கிறிஸ்தவ வாழ்க்கை என்பது விதிகள் அல்லது கொள்கைகள் அல்லது தத்துவங்களின் தொகுப்பு அல்ல. இது அன்பான ஆண்டவருடனான இயேசு கிறிஸ்துவுடன் உள்ள நெருங்கிய உறவு. பொதுவாக, இஸ்ரவேலர்கள் தங்களை திராட்சைச் செடி என்று நினைத்தனர். ஆண்டவர் தன் சீஷர்களுடனான உரையாடலில், "நான் உண்மையான திராட்சைச் செடி" என்று கூறினார்.
1) நிலைத்திரு:
அவர் தம் சீஷர்களை தன்னில் நிலைத்திருக்க அழைத்தார். கர்த்தருக்குள் நிலைத்திருக்கும்போது அவரது சித்தத்தைத் தேர்ந்தெடுப்பதிலும், நேர்மையான தேர்வுகளை மேற்கொள்வதிலும், தேவனை மகிமைப்படுத்தும் முடிவுகளை எடுப்பதிலும் பிரதிபலிக்கிறது. சீஷர்கள் கர்த்தராகிய இயேசுவில், அவருடைய அன்பில், அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய சந்தோஷத்தில் நிலைத்திருக்க வேண்டும் (யோவான் 15: 4,9,10,11). ஆம், நாம் அவரிடத்தில் நிலைத்திருக்கும் போது ஆண்டவர் நம்மிடத்தில் நிலைத்திருக்கிறார் (யோவான் 15: 4).
2) ஒழுங்காயிரு:
கிறிஸ்து இல்லாமல் சீஷர்களால் எதையும் சாதிக்க முடியாது. பிதா திராட்சைத் தோட்டக்காரர். கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப் போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார். அப்படி நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல ஆகின்றது, அது வாடி உதிர்ந்து விடும்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடப்பட்டு அவைகள் எரிந்து போகின்றது (யோவான் 15: 6). ஆம், மத்தேயு 3:10ல்; இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது. ஆகையால் நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும் என்பதாக யோவான் ஸ்நானகன் தெரிவிக்கின்றானே.
3) ஏராளமான கனி கொடு:
கனி தருவது என்பது இயற்கையானது மற்றும் தவிர்க்க முடியாதது. தரம் மற்றும் அளவு வேறுபடலாம், ஆனால் கனிகள் தவிர்க்க முடியாதவை. கனிகள் முப்பது அல்லது அறுபது அல்லது நூறு சதவீதம் இருக்கலாம். கனியை மற்றவர்கள் அனுபவித்து பயனடைய வேண்டும். "யோசேப்பு கனிதரும் செடி: அவன் நீர் ஊற்றண்டையிலுள்ள கனிதரும் செடி: அதின் கொடிகள் சுவரின்மேல் படரும்" (ஆதியாகமம் 49:22). "துரதிர்ஷ்டவசமாக, இஸ்ரவேல் பலனற்ற திராட்சச்செடி, அது தனக்குத்தானே கனிகொடுக்கிறது" (ஓசியா 10:1). கனி என்பது இனப்பெருக்கம் அல்லது பெருக்கத்திற்கான விதைகளுக்கானது. மனந்திரும்புதலின் கனி , ஆவியின் கனி, உதடுகளின் கனி (ஸ்தோத்திரபலி) மற்றும் சீஷர்களை உருவாக்கும் கனி ஆகியவை ஒரு சீஷனிடமிருந்து எதிர்பார்க்கப்படும் கனிகள் ஆகும் (மத்தேயு 3: 8: கலாத்தியர் 5: 22,23; எபிரெயர் 13:15).
4) பாதகமான சூழல்:
இந்த உலகம் பகைக்கக் கூடியது ஏனென்றால் அது முதலில் இயேசு கிறிஸ்துவை வெறுத்தது. தேவன் தனது சீஷர்களை உலகிலிருந்து பிரித்தெடுத்தார், எனவே சீஷர்களையும் உலகம் வெறுக்கிறது. எஜமானனை வெறுக்கும் உலகம் அவரின் சீஷர்களையும் வெறுக்கும் என்பது நிச்சயம் தானே. துன்புறுத்துபவர்கள் ஆண்டவருக்கு செவி கொடுத்தால், அவருடைய சீஷர்களுக்கும் செவி கொடுப்பார்கள் அல்லவா!
கர்த்தராகிய ஆண்டவர் நம்மிலும், நாம் அவரிடத்திலும் நிலைத்திருக்கிறோமா?
Author: Rev. Dr. J. N. Manokaran