காயீனின் வாழ்க்கை தேவனுக்கு வெறுக்கத்தக்கதாக இருந்தது, ஏனெனில் அவன் தனது சொந்த வழியைத் தேர்ந்தெடுத்தான் (யூதா 1:11; ஆதியாகமம் 4).
1) அவநம்பிக்கையின் வழி:
ஆபேல் விசுவாசத்தின் பாதையைத் தேர்ந்தெடுக்கும்போது, காயீன் நம்பிக்கையின்மையைத் தேர்ந்தெடுக்கிறான். தனது இரத்தத்தைச் சிந்துவதன் மூலம் உலகத்தின் பாவத்தை நீக்கும் தேவ ஆட்டுக்குட்டியைச் சுட்டிக்காட்டும் விதமாக ஆட்டுக்குட்டியை பலி செலுத்துவதில் ஆபேல் நம்பிக்கை கொண்டிருந்தான். காயீன் தேவனைச் சார்ந்தும் மற்றும் தாழ்மையுடனும் இருப்பதை விட்டு விட்டு தன்னைச் தான் சார்ந்து இருப்பவனாகவும், பெருமையுளளவனாகவும் இருந்தான்.
2) பொறாமையின் வழி:
காயீன் தன் சகோதரன் மீது பொறாமை கொண்டான். ஆபேலுக்கு நல்ல குணங்கள் இருந்தன. ஆபேலைப் போல இருக்க பாடுபடுவதற்குப் பதிலாக, ஆபேலின் ஆசீர்வாதத்தையும் தானே பெற்றுக் கொள்ளும் கெட்ட எண்ணம் கொண்டவனாக அவனை இல்லாமல் பண்ண (அழிக்க) நினைத்தான். ஆம், பொறாமை ஒரு எலும்புருக்கி (நீதிமொழிகள் 14:30)
3) எதிர்மறை வழி:
காயீன் எதிர்மறை வாழ்க்கையை வாழத் தேர்ந்தெடுத்தான். எந்தவித வருத்தமோ மனந்திரும்புதலோ இல்லை, மாறாக மீறுதல் அல்லவா காணப்பட்டது. மனந்திரும்பி தேவனோடு ஒப்புரவாகுதலை விடுத்து தேவனோடு யுத்தம் (முரட்டாட்டம்) செய்ய விரும்பினான். வாழ்க்கையைப் பற்றிய அவனது எதிர்மறையான அணுகுமுறை, அவனை துன்மார்க்கத்திற்கும் கொலைக்கும் தான் அழைத்துச் சென்றது.
4) கலக வழி:
காயீன் தண்டனைக்கான ஒரு கருவியாக வன்முறையைத் தேர்ந்தெடுத்தான். ஆம், அவன் தனது சகோதரனாகிய ஆபேல் நன்மை செய்பவனாகவும் நல்லவனாக வாழ்வதற்காகவும் தண்டிக்க விரும்பினான். பூமியில் ஒரு சிறந்தவன் வாழ்வதை காயீனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
5) பிடிவாதத்தின் வழி:
தேவன் எச்சரித்த போதிலும், அவன் ஆபேலைக் கொன்றான். தேவன் காயீனை எதிர்கொண்டபோது, அவன் தன் சகோதரன் எங்கே இருக்கிறான் என்று தனக்குத் தெரியாது என்று பொய் சொன்னான், அவன் தன் சகோதரனின் காவலாளியா என்று எதிர்கேள்வி வேறு கேட்டான். தேவன், ஆபேல் மற்றும் தார்மீக மதிப்பீடுகள் மீதான காயீனின் அணுகுமுறை கலகத்திற்குரியதாகவும் மற்றும் முரட்டு பிடிவாதமாகவும் இருந்தது.
6) மனந்திருந்தாத வழி:
காயீனும் மனந்திரும்பவில்லை. அவன் மனந்திரும்பும் திறனை இழந்தான். இதற்குக் காரணம் அவனுடைய இருதயம் கடினப்பட்டு, பரிசுத்த ஆவியானவரை உணராததுதான். காயீன் கெட்ட குமாரன் உவமையில் உள்ள மூத்த மகனைப் போல வீட்டிற்குள் இருக்காமல் வெளியே இருந்தான்.
7) மரண வழி:
அவன் தேர்ந்தெடுத்த வழி தேவனிடமிருந்து நித்திய பிரிவினையில் முடிந்தது, அதாவது இரண்டாவது மரணம். "மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்" (நீதிமொழிகள் 14:12). காயீன் அத்தகைய ஒரு வழியைத் தேர்ந்தெடுத்தான், அது அவனைப் பேரழிவிற்கு அழைத்துச் சென்றது.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிற்குள்ளான வாழ்க்கை முறையை நான் தேர்ந்தெடுத்திருக்கிறேனா?
Author: Rev. Dr. J. N. Manokaran