தேவ வார்த்தையை போதிப்பவர்களே ஜாக்கிரதை!

பவுலின் கூற்றுப்படி கிறிஸ்தவ தலைமைக்கான தகுதிகளில் ஒன்று கற்பிக்கும் திறன் (2 தீமோத்தேயு 2:24).  எனினும், போதகர்கள் அதிக கண்டிப்புடன் நியாயந் தீர்க்கப்படுவார்கள் என்பதை யாக்கோபு நினைவுபடுத்துகிறார். "என் சகோதரரே, அதிக ஆக்கினையை அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக" (யாக்கோபு 3:1). கர்த்தராகிய இயேசு, ஜனங்கள் பரிசேயர்கள் சொல்வதையோ அல்லது கற்பிப்பதையோ பின்பற்றுகிறார்கள், ஆனால் அவர்கள் செயல்படுத்துவதையோ அல்லது நடக்கையையோ அல்லது மாதிரியையோ பின்பற்ற வேண்டாம் என்று எச்சரித்தார் (மத்தேயு 23:2).  கர்த்தராகிய இயேசு செய்ததைப் பற்றியும் அல்லது விளக்கி காண்பித்ததைப் பற்றியும், பின்னர் கற்பித்ததைப் பற்றியும் லூக்கா எழுதுகிறார் (அப்போஸ்தலர் 1:1-2).  பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தேவனுடைய வார்த்தையைக் கற்பிக்க எதிர்பார்க்கப்படுகிறார்கள்.  எனவே அனைத்து கிறிஸ்தவர்களும் அவருடைய வார்த்தையை கற்பிக்கவும் விளக்கிக் காண்பிக்கவும் எதிர்பார்க்கப்படுகிறார்கள்.

1) சிரத்தையுடன் கற்பியுங்கள்:
சிரத்தையுடன் என்பது தெளிவுடனும், தொடர்பான சரியான வார்த்தைகளுடனும் மற்றும் நடைமுறை சாத்தியங்களுடனும் கூடிய சிறந்த கற்பித்தல் மிக அவசியம்.

2) சத்தியத்தைக் கற்பியுங்கள்:
சத்தியத்தைப் பிரசங்கிக்கவும், பிரகடனப்படுத்தவும், பிரச்சாரம் செய்யவும் தேவன் தம் சீஷர்களை அழைத்துள்ளார். மக்கள் கேட்க ஆசைப்படுவதைக் கற்பிக்காதீர்கள், ஆனால் அவர்கள் என்ன கேட்க வேண்டுமோ அல்லது எதை பின்பற்ற வேண்டுமோ அதை கற்பியுங்கள் என்கிறார் பவுல் (2 தீமோத்தேயு 4:3). 

3) ஆர்வமுடன் கற்பியுங்கள்:
"ஆர்வமில்லாத பாடம் என்பது இல்லை;  ஆர்வமற்ற ஆசிரியர்கள் மட்டுமே" என்பதாக ஒரு பழமொழி உள்ளது. தேவ வார்த்தையை கற்பிக்கும் ஆசிரியர்கள்/ போதகர்கள் ஆர்வத்துடனும்,  உற்சாகத்துடனும் மற்றும் கலைநயத்துடனும் கற்பிக்க வேண்டும்

4) அன்புடன் கற்பியுங்கள்:
தேவ வார்த்தை கூர்மையானது மற்றும் மக்களை காயப்படுத்தக்கூடியது.  இருப்பினும், வேதாகம ஆசிரியர்கள் அதை அன்புடன் கற்பிக்க வேண்டும் (எபேசியர் 4:15). 

5) பணிவுடன் கற்பியுங்கள்:
இறையாண்மையுள்ள தேவன் சத்தியத்தைப் பறைசாற்றுவதற்கான ஆணையை நமக்கு அளித்திருந்தாலும், சத்தியத்தைப் பற்றிய தெளிவான நம்பிக்கையுடன் இருக்க வேண்டும், இறுமாப்புள்ளவர்களாக இருந்து விடாமல் போதகர்கள் அல்லது கற்றுக் கொடுக்கும் சீஷர்கள் பணிவுடன் இருக்க வேண்டும் (1 தீமோத்தேயு 3:6).

6) ஞானமாக கற்பியுங்கள்:
தேவனுடைய வார்த்தையிலிருந்து வரும் ஞானம் கடிந்து கொள்ளுதலுக்கும், எச்சரிக்கவும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் மற்றும் சீர்திருத்தலுக்கும் முன்வைக்கப்பட வேண்டும் (2 தீமோத்தேயு 3:14-15).  

7) ஜீவனுக்காக கற்பியுங்கள்:
என்ன கற்பிக்கிறோமோ அதன்படி வாழவும் வேண்டும் (ரோமர் 2:21-23, 1 தீமோத்தேயு 4:12). “கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான்” (எஸ்றா 7:10). ஆம், எஸ்றா சரியான வரிசையைக் கொண்டிருந்தான்; ஆராய்ந்தான், அதை வாழ்க்கையில் நடப்பித்தான், பிறகு உபதேசித்தான்.

இன்று வார்த்தையை சரியாக போதிப்பவர்கள் குறைவாக இருப்பதால், வார்த்தைக்கும் பஞ்சம் (ஆமோஸ் 8:12). மேலும், பவுல் முன்னறிவித்தபடி தேவனுடைய மக்கள் சரியான போதனையை பொறுத்துக்கொள்வதில்லை. "சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்" (2 தீமோத்தேயு 4:3). 

நான் தேவ வார்த்தையை ஒழுங்கும் கிரமமுமாக கற்பிக்கும் நபரா மற்றும் கற்பிப்பதை சரியானபடி கவனமாக கேட்கும் நபரா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download