இந்த உலகில், தேவனைப் பிரியப்படுத்துவதா அல்லது பிறரைப் பிரியப்படுத்துவதா என்பதைத் தேர்ந்தெடுப்பதில் தொடர்ந்து ஒரு பதற்றம் நிலவிக் கொண்டுதான் இருக்கின்றது. வேதாகமத்தில் உள்ள பலரும் கூட மற்றவர்களைப் பிரியப்படுத்தினார்கள், ஆம் தேவனைப் பிரியப்படுத்தத் தவறினார்கள். ஆதாமும் ஏவாளிடம் நல்ல தன்மையானவனாகவும், விரும்பத்தக்க வகையிலும் மற்றும் பிரியப்படுத்ததும்படியாகவும் நடக்க எண்ணினான்; அதனாலேயே தேவன் தடை செய்த பழத்தை ஏவாள் கொடுத்தவுடன் சாப்பிட்டான் (ஆதியாகமம் 3:6). சாலொமோன் பல அந்நியப் பெண்களை நேசித்தான்; அவர்களைப் பிரியப்படுத்துவதற்காக அவர்களுடைய தெய்வங்களுக்கு கோவில்களைக் கட்டினான் (1 இராஜாக்கள் 11:4). கூட்டத்தை மகிழ்விக்க கர்த்தராகிய இயேசுவை சிலுவையில் அறையுமாறு பிலாத்து ஒப்புக் கொடுத்தான் (மத்தேயு 27:17). சரியான போதனையைக் கற்பிக்காமல், மக்களின் ஆசைகளையும் விருப்பங்களையும் திருப்திப்படுத்தும் பிரசங்கிமார்கள் இருக்கிறார்கள். "சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்" (2 தீமோத்தேயு 4:3). இதற்கு மாறாக, சீஷர்கள் மகிழ்ச்சியுடன் தேவனைப் பிரியப்படுத்த (எண்ண) வேண்டும்.
1) விசுவாசம்:
ஒரு நபர் தேவன் மேல் விசுவாசமாயிருக்கிற போது அதை கடைபிடிக்கும் போது தேவன் மிகுந்த மகிழ்ச்சியடைகிறார் (எபிரெயர் 11:6). தேவனை விசுவாசிப்பது என்பது அவரின் அன்பு, கிருபை, நீதி, ஞானம் மற்றும் பிற பண்புகளை அறிவதாகும். கிறிஸ்தவ வாழ்க்கை விசுவாசத்தில் தொடங்கி விசுவாசத்துடன் தொடர்கிறது. "நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்" (2 கொரிந்தியர் 5:6) என்று பவுல் வலியுறுத்துகிறார்.
2) ஜீவ பலி:
விசுவாசிகள் தங்களை ஜீவ பலியாக ஒப்புக் கொடுக்க வேண்டுமென்று என்று தேவன் எதிர்பார்க்கிறார், இதுவே தேவனுக்கு செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை (ரோமர் 12:1). கர்த்தரை முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும் நேசிக்கும்போது அதன் பலனாக கீழ்ப்படிவோம், அவரைப் பிரியப்படுத்தவும் செய்கிறோம் (மத்தேயு 22:37-38).
3) நல்லது செய்தல்:
"அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம்பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்" (எபிரெயர் 13:16). நன்மை செய்வதும், அடிப்படை வசதிகள் கூட இல்லாத அல்லது சமூகத்தால் பின்தங்கியவர்களோடு நமக்குள்ளதை பகிர்ந்து கொள்வதும் தேவனுக்குப் பிரியமான பலிகளாகக் கருதப்படுகின்றன. கிருபையும் பெருந்தன்மையும் கிறிஸ்தவ நம்பிக்கையின் வெளிப்பாடு.
4) தேவ சித்தத்தை செய்தல்:
"நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்" (ரோமர் 12:2). தேவனுடைய சித்தத்தைப் பகுத்தறிவது என்பது நல் ஆவிக்குரிய பழக்க வழக்கமாகும், அது அவரையும், அவருடைய விருப்பங்களையும், அவருடைய வார்த்தையையும் அறிந்துகொள்வதன் அடிப்படையில் அமைகிறது.
5) ஆவி அல்லது மாம்சம்:
தேவ ஆவிக்கு உணர்திறன் மற்றும் கீழ்ப்படிதல் இல்லாதவர்கள், மாம்சத்தின்படி வாழ்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தேவனைப் பிரியப்படுத்த முடியாது (ரோமர் 8:8). சரீர ஆசைகள் அல்லது உணர்வுகளின் படி நடப்பவர்கள் தேவனைப் பிரியப்படுத்த முடியாது. மாறாக, சரீரம் ஒழுக்கமாகவும் கட்டுப்பாட்டிலும் இருக்க வேண்டும் (1 கொரிந்தியர் 9:27).
நான் தேவனைப் பிரியப்படுத்துகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்