யோபின் புத்தகம் ஏன் வேதாகமத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்று பலர் ஆச்சரியப்படுகிறார்கள். சில சமயங்களில், இது சலிப்பூட்டும் பேச்சுகளாகவும், புரிந்துகொள்ள கடினமாகவும் இருக்கும். இறையாண்மையுள்ள தேவன் நம்மைப் பொன் போலச் செம்மைப்படுத்த துன்பத்தை அனுமதிக்கிறார். "ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்" (யோபு 23:10).
1) சாத்தானுக்கு கற்றுக்கொடுக்க:
சாத்தானுக்கும் மற்ற தேவதூதர்களுக்கும் கற்பிக்க தேவன் யோபுவை துன்பப்பட அனுமதித்தார். தேவனின் தன்மையை சாத்தான் புரிந்துகொண்டான். அவன் தேவனின் நேர்மையைக் கேள்வி கேட்கத் துணிந்தான். அது மாத்திரமா வீழ்ந்த மனிதர்களிடமிருந்து விசுவாசத்தைப் பெற தேவன் லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானார் (யோபு 2:4). மக்கள் தேவனை ஆசீர்வாதங்களுக்காக அல்ல, அவருடைய அன்பிற்காக நேசிக்கிறார்கள் என்ற கடினமான பாடத்தை சாத்தான் இதில் கற்றுக்கொண்டான்.
2) யோபிற்கு கற்றுக் கொடுக்க:
யோபுக்கு தேவன் மீது முழுமையான நம்பிக்கையை கற்பிக்க தேவன் யோபை துன்பப்பட அனுமதித்தார். ஒருவேளை யோபின் ஆவிக்குரிய கவனம் குறைந்திருக்கலாம், அதனால் அவனுடைய முன்னுரிமைகளும் தடைபட்டிருக்கலாம். யோபின் கவனத்தை மீண்டும் ஈர்க்க அல்லது சீர்படுத்த, யோபு துன்பப்பட தேவன் அனுமதித்தார். அதன் மூலம் யோபு சுத்திகரிக்கப்பட்ட தங்கம் போல் துன்பத்திலிருந்து வெளியே வர முடிந்தது.
3) மனித ஞானம் போதாது என்பதை நிரூபிக்க:
தேவன் யோபுவை துன்பப்பட அனுமதித்தது ஏனென்றால் மனிதர்களின் ஞானத்தால் தேவனுடைய வழிகளைப் புரிந்துகொள்ள முடியாது என்பதை கற்றுக் கொடுப்பதற்காக ஆகும். யோபு தன் மனிதப் பகுத்தறிவுடன், தனது துன்பங்களுக்கான விடை காண முயன்றான், ஆனால் முடியவில்லை. அவனது நண்பர்களும் தங்கள் தத்துவங்கள், வாதங்கள், மரபுகள் ஆகியவற்றிலும் அவ்வாறே செய்தனர்; மற்றும் அவர்கள் ஆறுதல் அளிக்காமல் துயர் உண்டாக்கும் நபர்களானார்கள் (யோபு 16:2).
4) யோபுவின் நண்பர்களுக்கு கற்பிக்க:
யோபுவை அவன் நண்பர்களுக்கு முன்பாக நியாயப்படுத்த தேவன் யோபுவை துன்பப்படுத்த அனுமதித்தார். ஆதாரம் இல்லாமல், அவர்கள் யோபுவை பாவம் செய்தவன் என்றும், ஒருவேளை அவனின் இரகசிய பாவங்கள் அல்லது அவருடைய பிள்ளைகளின் பாவங்களாக இருக்கும் என்றும் குற்றம் சாட்டினர். தற்பரிசோதனை செய்யாமல், மற்றவர்களை நியாயந்தீர்க்கும் போக்கு, மற்றவர்களின் கண்களில் உள்ள கறையை அகற்ற முயல்கிறது (மத்தேயு 7:3-5).
5) அனைத்து தலைமுறையினருக்கும் கற்பிக்க:
துன்பங்களை எப்படி சகிக்க வேண்டும் என்பதை அடுத்த தலைமுறைக்குக் கற்றுக்கொடுக்க தேவன் யோபுவை துன்பப்பட அனுமதித்தார். துன்பம் உண்மையில் விழுந்த உலகின் ஒரு பகுதியாகும். பயப்படுவதற்குப் பதிலாக, தேவனுடைய பிள்ளைகள் துன்பத்தை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்.
6) இரட்டிப்பான ஆசீர்வாதத்திற்காக:
யோபுவை இரட்டிப்பாக ஆசீர்வதிக்க தேவன் யோபுவை துன்பப்பட அனுமதித்தார். கர்த்தர் அவனுடைய துன்பத்தில் அவனைக் கைவிடவில்லை, துன்பத்திற்கு முன் இருந்த அவனுடைய வாழ்க்கையை விட அவனுடைய பிந்தைய நாட்கள் மிகச் சிறந்தவையாக இருந்தன (யோபு 42:12).
7) தேவன் தன் பிள்ளைகளை நம்புகிறார் என்பதை தெரிவிக்க:
தேவன் தனது பிள்ளைகளை எப்படி நம்புகிறார் மற்றும் அவர்களின் அன்பு மற்றும் உண்மைத்தன்மையைக் குறித்து மகிழ்ச்சியடைகிறார் என்பதை விசுவாசிகளுக்கு கற்பிக்க தேவன் யோபுவை துன்பப்பட அனுமதித்தார் (யோபு 1:8).
நான் துன்பங்களை சந்திக்கும் போது வாழ்க்கை பாடத்தைக் கற்றுக்கொள்கிறேனா?
Author : Rev. Dr. J. N. Manokaran