மற்றவர்களை நம்புவது என்பது உண்மையில் கடினமான விஷயம் தான். ஒருவர் தினமும் காலையில் பல் துலக்கி விட்டு பற்பசை மூடியை மூடாமல் தனித்தனியாக வைத்து விட்டு போய் விடுவார். அவரது மனைவி அதை பார்க்கும் போதெல்லாம் கோபமடைந்து அவரைத் திட்டுவார். இப்படியாக நாட்களும் மாதங்களுமாக சில வருடங்கள் கடந்தது. ஒரு நாள், அந்த நபருக்கு மனமாற்றம் ஏற்பட்டது. மிகவும் கவனமாக அவர் ஒவ்வொரு நாளும் பற்பசை மூடியை சரியாக மூடி வைக்கத் தொடங்கினார். ஒரு வாரத்திற்குப் பிறகு, அவர் தனது மனைவியிடம் பெருமையுடன்; தான் சரியாக செய்வதை கவனித்தாயா என்று கேட்டார். அதற்கு அவரின் மனைவி; "ஆமாம், நான் உங்களிடம் கேட்க விரும்பினேன், ஏன் பல் துலக்குவதை நிறுத்திவிட்டீர்கள்?" என்றார். ஆம், இந்த மனைவியைப் போல தான்; கணவன் திருந்தினாலும் நம்ப முடியாத நிலை அல்லது எதிர்பார்க்காதது போல, நம்மிலும் பலர் மற்றவர்களை நம்புவதில்லை. அதுமாத்திரமல்ல, மற்ற நபர் எப்போதும் ஒரு தவறானவராகவும் அல்லது பாவியாகவும் அல்லது குற்றவாளியாகவும் கருதப்படுகிறார்.
தீவிரமான சவுல்?
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தமஸ்கு வீதியில் உபத்திரவப்படுத்திய சவுலை சந்தித்தார். பின்பு அவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தீவிர சீஷராக மாறினார். உண்மையில், அவர் தமஸ்குவில் புதிதாகக் கிடைத்த நம்பிக்கையைப் பற்றி தைரியமாகப் பிரசங்கித்தார், மேலும் தனது நண்பர்களால் மதில் வழியாய் இறங்கி தப்பிக்க வேண்டியிருந்தது (அப்போஸ்தலர் 9:23-25). அவர் சபையில் சேர எருசலேமுக்கு வந்தார். ஆனால் எருசலேம் சபையில் உள்ள ஜனங்கள் அவருக்கு பயந்து, அவர் கர்த்தருக்குள் மாற்றமடைந்ததை நம்பவில்லை (அப்போஸ்தலர் 9:26). எருசலேமில் இருந்த மக்கள் துன்புறுத்துகிற சவுலைப் பற்றி நன்கு அறிந்திருந்ததால், சீஷனாகிய பவுலை நம்பவில்லை.
தைரியமான பர்னபா:
இருப்பினும், பர்னபா வேறுபட்டவர், அவர் ஆண்டவரையும் நம்பினார், மக்களையும் நம்பினார். தைரியமாக, அவர் பவுலை அப்போஸ்தலர்களிடம் அழைத்துச் சென்றார் (அப்போஸ்தலர் 9:27). எருசலேம் சபையில் இருந்த மற்றவர்களைப் போலல்லாமல், பர்னபா பயப்படதவராக இருந்தார், அதுமாத்திரமல்ல தேவனுடைய ஆவியைப் பற்றிய பகுத்தறிவைக் கொண்டிருந்தார்.
தோல்வியுற்ற மிஷனரி:
ஒரு மிஷனரி பயணத்தின் மத்தியில், பம்பிலியாவிலிருந்து எருசலேமுக்குச் சென்றபோது, மிஷனரியின் சோதனைகளில் தோல்வியுற்ற யோவான் மாற்கையும் பர்னபாவையும் நம்பினார் (அப்போஸ்தலர் 13:13). அடுத்த பயணத்தில் யோவான் மாற்கை அழைத்துச் செல்லக்கூடாது என்பதில் பவுல் பிடிவாதமாக இருந்தார், ஆனால் யோவான் மாற்கை தேவனால் மாற்ற முடியும் என்று பர்னபா நம்பினார் (அப்போஸ்தலர் 15:36-41). மாற்றப்பட்ட மாற்கு பிற்காலங்களில் பவுலாலும் பாராட்டப்பட்டார் (பிலேமோன் 1:24; 2 தீமோத்தேயு 4:11).
மக்களை மாற்றத்திற்கு உட்படுத்தும் தேவனை நான் விசுவாசிக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்