எசேக்கிய ராஜ்யத்தின் முதலாம் வருடம், முதலாம் மாதம், முதலாம் தேதி :
"அவன் தன் ராஜ்யத்தின் முதலாம் வருஷம் முதலாம் மாதத்தில்....(முதலாம் தேதியிலே ) கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளைத் திறந்து அவைகளைப் பழுதுபார்த்து..." (2 நாளா 29:3, 17)
First things first என்பது போல, எசேக்கியா என்ற அந்த 24 வயதுப் பையன் ராஜ்யபாரப் பொறுப்பேற்ற முதலாம் வருடம், முதலாம் மாதம், முதல் நாளிலே தன் சிங்காசனத்தில் அமர்வதற்குப் பதிலாக அவன் நேரே சென்றது கர்த்தருடைய ஆலயத்திற்குள்.. அவன் முதன்முதலாகச் செய்த வேலையே கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளைத் திறந்து அவற்றைப் பழுதுபார்த்ததுதான்!
தேசத்தில் மாற்றம் கொண்டுவரும் பெரும் பணி ஆரம்பிக்கப்பட வேண்டியது முதலாவது தேவனுடைய ஆலயத்திலேயே! இழுத்து மூடப்பட்டு இருள் மண்டிக்கிடந்த தேவாலயத்தைத்தான் முதலாவது திறந்தான் எசேக்கியா!
இதோ நமது ஆலய வாசல்களின் தலைகள் உயர்த்தப்படட்டும்! அநாதி கதவுகள் உயர்ந்து கொடுக்கட்டும்! மகிமையின் ராஜா மீண்டும் உட்பிரவேசிப்பாராக! மகிமையின் ராஜாவை அவரது ஆலயத்திலிருந்தே துரத்திவிட்டோமே! கிருபையின் அரசரை வெறுங்காலாகவே துரத்திவிட்டோமே! அவரை வருந்தி அழைத்து வருவோம்! திரும்ப அழைத்து வருவோம்! (2 சாமு 19:10, 11). தேவனுடைய பெட்டி என்னும் தேவ பிரசன்னத்தை திரும்ப நம் மத்தியிலே கொண்டு வருவோம். கடந்த காலங்களிலே அதைத் தேடாதே போனோமே! (1 நாளா 13:3).
பரிசுத்தக் குலைச்சல்களுக்கும், பாவ அசுத்தங்களுக்கும் நமது மனதின் வாசல்களையும், நுழைவாயில்களையும் திறந்து கொடுத்து சத்துரு உட்புக இடமளித்தோம். இப்பொழுதோ,"இம்மட்டும் வா, மிஞ்சி வராதே! உன் பெருமைகளும் அசுத்தங்களும் இங்கேயே அடங்கி மடியக்கடவது" (யோபு 38:10, 11) என்று கோடு கிழித்துக் கட்டளையிட்டு, இந்நாள் வரை எது எதையெல்லாம் நமக்குள்ளும் நமது சபைகளுக்குள்ளும் உட்பிரவேசிக்க இடங்கொடுத்தோம் என்று சுயபரிசோதனை செய்து Doorways எனப்படும் வாசல்களையும் கதவுகளையும் செப்பனிட்டு, எல்லை குறித்து, வேலியடைத்து, ஆவிக்குரிய வாழ்வாகிய நமது ஆலயங்களைப் பழுதுபார்க்கத் தொடங்குவோம்!
எசேக்கியா என்ற மீதியான இன்றைய சிறு கூட்டம், ஜெபத்திலே தன் சொந்தக் காரியங்களையும், சபையின் காரியங்களையும் பழுதுபார்த்து சரி செய்யத் துவங்கும் போது, மற்ற காரியங்கள் அனைத்தும் தானாகவே வந்து அமையும் என்பதே எசேக்கியா ராஜாவின் காரியத்தில் அடுத்தடுத்து நாம் காண்பது!
உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு: (மத் 23:26)
எசேக்கியேல் எட்டாம் அதிகாரத்திலே எசேக்கியேலை ஆவியானவர் ஆலயத்தின் உள்வாசலுக்கும் உட்புறத்துக்கும் எடுத்துச்சென்று காட்டியபோது, அங்கே காணப்பட்ட அருவருப்புகளுக்கு எவ்விதத்திலும் இன்றைய நமது சபைகளின் உட்புறங்களின் அசங்கியங்கள் குறைந்து காணப்படுகிறதோ?
■ தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற பலவித காரியங்கள், விக்கிரகங்களாய், அருவருப்புகளாய் சபையின் உள்ளே இன்று காணப்படவில்லையோ? (எசே 8:3, 5)
■ தேவனை அவரது பரிசுத்த ஸ்தலத்திலிருந்தே தூரமாய்த் துரத்திவிடும் மிகுந்த அருவருப்புகளும் இங்கே இல்லையோ? (எசே 8: 6)
■ இன்னும் உள்ளே போனால் சபைகளின் உட்புறங்களிலே நடக்கிற கொடிய அருவருப்புகளை என்னவென்று சொல்வது? (எசே 8: 9)
■ நமது ஆலயங்களின் வெளிப்புற, உட்புற சுவரெல்லாம் வேத வசனங்களால் நிறைந்திருக்க, சபை விசுவாசிகள், ஊழியர்களின் இருதயங்களின் உட்புறமோ சகல அருவருப்பும் நரகலுமான உலக வழிபாடுகள் நிறைந்த விக்கிரகங்களால் சித்திரந்தீட்டப்பட்டிருக்கவில்லையோ? ஒரு காலத்தில் ஜெபத்தினாலும் துதியினாலும் நிறைந்த தூபக் கலசத்தைப் பிடித்து, அந்தத் தூபப் புகையினாலும் மகிமையினாலும் நிறைந்திருந்த ஆலய உட்புறங்கள் இன்று அசுத்த சாம்பலின் புகைமூட்டத்தினாலும் பகை மூட்டத்தினாலும் மூச்சுமுட்டிக் கிடக்கவில்லையோ? (எசே 8:10, 11 )
■ ஒரு காலத்தில் தேவனுக்காகவும், தேசத்துக்காகவும், இரட்சிக்கப்படாத ஆத்துமாக்களுக்காகவும் புலம்பி மன்றாடிய நமது சபைகளின் சகோதரிகளும் தாய்மார்களும் இன்று "தம்மூசு" போன்று விக்கிரகமாகிப் போன தங்கள் சுயநலங்களுக்காகவே ஆலய உட்புறத்தில் அழுதுகொண்டிருக்கவில்லையோ? (எசே 8:14)
■ இவைகளெல்லாம் போதாதென்று, எசேக்கியேலின் நாட்களில் ஆலயத்தின் உட்புறத்திலே அன்று சூரிய நமஸ்காரம் செய்த கூட்டம் போன்று, இன்று சூரியனை நமஸ்கரித்து யோகா செய்யும் கூட்டத்தோடு ஒன்றிப்போன கூட்டங்களும், சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல், சிருஷ்டியான மனிதனையே உயர்த்திப் பிடித்து, அவர்களையே பிரியப்படுத்தி சேவிக்கும் கூட்டங்களும் இன்றைய சபைக்குள்ளே பெருகிக் கிடக்கவில்லையோ?
போனது போகட்டும்! எழுந்திருந்து சபைகளின் கதவுகளையும் வாசல்களையும், உட்புறங்களையும் பழுதுபார்த்து, சகல அசுத்த அருவருப்புகளையும் பாளயத்துக்குப் புறம்பே கொண்டு கொட்டுவோம் வாருங்கள்!
எசேக்கியா போன்று இன்று எழும்பும் மீதியான கூட்டம், அவனது பத்து அம்சத்திட்டத்தின் முதல் திட்டமாகத் தன் சொந்த ஆவிக்குரிய வாழ்வு மற்றும் சபைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கட்டும். மற்றவைகள் தானாய் வந்து அமையும்!
Author : Pr. Romilton