கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களிடம், "அறுப்பு மிகுதி வேலையாட்களோ கொஞ்சம்; ஆதலால், அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றார்" (மத்தேயு 9:35-38). சரித்திரத்தை பார்த்தோமேயானால் கர்த்தர் திராட்சைத் தோட்டத்திற்கு தம்முடைய வேலையாட்களை அனுப்பியிருக்கிறார், மேலும் வேலையாட்களின் உவமையிலும் இது தெளிவாகத் தெரிகிறது (மத்தேயு 20: 1-16). காலை 9 மணிக்கு, பின்னர் மதியம், பிற்பகல் 3 மணிக்கு மற்றும் மாலை 5 மணிக்கு என எஜமானன் நான்கு முறைமைகளில் தொழிலாளர்களை நியமித்தார். ஒரு நாள் சபை வரலாற்றின் முழு காலகட்டமாக கருதப்பட்டால், அது நான்கு காலங்களைக் குறிக்கிறது.
1) ஆரம்பகால சபை சகாப்தம் (கி.பி.0-450):
அவரது உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, கர்த்தர் சீஷர்களுக்குத் தோன்றி அவர்களுக்கு ஒரு பெரிய கட்டளையைக் கொடுத்தார் (மத்தேயு 28:18-20). பரமேறுதலுக்கு முன்பதாக கர்த்தர் "பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்" (அப்போஸ்தலர் 1:8) என்பதாக வாக்குறுதியளித்தார். பன்னிரண்டு அப்போஸ்தலர்கள், புதிய ஏற்பாட்டு சபை மற்றும் அதைத் தொடர்ந்த சகாப்தம் காலை 9.00 மணிக்கு வேலை செய்ய அழைக்கப்பட்டவர்களாகக் கருதலாம்.
2) இடைக்காலம் (கி.பி. 451 – 1451):
மதியம் 12.00 மணிக்கு அடுத்த தொகுதி தொழிலாளர்கள் அழைக்கப்பட்டனர். இடைக்கால சபை சகாப்தத்தை இரண்டாம் சுற்றில் அழைக்கப்பட்ட தொழிலாளர்களுடன் ஒப்பிடலாம். மடங்கள் (துறவிகள் மற்றும் கன்னியாஸ்திரிகள்) எஞ்சியிருந்தன, விசுவாசத்தை உண்மையாகப் பிடித்து, அந்த விசுவாசத்தை அனைவரோடும் பகிர்ந்து கொள்கின்றன.
3) சீர்திருத்தம் & நவீன காலம் (கி.பி.1451- 1914):
சீர்திருத்தம், மார்ட்டின் லூத்தர் இயக்கம் மற்றும் நவீன மிஷனரி இயக்கம் ஆகியவற்றின் சகாப்தத்தை பிற்பகல் 3.00 மணிக்கு அழைக்கப்பட்ட தொழிலாளர்களுடன் ஒப்பிடலாம். கென்னத் ஸ்காட் லாடூரெட் என்ற வரலாற்றாசிரியர், 1800-1914 காலகட்டத்தை, பல கலாச்சாரங்கள், மொழிகள், தேசங்கள் மற்றும் மக்கள் குழுக்களை தழுவி, உலகின் மூலை முடுக்கெல்லாம் நற்செய்தி எட்டிய மாபெரும் நூற்றாண்டாகக் கருதுகிறார்.
4) நவீன மற்றும் சாதாரண இயக்கங்கள்:
1914 க்குப் பிறகு உலகம் கடுமையான மாற்றத்திற்கு உள்ளானது, மேலும் அருட்பணி முயற்சிகள் அறிவுபூர்வமாக, சமூக ரீதியாக, தேசிய ரீதியாக, கலாச்சார ரீதியாக, மத ரீதியாக மற்றும் கருத்தியல் ரீதியாக உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளிலிருந்தும் சவால் விடுமளவு இயங்கின. இந்த காலக்கட்டத்தில்தான் தேவன் தனது பணியைத் தொடர பல சாதாரண இயக்கங்களை (ஆபரேஷன் மொபைலைசேஷன், யூத் வித் எ மிஷன் போன்றவை) அதாவது உள்ளூர் சபை இயக்கங்கள், வேலை செய்து கொண்டே ஊழியம் செய்பவர்கள், வணிகம் செய்து கொண்டே பகுதி நேர ஊழியம் செய்பவர்கள் என அருட்பணிகள் எழும்பியது. மாலை 5.00 மணிக்கு அழைக்கப்பட்ட தொழிலாளர்களுடன் இதை ஒப்பிடலாம்.
நானும் அவருடைய திராட்சைத் தோட்டத்தில் பணி செய்ய ஈடுபாடு கொண்ட நபரா?
Author: Rev. Dr. J. N. Manokaran