சமுதாயத்தின் ஒளி

இவ்வுலகத்தின் கண்ணீர்க் கதைளை ஓவ்வொரு அறைகளிலும் காவியமாக்கிக் கொண்டிருந்தது அந்த மருத்துவமனை! ஓய்வு அறையில் நர்ஸ் ஜாய், நர்ஸ் லில்லியின் வரவு நோக்கிக் காத்திருந்தாள். லில்லியின் முகத்தைக் கண்ட ஜாய்க்கு அதிர்ச்சி! ஆச்சர்யம்! அவள் எதிர்பார்த்த சோகமும் வருத்தமும் எங்கே? தன் ஆச்சரியத்தை அடக்க முடியாமல் கேட்டேவிட்டாள்.

“லில்லி! நீ உண்மையாகவே மகிழ்ச்சியா இருக்கையா? கேட்டாள் ஜாய். “ஜாய்! நான் ஏன் வருத்தப்படணும்?”

“உன்னுடைய ட்ரான்ஸ்பர் ஆடர் இன்று வரப்போறதா பேசிக்கிறாங்களே! அழகிய இயற்கை சூழலும் அருமையான தட்பவெப்ப நிலையும் கொண்ட இந்தப்பெரிய நகரத்திலுள்ள ஹாஸ்பிடலிலிருந்து எங்கேயோ தூரத்திலிருக்கிற ஒரு பட்டிக்காட்டுக்குப் போக உனக்கு வருத்தமா இல்லையா?” கேட்டாள் ஜாய்.

“என்னுடைய அம்மா, அப்பாவை விட்டு விட்டுப்போக வேண்டியிருக்கிறதே என்று நினைக்கும் பொழுது வருத்தமாகத்தான் இருக்கிறது, ஆனால்.....”

“லில்லி! நம்ம ஹெட், அதுதான், டாக்டர் சதீஷ் கோவிலுக்குப் போனபோது அவரை வழியனுப்ப எல்லோரும் போனோம். நீ வரவில்லை. பிள்ளையார் சதுர்த்திக்கு அவர் கொடுத்த கொழுக்கட்டை போன்ற பலகாரங்களை வாங்க மறுத்திட்ட, அந்த ஆத்திரம் அவருக்கு. ஏற்கனவே கிறிஸ்டியன்னா அவருக்குப் பிடிக்காது. டி.எம்.ஓ. டாக்டர் சதீஷின் தந்தையின் நண்பர்! உன்மீது பலகுறைகளைச் சொல்லி மாறுதலுக்கு ஏற்பாடு செய்துவிட்டாராம். லில்லி! அவருக்குக் கீழே நாம் ஒர்க்பண்றோம். அவரை திருப்திசெய்யவேண்டியது அவசியமில்லையா? நான் மட்டும் கிறிஸ்டியன் இல்லையா? அவரை வழியனுப்பும் கூட்டத்தில் நான் இருந்தால் அவருடைய தெய்வத்தை வணங்கவா செய்தேன்?
லில்லி! “ஊரோடு ஒத்துவாழ்” என்று பெரியவங்க சொன்னதை மறந்துட்டியா? வாதிட்டாள் ஜாய்.

“ஜாய்! நம் பரமபிதா கட்டளையெல்லாம் “ஊரோடு ஒத்துவாழ்” என்பது அல்ல! “நான் உலகத்தான் அல்லாதது போல நீங்கள் உலகத்தார் அல்ல!” “நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்...... நீங்கள் உலகத்திற்கு ஒளியாக இருக்கிறீர்கள்” (மத்.5:13,14) என்றுதான் கூறியுள்ளார். பவுல் அப்போஸ்தலா் நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது! நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டு பிரிந்து போய் அசுத்தமானதைத் தொடாதிருங்கள்......... அப்பொழுதுதான்... நான் உங்களுக்கு பிதாவாயிருப்பேன். நீங்கள் எனக்கு குமாரரும், குமாரத்திகளுமாய் இருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்” (2கொ 6:14-18) என்று தம் நிருபத்தில் எழுதியிருக்கிறார். வேத வசனமே நம்மை நியாயந்தீர்க்கும்” என்றாள் லில்லி முடிவாக.

“லில்லி! நீ கூறுவது கேட்பதற்கு இனிமையுடையது தான்! வாழ்க்கைக்கு உதவாது. வேதத்தின்படி நடந்ததால் உனக்கு கிடைத்தது, வேதனைதானே! (“குத்திக்காட்டினாள் ஜாய்)

“நேபுகாத்நேச்சார் அவனைப் போன்ற பொம்மையை உண்டு பண்ணி, அதை வணங்க மறுத்த சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ அக்கினிச் சூளையில் எறியப்பட்டனர். தேவனை வணங்கிய குற்றத்திற்காக தானியேல் சிங்கக் கெபியில் எறியப்பட்டார்”.

“லில்லி! நடந்து முடிந்த கதைகள் அவை! அவர்களை எல்லாம் தேவன் அற்புதமாகக் காப்பாற்றினார். இப்பொழுது.....”

