தன் தகப்பனாலே தேவனுடைய பரிசுத்த ஆலயத்துக்கும் பரிசுத்த நகரத்துக்கும், தேசத்துக்கும் ஏற்படுத்தப்பட்ட விலைமதிப்பற்ற சேதத்துக்கும் நஷ்டத்துக்கும் இழப்பிற்கும் பாவநிவாரண பலி செலுத்திப் பிராயச்சித்தம் செய்துமுடித்த எசேக்கியா, பிரபுக்களையும் லேவியரையும் நோக்கி, "நீங்கள் தாவீதும் ஞானதிருஷ்டிக்காரனாகிய ஆசாபும் பாடின வார்த்தைகளினால் கர்த்தரைத் துதியுங்கள்...கிட்ட வந்து கர்த்தருடைய ஆலயத்துக்குத் தகனபலிகளையும், ஸ்தோத்திர பலிகளையும் கொண்டு வாருங்கள் என்றான்" (2 நாளா 5:2- 13)
தனது 10 அம்சத்திட்டத்தின் ஏழாவது பகுதியாக, பல வருடங்களாக தேவாலயத்தில் நின்றுபோயிருந்த ஸ்தோத்திரபலியும் துதி ஆராதனையும் அதின் ஸ்தானத்திலே நிலைநிறுத்தப்பட்டு கர்த்தருக்கு ஆராதனை தொடங்கப்பட்டது.
ஓ! ஆராதனை என்ற பெயரில்தான் இன்று என்னென்ன கும்மாளங்கள்! குத்தாட்டங்கள்! ஐயோ! சபையின் துதி ஆராதனைகள் ஆவியோடும் உண்மையோடும் கூடிய ஆராதனைகளாய், பரலோகத்துக்கு ஒத்த ஆராதனைகளாய் நமது ஆலய ஆராதனைகள் பூர்வ நாட்களின் ஆராதனை நாட்களுக்குத் திரும்பாதோ?
இயேசு கிறிஸ்துவையும் அவரது அன்பையும் அவரது தியாக பலியையும் அறிந்திராத, ருசித்திராத ஆசாப் என்னும் சங்கீதத் தலைவனே, "கர்த்தாவே, நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன்..என் வலது கையைப் பிடித்துத் தாங்குகிறீர்.. உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே மகிமையில் ஏற்றுக்கொள்வீர். பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறு விருப்பமில்லை.." (சங் 73:23 - 25) என்று சொல்லியிருக்க, இயேசுவின் அன்பையும் கிருபையையும், ஆசீர்வாதங்களையும் அள்ளி அள்ளி ருசித்திருக்கும் இன்றைய சபையின் பாடல்களில் வேத வசனங்கள் மறைந்து வேறு வசனங்கள் மலிந்து கிடப்பதை மன்னிக்கத்தான் முடியுமோ?
"உன் பாட்டுகளின் இரைச்சலை என்னை விட்டு அகற்று.. உன் உன் வீணைகளின் ஓசையை நான் கேட்கமாட்டேன்" (ஆமோஸ் 5:23) என்று இன்றைய இளவட்டங்களின் காதுகளில் இரவெல்லாம் உம் சத்தம் இரைவதாக!
"இப்படித்தான் என் சிருஷ்டிப்பின் நாளிலே மேள வாத்தியங்களும் நாகசுரங்களும் வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தில் ஒருவனிலே ஆயத்தப்பட்டிருந்தது. ஆனாலும் அவனும் அவனுடைய ஆடம்பரமும் அவன் வாத்தியங்களின் முழக்கமும் பாதாளத்திலே தள்ளுண்டு போயின.." (எசே 28:13/ஏசா 14:11) என்று இவர்கள் காது கிழியச் சொல்லுவீராக!
எங்கள் ஆலயங்களில் தொலைந்துபோன, ஆவியோடும் உண்மையோடும் செய்யும் தேவ ஆராதனைகளும் ஸ்தோத்திர பலிகளும் மீண்டும் மீட்டெடுக்கப்படுவதாக! எங்கள் துதிகளின் மத்தியில் நீர் வாசம்பண்ண வருவீராக! "சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர், பூமியனைத்தும் உம்முடைய மகிமையால் நிறைந்திருக்கிறது" என்று நாங்கள் ஏகோபித்து உம்மைத் துதிக்கும்போது எங்கள் தேவாலயங்கள் உமது வஸ்திரத் தொங்கலாலும், உமது மகிமையின் பிரசன்னத்தினாலும் நிறையப்பட்டு, தேவரீர் எங்கள் நடுவிலே உயரமும் உன்னதமுமான சிங்காசனத்திலே மகிமையின் மன்னராய் வீற்றிருப்பீராக!
ஆம் ஆண்டவரே, அப்படியே செய்வீராக! தேவனுக்கு ஏற்கும், பரலோகத்துக்கு ஒத்திருக்கும் மெய்யான துதி ஆராதனையின் எழுப்புதல் ஒன்றை எங்கள் சபைகள் மீண்டும் காண்பதாக!
எசேக்கியாவின் இந்த ஏழாம் அம்சத்திட்டம் எங்கள் நடுவிலே அப்படியே நிறைவேற்றப்படுவதாக! ஆமென்!
Author : Pr. Romilton