வேதாகமத்தில் சோதனை என்பது குறிப்பிடப்பட்டுள்ளது மற்றும் அதற்கு மூன்று முக்கிய அர்த்தங்கள் மற்றும் பயன்பாடுகள் உள்ளன.
சாத்தானின் தூண்டுதல்:
சாத்தான் மக்களை அவர்களின் இச்சைகளை நிறைவேற்ற அல்லது தீய செயல்களைச் செய்ய ஆசைப்படுவதன் மூலம் தூண்டுகிறான்; இது தீமைக்கான ஒரு தூண்டுதல் (1 கொரிந்தியர் 7:5; யாக்கோபு 1:13-14). இது நம்பிக்கை மற்றும் துரோகம், நீதி அல்லது அநீதி; உண்மை மற்றும் பொய் ஆகியவற்றுக்கு இடையே தெரிவு செய்வதற்கான சவால். யோசேப்பை விபச்சாரத்தில் ஈடுபடச் செய்ய சாத்தான் போத்திபரின் மனைவியைப் பயன்படுத்தினான். யோசேப்பு விழிப்புடன் இருந்தான், அவன் மாம்சத்தின் அல்லது கண்களின் இச்சைக்கு இடம் கொடாமல்; பாவத்தில் சிக்காமல் அதை மேற்கொண்டான் (ஆதியாகமம் 39). இதற்கு நேர்மாறாக, தாவீதைச் சோதிக்க சாத்தான் பத்சேபாளைப் பயன்படுத்தினான். தாவீது விழிப்போடு இல்லாததால், தான் ஒரு ராஜா, எத்தனை பெண்களையும் மணக்க தகுதியானவன் என்ற பெருமை, விபச்சாரத்தின் பாவத்தில் விழுந்தான் (2 சாமுவேல் 11). ஆகானின் பேராசை அம்பலமானது, தேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பொருட்களை அவன் திருடினான் (யோசுவா 7:21).
மனிதர்கள் தேவனை சோதித்தல்:
தேவனுடைய பிள்ளைகள் தேவனை சோதனைக்கு உட்படுத்துகிறார்கள் (அப்போஸ்தலர் 5:9; 1 கொரிந்தியர் 10:9). அனனியாவும் சப்பீராளும் சேர்ந்து தேவனைச் சோதிக்க முடிவு செய்ததாக பேதுரு கூறினார். கர்த்தராகிய இயேசு சாத்தானிடம்; "உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக" (உபாகமம் 6:16; லூக்கா 4:12) என்றார். கர்த்தராகிய இயேசு எருசலேம் ஆலயத்தின் உச்சியில் இருந்து குதிக்க வேண்டும் என்று சாத்தான் விரும்பினான், சங்கீதங்களிலிருந்து மேற்கோள் காட்டி; "உம்மைக் காக்கும்படிக்குத் தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார் என்றும், உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்றும், எழுதியிருக்கிறது என்று சொன்னான்"
(லூக்கா 4:10-11; சங்கீதம் 91:11-12). இது விசுவாசக் கொள்கையை மீறுகிறது. எல்லா சூழ்நிலைகளிலும் தேவ நோக்கமும் விருப்பமும் இல்லாமல் தேவனுடைய வாக்குறுதிகளை செயல்படுத்த முடியாது. அதை நம்பிக்கை என்று சொல்ல முடியாது, வெறும் அனுமானம். தேவன் மனிதர்களை சோதிக்க முடியும்; அவர்கள் தேவனை சோதிக்க முடியாது. இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை பத்து முறை சோதித்ததால் பாவம் செய்தார்கள், அவர்கள் தண்டிக்கப்பட்டனர் (எண்ணாகமம் 14:20-23). வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை முழு தலைமுறையும் சொந்தமாக்க முடியவில்லை.
தேவன் பரிசுத்தவான்களை சோதித்தல்:
தேவன் தம் மக்களைச் சோதிக்கிறார், ஆனால் தீமையின் தூண்டுதலால் அல்ல. ஆபிரகாம் ஈசாக்கைப் பலியாகச் செலுத்தும்படி கட்டளையிடப்பட்டான், அவன் பலி கொடுக்க முற்பட்டபோது, கர்த்தர் அவனைத் தடுத்தார். அதற்கு பதிலாக பலியாக ஒரு ஆட்டுக்கடா கொடுக்கப்பட்டது (எபிரெயர் 11:17). போருக்குச் செல்லும் ஆட்களை தண்ணீரண்டை கொண்டு சென்று, அதில் சிறந்தவர்களைத் தேர்ந்தெடுக்க தேவன் கிதியோனுக்கு உதவினார் (நியாயாதிபதி: 7:6-7).
நான் பிசாசை எதிர்த்து நிற்கிறேனா அல்லது அவனுடைய விருப்பத்தைச் செய்ய அடிபணிகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்