அழகான நர்சரி ரைம், அழகான படைப்பிற்காக சிருஷ்டிக் கர்த்தரை வியந்து போற்றவும் கற்றுக்கொடுக்கிறது.
டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்,
ஹவ் ஐ வொன்டர் வாட் யூ ஆர்,
அப் அபோவ் த வர்லட் சோ ஹை,
லைக் அ டைமன்ட் இன் த ஸ்கை
நான்காவது நாளில் கர்த்தர் சூரியனையும் சந்திரனையும் முறையே பகலையும் இரவையும் ஆளப் படைத்தார். “தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார். அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும். பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்” (ஆதியாகமம் 1:16-18). கோடிக்கணக்கான விஞ்ஞானிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொலைநோக்கிகள் மூலம் கண்ட பல ஆராய்ச்சி மையங்களும் “நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்” என்ற சொற்றொடரைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
எண்ணற்ற நட்சத்திரங்கள்:
தேவன் நட்சத்திரங்களைப் படைத்தார், அவை எண்ணற்றவை. ஆபிரகாமின் சந்ததியினர் நட்சத்திரங்களைப் போல எண்ணற்றவர்களாக இருப்பார்கள் என்று தேவன் வாக்குறுதி அளித்தார் (ஆதியாகமம் 15:5). வானியலாளர்கள் நட்சத்திரங்களை எண்ண முயன்றனர். கெப்லர் 1005, ஹிப்பர்கஸ் 1022, தாலமி 1056, பிராஹே 777 என்று கூறினார்கள், பின்னர் கலிலியோ உள்ளிட்ட விஞ்ஞானிகள் நட்சத்திரங்களை எண்ண முடியாது என்று முடிவு செய்தனர். வெறும் சாதாரணக் கண்ணால் சுமார் 6000 நட்சத்திரங்களைப் பார்க்க முடியும். இருப்பினும், தேவன் நட்சத்திரங்களின் எண்ணிக்கையை அறிந்திருக்கிறார், அவற்றைப் பெயரால் அழைக்கிறார் (எண்களால் அல்ல) (சங்கீதம் 147:4)
அறிகுறி மற்றும் திசை:
தேவன் நட்சத்திரங்களை ஒரு அடையாளமாகப் படைத்தது போல, சில நட்சத்திரங்கள் பயணம் அல்லது பிரயாணத்திற்கான திசையைப் பெறுவதற்கான அறிகுறிகளாக செயல்படுகின்றன. கடல்களில் கப்பல்களுக்கும், பாலைவனத்தில் கேரவன்களுக்கும் திசையை வழங்கும் சுமார் ஐம்பத்தேழு வழிசெலுத்தும் நட்சத்திரங்கள் உள்ளன.
சோதிடம் மற்றும் நட்சத்திரங்கள்:
சிலர் நட்சத்திரங்களின் நிலையை வைத்து எதிர்காலத்தை முன்னறிவிப்பார்கள். அவர்கள் தேவனுக்கு முன்பாக சக்தியற்றவர்கள், அவர்களை நம்புவது வீண் (ஏசாயா 47:13).
அலைந்து திரியும் நட்சத்திரங்கள்:
வால் நட்சத்திரங்கள், தோன்றும் மற்றும் மறைந்துபோகும் நட்சத்திரங்கள் ஆகும். சில கிறிஸ்தவத் தலைவர்கள் மக்களை சிறிது நேரம் வியப்பில் ஆழ்த்தி இருளில் மறைகிறார்கள் (யூதா 1:13). கணிக்க முடியாத மற்றும் நிலையற்ற நட்சத்திரங்கள் வழிகாட்டுதலுக்கும் வழிசெலுத்தலுக்கும் நல்லதல்ல. வேதத்தில் உண்மையாக இல்லாத ஊழியர்கள் ஏமாற்றுபவர்கள், பயனற்றவர்கள், நம்பகமானவர்கள் அல்ல, மற்றவர்களை இருளில் தள்ளுவார்கள்.
நீதியின் நட்சத்திரங்கள்:
“ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்” (தானியேல் 12:3). கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, விசுவாசத்தினால் நீதிமான்களாக அறிவிக்கப்படுகிறவர்களே ஞானவான்கள். அவர்கள் வழிகாட்டிகளாகவும், ஆவிக்குரிய இருளில் இருந்து மக்களை வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்லவும் முடியும்.
அற்புதமும் அதிசயமுமான சிருஷ்டிக் கர்த்தரை நான் ஆராதிக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்