“ஜாய்! இப்பொழுதும் காப்பாற்றுவார். ஏன் என்றால் கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர். அதுமட்டுமல்ல ஜாய்! அக்கினிச் சூளையில் எறியப்படுவீர்கள் என்று சொன்னபோது அம்மூவரும் சொன்னபதில் என்ன? நாங்கள் (தானி 3:17,18) ஆராதிக்கும் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார். அவர் எரிகிற அக்கினிச் சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார். விடுவிக்காமற்போனாலும்.... நாங்கள் உன் சிலைவை வணங்க மாட்டோம்” என்று தீரமாகச் சொன்னார்களே! அந்த விசுவாசம் வேணும் ஜாய்! கிறிஸ்துவின் சீடரான பேதுரு தலைகீழாக அறையப்பட்டார். அந்திரேயா ஆட்டைப் போல தோலுரித்துக் கொல்லப்பட்டார். இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இன்றும் சில நாடுகளில் உண்மைக் கிறிஸ்தவர்கள் உபத்திரவப்படுகின்றனர்! சித்திரவதையில் மடிகின்றனா்! கிறிஸ்துவின் மகிமைக்காக அவர்கள்பட்ட துன்பங்களின்முன்... இது தூசியிலும் தூசியல்லவா? என்றாள் லில்லி திடமாக.

“அம்மா” என்ற தீனக்குரல் இருவர் பேச்சிலும் குறுக்கிட வெளியில் வந்தனர், நரைத்த தலையுடன் தள்ளாடும் கிழவர் நின்று கொண்டிருந்தார்! அவர் வேறு யாருமல்ல! நெஞ்சுவலி என்று கூறிக்கொண்டு, தன்னை ஹாஸ்பிடலில் அனுமதித்தே ஆகவேண்டுமென கெஞ்சிக் கூத்தாடி கடந்த இரு தினங்களாக ஹாஸ்பிடல் ஆண்கள் வார்டு வராண்டாவில் கிடக்கும் முனியாண்டி!

அவரைப் பார்த்ததும் ஜாய்க்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது "காடு வா, வான்னு சொல்லுற நிலமையிலும் கட்டையில போறவன் எல்லாம் இங்க வந்து நம்ம கழுத்தை அறுக்கிறாங்க” சிடுசிடுத்தபடி உள்ளே போய்விட்டாள்.
முனியாண்டியின் ஏழ்மையான தோற்றமும் ஏங்கும் விழிகளும் லில்லியைப் பரிதாபப்பட வைத்தன. “என்னய்யா வேனும்? நெஞ்சு ரொம்ப வலிக்குதா?” அன்பைத் தன் குரலில் தேக்கிக் கேட்டாள்.

“எனக்கு ரொம்பப் பசிக்குதம்மா!” பரிதாபமாகச் சொன்னார்.
“ரொட்டி கொடுக்கலையா?”

“ரொட்டி காய்ந்து போய் இருக்குதம்மா சின்னதா! ஆள் பார்த்துதானே கொடுக்குறாங்க... எனக்கு” ஏங்கும் விழிகளிலும் , துடிக்கும் உதடுகளிலும் எதையோ கண்டாள் லில்லி! “பசியாயிருந்தேன், எனக்கு போஜனம் கொடுத்தீர்கள்” இறைவன் இயேசுவின் குரல் அவள் இதயக்கோவிலில் மணியாக ஒலித்தது.

அறையினுள் சென்றவள் தன் டிபன்கேரியரை எடுத்து வந்து புன்னகையோடு முனியாண்டியிடம் நீட்டினாள். “போய் சாப்பிடுங்கள்”. முனியாண்டிக்கு ஒரே அதிர்ச்சி! வேகவேகமாக தலையையும், கைகளையும் ஆட்டியவர் “வேண்டாம்மா! வேண்டாம்” பதறிக் கூறினார்.

“ஜயா! சாப்பிடுங்கள்.... தயவுசெய்து சாப்பிடுங்கள். ஒருவருடைய பசியைத் தீர்த்தேன் என்ற மகிழ்ச்சியை எனக்குத் தாருங்கள்” என்று கூறி அவர் கரத்தில் டிபன் கேரியரைத் திணித்தவள், அறையினுள் செல்லாமல் வெளியே வார்டை நோக்கி நடந்தாள்! உள்ளே போனால் “பைத்தியக்காரி” என்ற பட்டம் ஜாய் மூலம் தனக்கு கூட்டப்படும் என்பதை அறிந்தவள்தானே! “நாங்கள் கிறிஸ்துவின் நிமித்தம் பைத்தியக்காரர்” என்று பவுல் (கொ.4:10) கூறியுள்ளாரே!

