எல்லா மனிதர்களுக்கும் நற்செய்தியைப் பிரசங்கிக்கும் ஆணை கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அடிப்படையில் சுவிசேஷம் என்பது மனிதகுலத்திற்கு ஒரு நல்ல செய்தி. தங்கள் பாவங்களுக்காக மனந்திரும்பி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்கள் பாவ மன்னிப்பையும் நித்திய ஜீவனையும் பெறுவார்கள்.
1) நித்திய கிறிஸ்து:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நித்தியமாக முன்பே இருப்பவர் மற்றும் சுயமாக இருக்கும் தேவனுடைய குமாரன் (யோவான் 1:1). “ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது” (கொலோசெயர் 1:16).
2) சரித்திரத்தில் கிறிஸ்து:
காபிரியேல் தூதன் கன்னிகையான மரியாள் முன்பு தோன்றி, பரிசுத்த ஆவியானவரால் ஒரு ஆண் குழந்தையைப் பெறுவாய், உன்னதமானவரின் பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்; அவர் மக்களை அவர்களின் பாவத்திலிருந்து இரட்சிப்பார் (லூக்கா 1:28-35; மத்தேயு 1:21) என்று அறிவித்தார்.அவர் பெத்லகேமில் பிறந்தார், நாசரேத்தில் வளர்ந்தார். பின்னர் கர்த்தராகிய இயேசு மனிதகுலத்தோடு தன்னை அடையாளப்படுத்தும் படியாய் ஞானஸ்நானம் எடுத்தார், மேலும் யோவான் ஸ்நானகன்; அவரை "இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி" (யோவான் 1:29) என்றான். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கல்வாரி சிலுவையில் மரித்து, பாவ மன்னிப்புக்காகத் தம் இரத்தத்தைச் சிந்தி, அடக்கம் செய்யப்பட்டு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.
3) சமகால கிறிஸ்து:
உயிர்த்தெழுந்த கிறிஸ்து இன்றும் என்றும் உயிருடன் இருக்கிறார். உயிர்த்தெழுதலுக்குப் பிறகு 40 நாட்களுக்கு அவர் சீஷர்களுக்கும் 500க்கும் மேற்பட்ட ஜனங்களுக்கும் தோன்றினார்.
4) பரமேறிய கிறிஸ்து:
"இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், உயர எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது. அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, வெண்மையான வஸ்திரந்தரித்தவர்கள் இரண்டு பேர் அவர்களருகே நின்று: கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்" (அப்போஸ்தலர் 1:9-11).
5) மீண்டும் வரும் கிறிஸ்து:
"இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது" (வெளிப்படுத்துதல் 22:12). பின்னர் எல்லா பரிசுத்தவான்களும் நித்தியம் முழுவதும் அவருடன் வாழ்வார்கள்.
நான் சுவிசேஷத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்