"உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலது பாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு" (சங்கீதம் 16:11) என்பதாக தாவீது ராஜா எழுதியுள்ளான். தங்கள் பயணத்தில் தேவனுடைய சமூகம் அவர்களுடன் வர வேண்டும் என்று மோசே கெஞ்சினான் (யாத்திராகமம் 33:15). மத்தேயு 1:23ல் பார்ப்போமேயானால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இம்மானுவேல் என்று அழைக்கப்படுகிறார், இம்மானுவேல் என்றால் தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தம் எனப் படிக்கிறோம். ஆம், தேவ சமூகத்தில் அவருடைய மக்கள் பல காரியங்களைச் செய்ய முடியும்.
1)ஆவலாய் நாடுங்கள்:
"நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சிசெய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்" (சங்கீதம் 27:4) என்பதாக தாவீது எழுதியுள்ளான்.
2) ஆர்ப்பரியுங்கள்:
தேவ ஜனங்கள் அவரது சமூகத்தில் வெற்றியைக் கொண்டாட கெம்பீரமாய் ஆர்ப்பரிக்க முடியும் (சங்கீதம் 100:1). ஆம், தேவ சமூகத்தில் ஆனந்த சத்தம் எழுப்பப்படுகிறது. ஆசாரியர்கள் எக்காளங்களை ஊத, ஜனங்கள் கூச்சலிட, எரிகோவின் மதில் விழுந்தது என்பதாக யோசுவா 6:20ல் வாசிக்கிறோமே.
3) அகமகிழ்ந்து பாடுங்கள்:
தேவ சமூகத்தில் அவருடைய ஜனங்கள் அவரை துதித்து புகழ்ந்து பாடி தொழுது கொள்கிறார்கள். "நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீரசத்தமுண்டு; கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும்" (சங்கீதம் 118:15). கிறிஸ்தவ நம்பிக்கை என்பது மகிழ்ச்சியான, கொண்டாட்டமான மற்றும் விசுவாசத்தில் அகமகிழ்வதாகும். வேதாகமத்தில் நீண்ட புத்தகம் சங்கீதம், இது வேதாகமத்தின் மையப் பகுதியை ஆக்கிரமித்துள்ளது. பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் தேவனைத் துதித்து பாடுவதற்கு இசை பயன்படுத்தப்படுகிறது.
4) அமர்ந்திருங்கள்:
கர்த்தர் பேசும்போது, நாம் தேவனுக்கு முன்பாக அமைதியாக அமர்ந்திருத்தல் வேண்டும் (சங்கீதம் 62:5) கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டு மரியாள் தேவ சமூகத்தில் அமைதியாக அமர்ந்திருந்தாள் (லூக்கா 10:39). மறுரூப மலையில் தம் குமாரனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளைக் கேட்கும்படி தேவன் பேதுருவைக் கடிந்துகொண்டார் (மாற்கு 9:7). ஆம், நாம் அமர்ந்திருந்து, அவரே தேவனென்று அறிந்து கொள்ளுவோம் (சங்கீதம் 46:10).
5) அங்கலாய்ப்பை விட்டு விடுங்கள்:
யோசுவா முகங்குப்புற விழுந்து, ஆயில் இஸ்ரவேலர் தோற்கடிக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்தான் (யோசுவா 7:6-8). ஆம், நம் பாரத்தை அவர் மீது இறக்கலாம் (1 பேதுரு 5:7).
6) அயர்ந்த நித்திரை செய்யுங்கள்:
தேவன் நிம்மதியான உறக்கத்தை அருளுகிறார் (சங்கீதம் 127:2). தேவனின் அளவற்ற அன்புக்காகவும் கிருபைக்காகவும் ஜெபித்து, துதித்து, மகிமைப்படுத்தி ஒவ்வொரு இரவும் தூங்கச் செல்வது எப்போதும் நல்லது.
7) அர்ப்பணியுங்கள்:
அவருடைய பிரசன்னம் தான் நம்மை நாமே அர்ப்பணிக்கும் இடம். மேலும் நமது லட்சியங்களையும் விருப்பங்களையும் அவர் சமூகத்தில் அர்ப்பணிப்போமே. நம்மை நாமே பிரியமான ஜீவ பலியாக ஒப்புக் கொடுக்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை நினைவில் வைப்போம் (ரோமர் 12:1).
எல்லா நேரங்களிலும் தேவ பிரசன்னத்தை அனுபவிப்பது ஒரு உண்மையான விசுவாச சாகசமாகும்.
தேவ பிரசன்னத்தை எப்போதும் அனுபவிக்கும் ஆவிக்குரிய ஒழுக்கம் என்னிடம் உள்ளதா?
Author : Rev. Dr. J. N. Manokaran