தாங்களாகவே தீர்ந்துவிடும் அல்லது கடைசி நிமிடத்தில் எல்லாம் சரியாகிவிடும் என்று சிலர் கண்மூடித்தனமாக நம்புகிறார்கள்.
கர்த்தராகிய ஆண்டவரை சந்திக்க நான் எப்போதும் ஆயத்தமாக இருக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்