ஒரு காபி ஷாப்பில் ‘மகிழ்ச்சியின் கோப்பை’ என்பதான விளம்பரத்தைப் பார்க்க முடிந்தது. ஈர்க்கக்கூடிய வாசகங்கள் அடங்கிய விளம்பரம் பல இளைஞர்களை அழைத்து வருகிறது. சூழல், வாசனை மற்றும் சுவை மகிழ்ச்சியின் உணர்வை எளிதாக்குகிறது. இருப்பினும், கோப்பையில் காப்பி முடிந்ததும், மக்கள் வெளியேற வேண்டும். ஆக மகிழ்ச்சியின் கோப்பை என்பது சில நிமிடங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
நிரம்பி வழியும் பாத்திரம்:
தாவீது தேவனை ஒரு நல்ல மேய்ப்பனுடன் ஒப்பிட்டார், அவரை தன் வாழ்க்கையில் கொண்டவர்கள் ஒருபோதும் பற்றாக்குறையில் இருக்க மாட்டார்கள் (சங்கீதம் 23:1). தேவைகளை மட்டும் பூர்த்தி செய்யாமல், கடினமான காலங்களில் பாத்திரம் நிரம்பி வழியும் படி கர்த்தர் மிகுதியாகக் கொடுக்கிறார் என்று அவர் மேலும் விளக்குகிறார் (சங்கீதம் 23:5). இது வெறும் பொருள் ஆசீர்வாதங்களுக்கு மட்டுப்படுத்தப்படவில்லை, ஆனால் புதிய உடன்படிக்கை சகாப்தத்தில் அவரிடம் கேட்பவர்களுக்கு ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் மற்றும் ஆவியின் ஊற்றாக இருக்கிறார் (லூக்கா 11:13; அப்போஸ்தலர் 2:1-4). இப்படி நிரம்பி வழியும் பாத்திரம் உடையவர்கள் மற்றவர்களுக்கு உத்வேகமாகவும் ஆசீர்வாதமாகவும் இருக்கிறார்கள்.
தேவ கோபாக்கினையின் பாத்திரம்:
மற்றொரு கோப்பையும் உள்ளது, அதில் பாவிகளுக்கு எதிரான தேவனின் பரிசுத்த கோபம் உள்ளது. பரிசுத்த தேவன் பாவத்துடன் சமரசம் செய்ய முடியாது. அந்த பாவத்தின் தண்டனை, மரணம், அடக்கம் பண்ணப்படுதல் மற்றும் உயிர்த்தெழுந்த தேவ குமாரன் மூலம் மனிதர்கள் மன்னிப்பைப் பெறுவதே ஒரே முறையான வழி. மரணத்தை ருசிப்பதென்றால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து செய்தபடி கோபத்தின் பாத்திரத்தில் பருகுவதாகும். கெத்செமனே தோட்டத்தில், பிராயச்சித்தத்திற்கு வேறு ஏதேனும் வழி இருக்கிறதா என்று தந்தையிடம் கேட்டு கெஞ்சினார். மனிதகுலத்தின் சார்பாக, அவர் தேவ கோபத்தின் பாத்திரத்தை கையில் எடுத்தார்.
தத்தளிப்பின் பாத்திரம்:
“கர்த்தராகிய உன் ஆண்டவரும் தம்முடைய ஜனத்துக்காக வழக்காடப்போகிற உன் தேவனுமானவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, தத்தளிப்பின் பாத்திரத்தை உன் கையிலிருந்து நீக்கிப்போடுகிறேன், இனி என் உக்கிரத்தினுடைய பாத்திரத்தின் வண்டல்களை நீ குடிப்பதில்லை” (ஏசாயா 51:22). தேவனின் தண்டனை என்பது தத்தளிப்பின் பாத்திரம் அல்லது தேவ கோபாக்கினையின் பாத்திரம் என விவரிக்கப்படுகிறது. தேவனையும், அவருடைய நியமனங்களையும் நிராகரித்ததற்காகவும், அந்நிய கடவுள்களை வணங்கியதற்காகவும் யூதா தேசத்தை தேவன் தண்டித்தார். பாபிலோனியர்கள் தேசத்தை முற்றிலுமாக அழித்தார்கள். அவர்களால் கோப்பையை உறுதியாகப் பிடிக்கக் கூட முடியாத அளவுக்குத் தத்தளிக்கும் பாத்திரத்தை தேவன் கொடுத்தார். அதன் விளைவு பாழ்க்கடிப்பும், சங்காரமும், பஞ்சமும், பட்டயமும் வந்தன (ஏசாயா 51:18).
எருசலேம் ஒரு தத்தளிப்பின் பாத்திரம்:
(சகரியா 12:2 ) தேவன் தம் மக்களை தண்டிக்கிறார். இருப்பினும், தேவ ஜனங்களின் எதிரிகள் இரக்கமற்றவர்களாக இருந்தார்கள், அவர்களுடைய கொடூரமான தாக்குதலில் எந்த இரக்கமும் காட்டவில்லை. தேவனுக்கு எதிராகக் கலகம் செய்து, தேவனின் பரிசுத்தவான்களைத் துன்புறுத்தும் அனைத்து நாடுகளுக்கும் தேவன் ஒரே பாத்திரத்தையேக் கொடுப்பார்.
நான் ஒரு நிரம்பி வழிகிற பாத்திரமா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்