கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கலிலேயா கடலின் கிழக்குப் பகுதியான தெக்கப்போலிக்குச் சென்றார்; அது புறஜாதியாரின் பகுதி.
பிசாசுகள் பிடித்த மனிதன்:
அவன் ஒரு அசாதாரண வாழ்க்கையை நடத்தினான், அதாவது அவன் ஆடை அணியவில்லை மற்றும் வீட்டில் தங்காமல் பிரேதக் கல்லறைகளிலே தங்கினான். அவனைக் கட்டிப் போட்டாலும் அமானுஷ்ய பலத்துடன், தன்னைக் கட்டப் பயன்படுத்திய சங்கிலிகளை உடைத்து வெளியேறினான். தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டும் அழுது கொண்டும் தன்னைத்தானே அழித்துக்கொண்டான் (லூக்கா 8:26-39).
ஆண்டவரை நாடுதல்:
அந்த மனிதன் தன்னை தானே விடுவிக்க முடியாததால் கர்த்தராகிய இயேசுவைத் தேடினான். பிசாசுகள் கர்த்தராகிய இயேசுவை அடையாளம் கண்டு, அவருடைய பரிசுத்த பிரசன்னத்தால் அவைகளைத் துன்புறுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டது. அவனிடம் பேய்களின் பெயரைக் கேட்டபோது லேகியோன் என பதிலளித்தான் (லேகியோன்’ என்பது அந்தக் காலத்தில் ரோமப் படையின் முக்கியப் பிரிவு, ஒரு ரோமானிய படையணிக்கு ஆறாயிரம் பேர் இருந்தனர்). இது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை பயமுறுத்தும் யுக்தியாக இருந்தது.
பன்றிகளுக்குள் புகுந்தன:
பேய்கள் பாதாளத்தில் அடைக்கப்படுவதை விரும்புவதில்லை (வெளிப்படுத்துதல் 9:11). ஆண்டவரின் அனுமதியின்றி பேய்கள் பன்றிகளைக் கூட துன்புறுத்த முடியாது. சாத்தான் ஒரு வக்கிரமானவன்; அவன் விலங்குகளிலும் துன்பத்தையும் மரணத்தையும் கண்டு மகிழ்வான். சாத்தான் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். அவன், இரண்டாயிரம் பன்றிகளைக் கொல்லவும் விரும்புகிறான் (யோவான் 10:10). பன்றிகளின் உரிமையாளருக்கு அது நஷ்டம். ஒரு மனிதன் காப்பாற்றப்பட்டதை (இரட்சிக்கப்பட்டதை) ஒப்பிடுகையில், அந்த செலவு ஒரு பொருட்டல்ல.
விடுதலை பெற்ற மனிதன்:
இதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் ஊரில் உள்ளவர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து, பிசாசு பிடித்த மனிதன் நிலையான மனதுடன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பாதத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள்.
கோரிக்கை ஏற்கப்பட்டது:
ஜனங்கள் ஆண்டவரை அந்த இடத்தை விட்டு வெளியேறும்படி கேட்டுக் கொண்டனர். பிசாசுகள் நீங்கிய சொஸ்தமான மனிதனை சந்தோஷமாய் ஏற்றுக் கொண்டனர்; ஆனால் வருத்தம் என்னவெனில், தங்கள் மத்தியில் ஜீவனுள்ள தேவன் இருப்பதை விரும்பவில்லை; ஆண்டவர் அங்கிருந்து வெளியேறினார்.
மற்றொரு கோரிக்கை நிராகரிக்கப்பட்டது:
குணமடைந்த மனிதன், ஒருவேளை மேலும் மேலும் பிசாசுகளின் தாக்குதல்கள் இருக்குமோ எனப் பயந்து, கர்த்தராகிய இயேசுவுடன் செல்ல அனுமதி கோரினான். ஆனால் ஆண்டவர் செய்த அற்புதத்தை அவன் அறிவிக்க தனது குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் திரும்பிச் செல்ல வேண்டும் என்று விரும்பினார். அங்கிருந்தவர்களால் அவரை துரத்த முடியவில்லை.
பிரசங்கியார்:
எந்தப் பயிற்சியும் இல்லாத அந்த மனிதன், கர்த்தரால் அறிவுறுத்தப்பட்டபடியே சென்று, தேவன் தனக்குச் செய்த பெரிய காரியங்களை தெக்கபோலிலும், தீரு மற்றும் சீதோன் பட்டணங்களிலும் பகிர்ந்துகொண்டான், அங்குள்ள விசுவாசிகள் பவுலை பின்னர் சந்தித்தனர் (அப்போஸ்தலர் 21:3-7).
தேவன் இல்லை என்று பதிலளிக்கும் போது நான் தேவ திட்டத்தை உணர்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்