"அப்பொழுது அவர்கள்... தங்கள் சகோதரைக் கூடிவரச்செய்து, பரிசுத்தம் பண்ணிக்கொண்டு, கர்த்தருடைய வசனங்களுக்கொத்த ராஜாவினுடைய கற்பனைகளின்படியே கர்த்தருடைய ஆலயத்தை சுத்திகரிக்க வந்தார்கள்.." (2 நாளா 29:12 - 15)
தனிமனிதனாகிய எசேக்கியா, முதலாவது தன்னோடு ஒருமனப்பட்ட மீதியான சிலரைச் சேர்த்தான் - தன் பாரத்தையும் தரிசனத்தையும் தாங்களிருந்த நிலையையும் பகிர்ந்து கொண்டு அவர்களையும் தன்னோடு அந்த வேலையில் இணைத்து உடன்படிக்கையும் செய்தான்.
இப்போது அவனோடிருந்த அவர்கள், தங்களைச் சேர்ந்த, தங்களைப் போன்றவர்களையும் தங்களோடு இணைத்து, தங்களுக்குள்ளே தங்களைப் பரிசுத்தம் பண்ணிக்கொண்டு, கர்த்தருடைய வசனங்களுக்கு ஒத்ததாயிருந்த ராஜாவின் கற்பனைகளின்படியே அடுத்த அடிக்குக் கடந்துசென்று ஆலயத்தை சுத்திகரிக்க வருகிறார்கள்..
ஒரு தனி மனிதன் சபைக்காகவும் தேசத்துக்காகவும் எழுந்து நிற்கும்போது அவனோடு இணையும் மீதியான கூட்டமொன்று பாரம்கொண்டு தன்னைப்போன்ற மற்றவர்களையும் தன்னோடு இணைத்து, முன்பு சபையையும், பின்பு தேசத்தையும் ஜெபத்தால் சுத்திகரிக்க ஒருமனப்பட்டு ஒன்றுகூடுகிறது.
"ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்தை சுத்திகரிக்கும்படி உட்புறத்திலே பிரவேசித்து, கர்த்தருடைய ஆலயத்தில் கண்ட சகல அசுத்தத்தையும் வெளியே கர்த்தருடைய ஆலயப்பிரகாரத்தில் கொண்டு வந்தார்கள். அப்பொழுது லேவியர் அதை எடுத்துக்கொண்டு வெளியே கீதரோன் ஆற்றிற்குக் கொண்டு போனார்கள்..
இப்படி ஒரு நாள் நிச்சயம் வருகிறது! போதகர்களும் உதவிப் போதகர்களும், தலைவர்களும் தேவ சமூகத்தில் தங்களைத் தாழ்த்தி, தங்கள் தங்கள் சபைகளுக்குள் பிரவேசித்து அங்கே உட்புறத்தில் காணப்படும் சகல அசுத்தங்களையும் வெளியே கொண்டுபோய்க் கொட்டித் தீர்ப்பார்கள். அங்கே கீதரோன் ஆற்றண்டையிலே உள்ள கெத்சமனே தோட்டத்திலே தேவகுமாரனின் கெஞ்சி மன்றாடும் சத்தம் கேட்கப்படுகிறதே !
ஓ! மீதியான பாரமுள்ள ஜனத்தோடு தேசத்து சபைகளின் போதகர்களும் கைகோர்ப்பார்களாக! தங்கள் தங்கள் சபைகளின் சகல அசுசிகளையும் வெளியே கொண்டுபோய்க் கொட்டித்தீர்ப்பார்களாக! ஓ! அவர்கள் தங்கள் சபைகளை இப்பொழுதே பரிசுத்தம் பண்ணத் தொடங்கி, 16 நாட்களுக்குள் அந்த வேலையை முடித்த எசேக்கியாவின் நாட்களின் ஆசாரிய லேவியரைப் போன்று ஜெபத்திற்கும் உபவாசத்திற்கும் நாட்களை நியமித்து சீக்கிரமே இதைச் செய்துமுடிப்பார்களாக!
ஓ! கர்த்தரின் ஆலயமாம் ஒவ்வொரு விசுவாசியும் சர்வாங்க தகனபலிபீடமான இருதயத்தில் தங்களை ஜீவபலியாய் அர்ப்பணித்து, ஆலயத்தின் சகல பணிமுட்டுகளாம் உபயோகமுள்ள சிறிய, பெரிய பாத்திரங்களான குழந்தைகள் பெரியோரோடும், சமுகத்து அப்பங்களின் மேஜையான வசன நிலைப்பாட்டிலே தங்களைச் சுத்திகரிப்பார்களாக! அவர்கள் தங்களை முஸ்திப்பாக்கி பரிசுத்தம் பண்ணுவார்களாக! (2 நாளா 29:16 - 19)
ஒரு தனி மனிதனில் தொடங்கிய ஆரம்பம், மீதியான சிறு கூட்டமாய்ச் சேர்ந்து, ஒரு மனப்பட்டவர்களின் ஐக்கியமாய் எசேக்கியாவின் ஐந்தாவது அம்ச செயல்திட்டத்தைச் செய்து முடிப்பதில் முனைப்பாய் இறங்குகிறது.
தேவன் தமது வேதத்தின் மாதிரியின்படியே இன்னும் ஒரு முறை இந்த தேசத்தில் இதைச் செய்துமுடிக்கக் கிருபை செய்வாராக!
Author : Pr. Romilton