மாலை மணி 6, மாவட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் தாமோதரன் எம்.எஸ். முன் ஹாஸ்பிடலில் பணியாற்றும் அனைவரும் கூடியிருந்தனர். டாக்டர் சதீஷின் உள்ளம் பெருமிதத்தால் பொங்கியது. டி.எம்.ஒ. வருகிறார் என்று தெரிந்ததும் தன் ஆணைக்கிணங்க சுறுசுறுப்பாக தன் பணியாளாகள் இயங்கி ஹாஸ்பிடலிலுள்ள படுக்கை விரிப்பு, உடுப்பு ஆகியவற்றைச் சீருடையில் மாற்றியது, ஹாஸ்பிடலும், சுற்றுப்புறமும் அழகும் தூய்மையும் போட்டியிட மாற்றியது அனைத்தையும் எண்ணி, எண்ணி மகிழ்ந்தார். தன்னை அவமதித்த லில்லிக்கு கிடைக்கப் போகும் தண்டணையை எண்ணி செருக்கடைந்தார்.

“சதீஷ்!” அழுத்தமாக அழைத்த டி.எம்.ஓ... “என்முன் காட்சி தரும் இந்த ஹாஸ்பிடல் எப்பொழுதும் இப்படித்தான் இருக்கிறதா?” கூர்ந்து பார்த்தார்! திடுக்கிட்ட சதீஷ் “எப்பொழுதும் இப்படித்தான் இருக்கும் டாக்டர்” ஒருவாறு சொல்லி முடித்தார்.

“அப்படியா?” சிரித்தார் தாமோதரன். தன் கூலிங் கிளாஸைக் கழற்றினார். தன் சூட்கேஸைத் திறந்தார். வெண்ணிற தாடி, மீசை, டோப்பா அமைதியாக எடுத்துப் பொருத்தினார்!

“இது யார்? எங்கேயோ பார்த்த மாதிரி... முனியாண்டி” அனைவருமே அதிர்ச்சியுற்றனர். வானமே இடிந்ததுபோல் உணர்ந்தனர்.

“மருத்துவப்பணி என்பது பொருளீட்டுவதற்காகவோ, பொழுதுபோக்கிற்காகவோ அன்று. பிணி தாக்கும் புனிதப்பணி! சமுதாய சேவை இது. தலைமைப்பதவி வகிக்கும் நீ சொந்த விருப்பு வெறுப்பு இவற்றை ஒதுக்கி உனக்கு கீழே பணியாற்றுபவர்கள் தங்கள் கடமையைச் சரிவர செய்கிறார்களா என்பதை கவனிக்க வேண்டும். அதற்கு முதலில் நீ உன் கடமையில் கண்ணும், கருத்துமாக இருக்கவேண்டும். அதில் தவறிவிட்டாயப்பா” அருமையான பொருளை, ஐந்தே நிமிடத்தில் அறிவுரையாக கூறியவர் ஜாய் அமர்ந்திருந்த பக்கம் திரும்பினார்.
ஜாய்” டி.எம்.ஓ.வின் அழைப்பு இடி விழுந்தவள் போல் அமர்ந்திருந்த ஜாயைத் திடுக்கிட வைத்தது.

“கட்டையில் போறவன் ஆனாலும், காரில் வருபவர் ஆனாலும் மருத்துவத் தேவை நாடி வருபவனுக்கு சேவை செய்யத்தாம்மா இந்த ஒயிட் யூனிபாம்..... புரிகிறதா? நீ ஒரு கிறிஸ்டியனா இருந்தும் கிறிஸ்துவை வாழ்வில் காணோமேம்மா”

“என்னை மன்னித்துவிடுங்கள் டாக்டா்” வாழ்க்கையிலிருந்து வேறுபட்டவராகத் தோன்றிய கிறிஸ்து வாழ்வோடு இணைந்திருப்பதை ஜாய் கண்டாள். இறைமகன் இயேசுவிடம் மன்னிப்பு வேண்டி அவள் மனம் கதறிக்கொண்டிருந்தது.

“சதீஷ்! லில்லியை இந்த ஹாஸ்பிடலை விட்டு மாற்றவா?” ஒலித்தது டி.எம்.ஓவின் குரல்!

“வேண்டாம்! டாக்டர்! வேண்டாம்! நர்ஸ் லில்லி ஒரு கடமை தவறாத தாதி மட்டுமல்ல! அன்பும் பண்பும் உள்ள தாய்மை உள்ளம்! அவர்கள் சேவை எங்கள் ஹாஸ்பிடலுக்கு தேவை! என்னை மன்னித்து விடுங்கள் டாக்டர். என் கண்களை நீங்கள் திறந்துவிட்டீர்கள். இனி ஒரு நல்ல தலைமை மருத்துவனாக விளங்குவேன் டாக்டா்” என்றார் சதீஷ்.

டாக்டர் தாமோதரன் புன்னகை பூத்தார். தண்டிப்பதனால் சிறந்த தலைவனாக முடியாது. தவறு எங்கே என்று சுட்டிக்காட்டி திருத்தி நல்வழிப்படுத்துபவனே மாபெரும் தலைவன்! தன் கடமையில் வெற்றி பெற்றார் டி.எம்.ஓ.

லில்லியின் வதனத்தில் என்றும் போல் அதே மாறாத புன்னகை! சமுதாயத்திற்கு ஒளியாக ஒளிர்ந்து கொண்டிருந்தாள். லில்லி.

இந்த கதை இதயம் தந்த பரிசு என்ற புத்தகத்திலிருந்து   Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.



Topics: Tamil Christian Story இதயம் தந்த பரிசு - கதை

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download