எல்லா தத்துவங்களும் ஆழமானவையாக இருந்தாலும் மூன்று சாராம்சங்களைக் கொண்டிருக்கின்றன: அன்பு, விசுவாசம் மற்றும் நம்பிக்கை. சுவாரஸ்யமாக வேதாகமத்தில் உள்ள மூன்று ஞானப் புத்தகங்களான பிரசங்கி, உன்னதப்பாட்டு மற்றும் யோபு இவற்றைக் கையாள்கின்றன.
1) பிரசங்கி:
நம்பிக்கை இல்லாத மனித வாழ்க்கை எப்படி மாயையானது, பிரயோஜனமற்றது, அர்த்தமற்றது, நோக்கமற்றது மற்றும் வீணானது என்பது பற்றிய நுண்ணறிவுகளை இந்தப் புத்தகம் வழங்குகிறது. உண்மையில், பிரசங்கி முடிக்கிறார்: “நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை" (பிரசங்கி 12:1). இளமைப் பருவத்தில் ஞானம் அல்லது செல்வம் அல்லது இன்பம் அல்லது சேவை அல்லது மதம் ஆகியவற்றைப் பின்தொடர்வது கவர்ச்சிகரமானதாக இருக்கலாம். ஆனால் சிருஷ்டிகரை அறியவில்லையென்றால், வாழ்க்கை விரக்தியிலும் நம்பிக்கையின்மையிலும் முடிந்துவிடும். ஆக, தேவன் மீதான விசுவாசமே இந்த உலகத்தில் மனித வாழ்வின் அடித்தளம். துரதிர்ஷ்டவசமாக, தத்துவவாதிகள் 'இன்மைக்கொள்கை' அதாவது 'எதிலுமே நம்பிக்கையின்மை' என்பதை நம்புகிறார்கள். ஆம், சத்தியத்தின் வெளிச்சம் அல்லது சிருஷ்டிகரோடு ஒரு உறவோ இல்லாவிட்டால் அது மாயையாகவோ அல்லது கட்டுக்கதையாகவோ அல்லது வீணானதாக மட்டுமே இருக்கும்.
2) யோபு:
அபூரணமான உலகில், வீழ்ந்த மனிதகுலத்தால் துன்பம் இருக்கும். மனிதர்கள் பிரச்சனை அல்லது இன்னல்கள் அல்லது துன்பத்திற்காக பிறந்தவர்கள், வருத்தம் அனுபவிக்க பிறந்திருக்கிறான் (யோபு 5:6-7). யோபு வாழ்க்கையில் கிட்டத்தட்ட எல்லாவற்றையும் இழந்தார், அவருடைய உடல்நலம் உட்பட, இறுதியாக அவரிடம் இருந்தது நம்பிக்கை மாத்திரமே. தீமை தற்காலிகமானது. ஆம், "காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது" (2 கொரிந்தியர் 4:17; ரோமர் 8:18-23).
3) உன்னதப்பாட்டு:
அன்பு வாழ்க்கைக்கு அர்த்தத்தை அளிக்கிறது, மேலும் இது உலகின் இறுதி விஷயமாக கருதப்படுகிறது. யோபு கர்த்தரின் முகத்தைப் பார்க்கும்போது, அவருடைய வார்த்தைகளைக் கேட்கும்போது மட்டுமே, அவர் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் நிறைந்திருக்கிறார். துன்பத்திற்குப் பின்னான அவரது வாழ்க்கை தேவனின் அன்பினாலும் மகிழ்ச்சியினாலும் நிரம்பியுள்ளது. அன்பு எப்போதுமே கொண்டாட்டம்தான். தேவ அன்பு இதயத்தை மகிழ்ச்சியில் நிரம்பி வழிய செய்கிறது. தேவ அன்பு பாவிகளை ஏற்றுக்கொள்கிறது, சுத்தப்படுத்துகிறது மற்றும் மாற்றுகிறது, இது விசுவாசிகளின் இதயங்களில் புதிய பாடல்களை உருவாக்குகிறது.
விசுவாசம் வாழ்க்கையின் அடித்தளம், நம்பிக்கை வாழ்க்கையின் நோக்கத்தை வழங்குகிறது, அன்பு வாழ்க்கைக்கு அர்த்தத்தை வழங்குகிறது. சிருஷ்டிகரான தேவன் மீது விசுவாசம்; அவரது நோக்கம், திட்டம், வாக்குறுதிகள் மற்றும் விருப்பத்தில் நம்பிக்கை; வாழ்க்கைக்கு அர்த்தத்தை வழங்குகிறது. ஆம், பவுல் இதை மிக அழகாக எடுத்துரைத்துள்ளார்; “இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது" (1 கொரிந்தியர் 13:13).
என் விசுவாசத்திற்கும் நம்பிக்கைக்கும் அடிப்படையான தேவனை நான் நேசிக்கிறேனா?
Author : Rev. Dr. J. N. Manokaran