அலிகார் நகரில், ஒரு திருடன் கோயிலுக்குள் நுழைந்தான். அங்குள்ள சிலைகளை பக்தியுடன் வணங்குகிறான். பின்னர் கோவிலில் இருந்த பித்தளை மணியை திருடிவிட்டு தப்பியோடினான். பதிவான சிசிடிவி முழு திருட்டுச் செயலையும் காட்டுகிறது (டைம்ஸ் ஆஃப் இந்தியா, 9 ஜூன் 2023).
மதமா அல்லது நேர்மையா:
திருடன் ஒரு மதவாதியாகத் தெரிகிறது, ஆனால் ஒரு நேர்மையான பக்தன் அல்ல. கடவுள் பயம், வழிபாடு, பிரார்த்தனை போன்ற மதத்தின் வெளிப்புற வடிவத்தை அவன் ஏற்றுக்கொண்டான். இருப்பினும், அவனது மதம் அவனை நீதியான செயல்களுக்கு நேராக நடத்திச் செல்லவில்லை. உண்மை, தெய்வீகம் மற்றும் நீதி பற்றிய அவனது புரிதல் தெளிவற்றதாகவும் குழப்பமானதாகவும் இருந்தது.
வெற்றிக்கான பிரார்த்தனை:
அவனது உலகக் கண்ணோட்டத்தின்படி, கடவுள் அவனுக்கு வெற்றியைக் கொடுக்க வேண்டும், அதாவது அவன் என்ன செய்தாலும் சரி, அது நல்லதோ அல்லது கெட்டதோ பிரார்த்தனையை அருள வேண்டும். அவனது கவனம் முழுமையும் வெற்றி பற்றினதே, அந்த வெற்றியை எப்படி பெறுகிறான் என்பது முக்கியமற்றது. அவனைப் பொறுத்தவரை, முடிவு முறையற்ற வழிமுறைகளை நியாயப்படுத்துகிறது. முடிவு நன்றாக இருந்தால், அந்த முறை அங்கீகரிக்கப்பட்டது, இல்லையென்றால் புனிதமாக்கப்பட வேண்டும்.
பாதுகாப்பிற்கான பிரார்த்தனை:
திருடன் சட்ட நடவடிக்கைகளிலிருந்து பாதுகாப்பு பெற பிரார்த்தனை செய்தான். தன் திருட்டுச் செயலின் மோசமான விளைவுகளை அவன் சந்திக்க விரும்பவில்லை. பத்துக் கட்டளைகள் திருடுவதைத் தடை செய்கிறது (லேவியராகமம் 19:11-13).
மன்னிப்புக்கான பிரார்த்தனை:
ஒருவேளை, திருடனுக்கு மிகைப்படுத்தப்பட்ட கிருபை மனநிலை இருந்தது; தான் செய்யவிருந்த பாவத்திற்கு மன்னிப்பு தேடினான். அவன் குற்றவாளி என்றும் மன்னிப்பு தேவை என்றும் அவன் புரிந்துகொண்டான், இருப்பினும், தனது பாவ வழிகளை கைவிட விரும்பவில்லை. தன் பாவங்களை ஒப்புக்கொள்ளாமல், பாவ வழிகளை விட்டுவிடக்கூடாது என்ற நோக்கத்துடன், மன்னிப்பு கேட்பது பாசாங்குத்தனம்.
மனந்திருந்திய திருடனின் பிரார்த்தனை:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வலது புறத்தில் தொங்கிக்கொண்டிருந்த திருடன் மன்னிப்பும் பெற்றான், பரலோக வாசியும் ஆனான். அவனுக்கான தண்டனை நியாயமான பலன் என்று அவன் தாழ்மையுடன் ஒப்புக்கொண்டான் (லூக்கா 23:41). சிலுவையில் தொங்கிக்கொண்டு, வலியின் மத்தியிலும், கர்த்தராகிய இயேசுவை ராஜாதி ராஜாவாகக் காண்பதற்கான ஆவிக்குரிய பகுத்தறிவு அவனுக்கு இருந்தது. அவன் உயிர்த்தெழுதலையும் தேவனின் நித்திய ராஜ்யத்தையும் முன்னறிந்ததால், தன்னைக் கர்த்தர் நினைவில் கொள்ளும்படி கெஞ்சினான் (லூக்கா 23:40-43) . மனந்திரும்புதலும் விசுவாசமும் கொண்ட அவனுடைய ஜெபம் ஏற்றுக்கொள்ளப்பட்டது, மேலும் பரதீசில் ஒரு இடம் உறுதி செய்யப்பட்டது.
மனந்திரும்பும் மனத்தாழ்மையும், பாவங்களை விட்டுவிடும் தீர்மானமும், கிறிஸ்துவை பற்றும் விசுவாசமும் எனக்கு உண்டா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்