மில்கா சிங் என்பவர் இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவர். 1958 இல் கார்டிஃபில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய தடகள வீரர் இவர்தான். டாக்டர் ஆர்தர் W. ஹோவர்ட் என்பவர் தான் இவரின் பயிற்சியாளராக இருந்தார், அவர் கார்டிஃபிலும் கலந்து கொண்டார், அப்போதெல்லாம் பயிற்சியாளர்கள் உடன் பயணிப்பதில்லை. ஆர்தர் இங்கிலாந்தில் ஒரு இடைவெளியுடன், அமெரிக்காவிற்கு தனது வீட்டிற்கு பயணத்தைத் திட்டமிட்டார். அப்போது தென்னாப்பிரிக்க மால்கம் ஸ்பென்ஸ் வெற்றிப் பெறுவதற்குதான் அதிக வாய்ப்பு இருந்தது. ஆர்தர் இரவு முழுவதும் மில்காவின் அருகில் உட்கார்ந்து யோசித்தவர் ஒரு உத்தியை பகிர்ந்தார். ஸ்பென்ஸ் முதலில் 350 மீ வேகத்தில் சாதாரண வேகத்தில் ஓடி பின்னர் வெற்றிக்காக வேகப்படுத்துவார். ஆனால் 'நீங்கள் நல்ல பயிற்சிகள் பெற்றுள்ளதால் ஆரம்பத்திலேயே முழு ஆற்றலுடன் ஓடி ஜெயித்து விடுங்கள்' என்பதாக கூறினார். மில்கா தனது சுயசரிதையில் இந்த தந்திரோபாயம் எவ்வாறு செயல்பட்டது என்பதை எழுதியுள்ளார். மற்ற விவரங்களை புத்தகத்தில் படித்து தெரிந்து கொள்ளலாம் (நிதின் சர்மா, இந்தியன் எக்ஸ்பிரஸ், ஜூன் 20, 2021). எனினும், மில்கா சிங்கின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் மெத்தடிஸ்ட் மிஷனரியும், தேசிய விளையாட்டு நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவருமான டாக்டர் ஆர்தர் ஹோவர்ட் பற்றி குறிப்பிடப்படவில்லை. டாக்டர் ஆர்தர் ஹோவர்ட் 1948 முதல் 1962 வரை தேசிய பயிற்சியாளராக பணியாற்றினார். ஆர்தர் யதேச்சையாக மறந்துவிடப்பட்டாரா அல்லது வேண்டுமென்றே மறைக்கப்பட்டாரா?
ஆமாம், யதேச்சையாக மறக்கப்பட்ட அல்லது வேண்டுமென்றே மறைக்கப்பட்ட நன்மை செய்தோர் பலர் உள்ளனர். ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு போஷிக்கும் பொருட்டு ஆண்டவராகிய இயேசுவிடம் தனது ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொடுத்த சிறிய பையனின் பெயர் குறிப்பிடப்படவில்லை (மத்தேயு 14: 13-21). சீரியா ராஜாவின் படைத் தளபதியாகிய நாகமான் என்பவன் குணப்பட உதவிய அடிமைப் பெண்ணின் பெயரும் குறிப்பிட படவில்லை (2 இராஜாக்கள் 5: 1-14).
ஏழு வருட பஞ்சத்திலிருந்து எகிப்தைக் காப்பாற்றியதில் இருந்த யோசேப்பின் பங்களிப்பு வேண்டுமென்றே மறக்கப்பட்டது. யோசேப்பை அறியாத ஒரு புதிய தலைமுறை இஸ்ரவேல் ஜனங்களை இரக்கமின்றி ஒடுக்கியது (யாத்திராகமம் 1: 8; அப்போஸ்தலர் 7:18). "அதிலே ஞானமுள்ள ஒரு ஏழை மனிதன் இருந்தான்; அவன் தன் ஞானத்திலே அந்தப் பட்டணத்தை விடுவித்தான்; ஆனாலும் அந்த ஏழை மனிதனை ஒருவரும் நினைக்கவில்லை" (பிரசங்கி 9:15).
ஆனால் நாமெல்லாம் நினைவில் கொள்வோம்; "உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்குக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே" (எபிரெயர் 6:10). ஆக நன்மை செய்பவர்களை மறப்பது என்பது அநீதி! ஆனால் தேவ பிள்ளைகள் தங்களை ஆசீர்வதித்தவர்களை மறக்காமல் இருக்க கூர்மையான நினைவாற்றலைக் கொண்டிருக்க வேண்டும்; தங்களுக்கு நன்மை செய்தவர்களைக் கனப்படுத்த வேண்டும்; அவர்களுக்காக தேவனுக்கு நன்றிகளைச் செலுத்த வேண்டும்.
தேவனிடம் நன்றி செலுத்தும் பொருட்டு எனக்கு நன்மை செய்பவர்களை மறவாமல் நினைத்திருக்கிறேனா?
Author : Rev. Dr. J. N. Manokaran