"ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு" (பிரசங்கி 3:1) என்பதைக் குறித்து ஞானி கூறிவிட்டு இன்னும் பல சாதாரண செயல்களையும் அவர் பட்டியலிட்டுள்ளார். எவ்வாறாயினும், நம் வாழ்வின் மிக முக்கியமான தருணத்தை வாழ்க்கையை வரையறுக்கும் தருணம் என்று அழைக்கலாம். பலர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தனிப்பட்ட முறையில் பார்த்திருக்கிறார்கள் அல்லது அறிந்திருக்கிறார்கள் அல்லது அனுபவித்திருக்கிறார்கள். தமஸ்கு வீதியில் பவுலுக்கு இந்த வியத்தகு அனுபவம் ஏற்பட்டது (அப்போஸ்தலர் 9). துரதிர்ஷ்டவசமாக, பலர் அத்தகைய தருணங்களை இழந்துள்ளனர்.
1) ஏற்ற சமயம்:
பவுல் பேலிக்ஸ் மற்றும் அவனது மனைவி துருசில்லாளுக்கும் நீதியைக் குறித்தும், இச்சையடக்கத்தைக் குறித்தும் மற்றும் நியாயத்தீர்ப்பு பற்றியும் பேசியபோது. அவன் பயந்து போய், சமயமான நேரத்தில் கூப்பிடுகிறேன் என்று சொல்லி அனுப்பினான் (அப்போஸ்தலர் 24:24-27). அப்படி மனந்திரும்பி ஆண்டவரை ஏற்றுக்கொள்ளும் நேரம் அவனுக்கு வரவே இல்லை.
2) குறுகிய காலம்:
இரண்டாம் ஏரோது அகரிப்பா ராஜா யூத வேதாகமத்தை நன்கு அறிந்தவன். யூத வேதாகமத்தில் குறிப்பிடப்படும் மேசியா கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்று கிடைத்த கொஞ்ச நேரத்தில் பவுல் அவனுக்கு அற்புதமாக விளக்கினான். இருப்பினும், ராஜாவோ இவ்வளவு குறுகிய நேரத்தில் நம்ப மறுத்துவிட்டான். ஆனால் அவனது கவலை சத்தியத்தைப் பற்றியது அல்ல, ஆனால் நேரமே காரணி. ஒரு படித்த அறிவுஜீவி மற்றும் ரோமானிய அதிகாரி என்ற முறையில், ஒரு கைதியால் இவ்வளவு குறுகிய காலத்தில் நம்பப்படுவதைக் காணக்கூடாதே (அப்போஸ்தலர் 26:28). ஆக, அவனுடைய வாழ்நாளில் அதிகமான நேரம் என்பது வாய்க்கவில்லை.
3) நேரமில்லை:
பெரிய விருந்தின் உவமையை ஆண்டவர் கற்பித்தார். அரசர் விருந்தினர்களுக்கு அழைப்புகளை முன்னரே அனுப்பினார்; உணவு தயாரானதும் இரண்டாவது அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. அவர்கள் சாக்கு போக்குகள் சொல்லினர். முதலில் ஒருவன் வயலைப் (ரியல் எஸ்டேட்) பற்றியும்; வேறொருவன் மாடு பற்றியும் (BMW or SUV) மற்றும் மற்றொருவன் தனது விவாகம் (காதலர் தினம்) பற்றியும் பேசினார்கள் (லூக்கா 14:15-24). ஆக மொத்தம், அவர்களுக்கு நேரமில்லை, அவர்களுடைய இடங்கள் மற்றவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டன.
4) முன்னுரிமைக்கு நேரம் இல்லை:
புத்தியில்லாத கன்னிகைகள் ஞானமுள்ள கன்னிகைகளுடன், சரியான இடத்தில், சரியான நேரத்தில் ஆனால் எண்ணெய் பற்றாக்குறையோடு விளக்குகளுடன் இருந்தார்கள். இதற்கு தயாராவதற்கான முன்னுரிமை நேரம் அளித்து மணவாளனோடு செல்ல வேண்டுமே என்று இல்லாததினால் அதற்குள் செல்லும் தகுதியற்றவர்களானர்கள் (மத்தேயு 25:1-13).
5) சரியான நேரம்:
ஆண்டவரின் வலப்பக்கத்தில் தவமிருந்த திருடன் சரியான நேரத்தை அறிந்து, சரியான விசுவாசத்துடன் சரியான ஜெபத்தை கிசுகிசுத்து பரதீசுக்குச் சென்றான் (லூக்கா 23:43).
சரியான நேரத்தைப் பற்றிய ஆவிக்குரியப் பகுத்தறிவு என்னிடம் உள்ளதா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்