ஒருவர் இப்படியாக கூறினார்; "சுவாரஸ்யமற்ற பாடம் என்று எதுவும் இல்லை, சுவாரஸ்யமாக கற்றுக் கொடுக்காத ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர்". சில ஆசிரியர்கள் தங்கள் புத்திசாலித்தனமான பேச்சினால் அனைத்து மாணவர்களுக்கும் எளிதாக புரிய வைக்க முடியும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வேதபாரகர்களைப் போலல்லாமல், அவர் அதிகாரத்துடன் போதித்ததால் அவர் சொல்வதைக் கேட்டவர்கள் ஆச்சரியப்பட்டார்கள் (மத்தேயு 7:28-29). இன்றும் நல்ல வேதாகம போதகர்கள் அரிதாகவே இருக்கிறார்கள். சத்தியத்தை சத்தியமாக கற்பிக்க வேண்டும் என்ற உறுதியுடனும் இருப்பவர்கள் மக்களை ஆச்சரியப்படுத்தவோ அல்லது ஈர்க்கவோ செய்யவில்லை என்பதே உண்மை.
உற்சாகம்:
ஒரு ஆசிரியர் பாடத்தில் நல்ல ஆவலோடு இருக்கும்போது மட்டுமே, அவர் சிறப்பாக கற்றுக் கொடுக்கிறார். ஆர்வமேயில்லாத ஆசிரியர் சலிப்பாக காணப்படுவார். போதகர்கள் எவ்வித மகிழ்ச்சியின்றி அல்லது ஆர்வமேயில்லாமல் பரலோகத்தைப் பற்றி ஏனோதானோவென்று பேசினால், மக்கள் சலிப்படைவார்கள். உண்மையில், சலிப்படைந்த ஆசிரியர்கள் பாடத்தை சலிப்படையச் செய்கிறார்கள், அதே போல் கேட்பவர்களுக்கும் அப்படியே சலிப்பாகின்றது. அநேக நேரங்களில் போதகர்கள் பிரசிங்கிக்கும்போது விசுவாசிகள் தூங்குவதைக் காணலாம்; ஏனென்றால் பிரசங்கங்கள் கேட்பதற்கு ஆர்வமாக இல்லை.
எளிய மொழி:
எல்லா மக்களுக்கும் புரியும் எளிய மொழியான அராமிக் மொழியை தேவன் பயன்படுத்தினார். அவர் அதிகார மொழியான கிரேக்கத்தையோ அல்லது சடங்காச்சார மொழியான எபிரேயத்தையோ பயன்படுத்தவில்லை. அவர் கூறிய உவமைகள், நிஜ வாழ்க்கை சூழல் அமைப்போடு இருந்ததால் மக்கள் ஆர்வத்துடன் கேட்க உதவியது.
புரிந்துகொள்ளுதல்:
ஒரு ஆசிரியர் பாடம் அல்லது தலைப்பை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் அவர்களால் மக்களுக்கு தெளிவாக விளக்க முடியும். இல்லையென்றால், அது வெறும் இயந்திரம் போல அரைத்த மாவையே அரைப்பது போலாகி விடும் அல்லது சொன்னதையே சொல்லும் கிளிப்பிள்ளைப் போல் ஆகி விடும். இது போன்று சில போதகர்கள் மக்களுக்கு அர்த்தம் புரியும்படி தெளிவுபடுத்தவோ விளக்குவதோ இல்லை.
நோக்கம்:
ஒவ்வொரு நபரின் வாழ்க்கைக்கும் தேவன் ஒரு நோக்கமும் திட்டமும் வைத்திருக்கிறார். ஒரு நபர் தனது வாழ்க்கை நோக்கத்தைக் கண்டறிய கற்பித்தல் மிகவும் உதவுகிறது.
சம்பந்தமானது அல்லது பொருத்தமானது:
அன்றாட வாழ்க்கைக்கு பயன்படக்கூடிய அல்லது பயனுள்ள தலைப்புகள் மற்றும் பாடங்களை கற்பிப்பது கற்றலை உற்சாகப்படுத்துகிறது. பெரும்பாலான மக்களுக்குப் பொருந்தாத சில தலைப்புகள் உள்ளன. அவற்றை முதன்மைப்படுத்த முயற்சிப்பது மக்களைக் கவனிப்பதிலிருந்து விலக்கி விடும்.
பரிசுத்த ஆவி:
தேவ வார்த்தை கற்பிக்கப்படும்போது, தேவ ஆவியானவர் கேட்பவர்களின் இதயங்களிலும் மனதிலும் செயல்படுகிறார். ஒரு கல்லான இதயம் உடைகிறது, ஒரு கலகத்தனமான மனம் புதுப்பிக்கப்படுகிறது, இது மாற்றத்தில் விளைகிறது.
அனைவருக்குமானது:
வேதாகமம் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட அனைத்து மக்களுக்கும் ஆனது. குழந்தைகள் உட்காரும்போதும், நடக்கும்போதும், படுக்கும்போதும், எழும்போதும் அவர்களுக்கு பிரமாணம் கற்பிக்கப்பட வேண்டும் என்று தேவன் கட்டளையிட்டார் (உபாகமம் 6:6-8).
தேவ வார்த்தையை நான் சிரத்தையுடன் போதிக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்