சுவிட்சர்லாந்தில் எக்ஸிட் இன்டர்நேசனல் என்ற லாப நோக்கமற்ற அமைப்பு, தற்கொலை செய்து கொள்ளும் மிஷின் ஒன்றை வடிவமைத்து அதற்கு அங்கீகாரமும் பெற்றுள்ளது. அந்த இயந்திரத்தின் மூலம் நொடிப்பொழுதில் வலியே இல்லாமல் தற்கொலை செய்து கொள்ள முடியும். இந்த இயந்திரம் கல்லறை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. தற்கொலை செய்து கொள்ள விரும்புபவர்கள் இந்த கல்லறைக்குள் அவர்களே சென்று அமர்ந்து உள்ளே இருந்தே அந்த மிஷினை ஆன் செய்து உயிரிழக்க முடியும். வெறும் ஒரு சில நிமிடங்களில் உயிர் பிரிந்துவிடும். முக்கியமாக எந்த வித வலியும் இல்லாமல் உயிர் பிரியும். இந்த மிஷினை பயன்படுத்தி சுவிட்சர்லாந்தில் கடந்த ஒராண்டில் மட்டும் 1300 அங்கீகரிக்கப்பட்ட தற்கொலைகள்/ கருணைகொலைகள் நடந்துள்ளது. அவர்களுக்காக இந்த மிஷின் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மிஷினிற்கு சார்கோ (sarco) என பெயரிடப்பட்டுள்ளது (இந்தியன் எக்ஸ்பிரஸ், 7 டிசம்பர் 2021). மக்கள் கண்ணியத்துடன் வாழ உதவுவதற்குப் பதிலாக, அவர்கள் இறப்பதற்கு உதவுகிறார்கள்.
வேதாகமத்தில் சில தற்கொலைகள் உள்ளன; அபிமெலேக், சவுல், சவுலின் ஆயுததாரி, அகித்தோப்பேல், சிம்ரி மற்றும் யூதாஸ் (நியாயாதிபதிகள் 9:54; 1 சாமுவேல் 31:4-6; 2 சாமுவேல் 17:23; 1 இராஜாக்கள் 16:18; மத்தேயு 27:5). சவுலின் ஆயுதம் ஏந்தியவரைப் பற்றி மட்டும் எதுவும் குறிப்பிடப்படவில்லை, மற்ற அனைவரும் பொல்லாதவர்களே. சிம்சோன் ஒரு மனித வெடிகுண்டு போல, எதிரிகளுடன் சேர்ந்து தன்னைத்தானே அழித்துக் கொண்டான். அது கிட்டத்தட்ட போரில் கொல்லப்படுவது போல் இருந்தது (நியாயாதிபதிகள் 16:26-31).
பத்து கட்டளைகள் கொலையை பாவம் என்று கற்பிக்கின்றன, அப்படியானால், சுய கொலையும் (தன்னை தான் கொல்வது) பாவம் தானே (யாத்திராகமம் 20:13). விசுவாசிகள் தங்கள் காலங்கள் கர்த்தரின் கைகளில் இருப்பதை அறிந்திருக்கிறார்கள் (சங்கீதம் 31:15). உலகில், தங்கள் பிரச்சனைகளின் நிமித்தமாக கூட, ஒருவர் தற்கொலைக்குத் தள்ளப்படலாம். ஒரு கட்டத்தில் தீர்க்கதரிசிகளான யோனா மற்றும் எலியா போன்றோர் கூட மரிக்க விரும்புவதாக தெரிவித்தனர் (1 இராஜா 19:4; யோனா 4:8). பவுலும் கூட இதே மாதிரியான மனஅழுத்தத்தின் கீழ் இருந்தார், ஆனால் அதை தாங்கிக் கொள்ளவும் அதை கடந்து வரவும் தனக்கு திராணி இருந்ததாக உணர்ந்தார் (2 கொரிந்தியர் 1:8).
மனிதர்கள் தேவ சாயலில் படைக்கப்பட்டுள்ளனர். உயிரைக் கொடுப்பதற்கும் உயிரைப் பறிப்பதற்கும் இறையாண்மையுள்ள கடவுளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. தற்கொலை என்பது தேவனுக்கு எதிரான கலகம்; மேலும் அது அவரது அதிகாரத்தை அபகரிக்க முயற்சிக்கிறது. தற்கொலை என்பது தேவ அன்பு, திட்டம் மற்றும் வாழ்வின் நோக்கத்தை நம்புவதில்லை. எல்லா மனிதர்களின்மேலும் தேவ நோக்கம் இருக்கிறது என்பதை அறிவோம்.
சார்கோ என்பது சட்டப்படி சரியாக இருக்கலாம் ஆனால் அது ஒழுக்கக்கேடானது மற்றும் ஆவிக்குரிய காரியமும் அல்ல. விசுவாசிகள் கர்த்தரையும் அவருடைய வாக்குத்தத்தையும் நம்ப வேண்டும். “மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்" (1 கொரிந்தியர் 10:13).
தேவன் கொடுத்த வாழ்க்கையை நான் கொண்டாடுகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்