வாழ்க்கை என்பது ஒரு பயணத்துடன் ஒப்பிடப்படுகிறது. மனிதர்களுக்கு தாங்கள் எதை நோக்கி செல்கின்றோம் என்பது தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் வாழ்க்கை என்னும் பயணம் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கும். இதில், ஆவிக்குரிய வாழ்வு என்பது ஒரு புனிதமான யாத்திரை என்று சொல்லலாம். இதில் நுழைவு வாயில், குறிப்பிட்ட பாதை மற்றும் இலக்கு என உள்ளது. இந்த பாதையில் தான் லட்சக்கணக்கானோர் பயணம் செய்துள்ளனர். கர்த்தராகிய இயேசு 'நானே வாசல்' என்கிறார் (யோவான் 10: 9). மத்தேயு 7:14 ல் கூறியிருக்கப்படி, "ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்". ஆம், அதை கண்டுபிடிப்பவர்களாய், அதையே தேர்ந்தெடுப்பவர்களாய் நாமும் இருக்க வேண்டும். நம்முடைய அறுதி இறுதி இலக்கு அவருடன் என்றென்றும் இருக்க வேண்டும், அதுவும் அவர் நமக்காக ஆயத்தம் பண்ணின இடத்தில் இருக்க வேண்டும் (யோவான் 14: 1). பேதுருவும் இப்படி ஒரு அற்புதமான பயணத்தைக் கொண்டிருந்தார். ஒவ்வொரு நபருக்கும் தனித்துவமான அனுபவங்கள் இருக்கும், ஆனால் இது ஒரு மாதிரி உருவம் போல் தெரிகிறது.
1) திகைத்தல்:
பேதுரு தனது படகைக் கேட்டுப் பெற்ற ஆண்டவரின் வேண்டுகோளையும் அந்தப் படகை போதிக்கும் தளமாக பயன்படுத்தியதைக் கண்டு திகைத்துப் போனார் (லூக்கா 5: 1-3). சமாரியப் பெண்ணும் இப்படிதான், தன்னிடம் ஆண்டவர் குடிக்கத் தண்ணீர் கேட்டதும் திகைத்துப் போனாள். ஆண்டவராகிய இயேசு தன்னுடைய வீட்டிற்கு வரப் போவதையும் தன்னோடு தங்கப் போவதாக கூறியதையும் கேட்ட சகேயு திகைத்தான். நமக்கும் கூட இப்படிப்பட்ட குறிப்பிடத்தக்க அல்லது மறக்க முடியாத தருணம் அமையும்.
2) அதிர்ச்சியடைதல்:
கர்த்தராகிய இயேசு பேதுருவிடம் மீன்பிடிக்கும்படி வலையைப் போடச் சொன்னார்; என்னே ஆச்சரியம்.. கடலில் போட்ட வலையைக் கரைக்கு கொண்டு வர மற்றவர்களின் உதவி பேதுருவிற்கு தேவைப்பட்டது (லூக்கா 5: 4-7). கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை சந்திக்கும் அனைவரும் அவருடைய அன்பு, வல்லமை மற்றும் ஆளுமை ஆகியவற்றைக் கண்டு பிரமிப்படைகிறார்கள். ஆம், ஒருபோதும் தாகமே எடுக்காத ஜீவத் தண்ணீரை அவரால் வழங்க முடியும் என்றவுடன் சமாரியப் பெண் அதிர்ச்சியடைந்தாள். யூதத் தலைவர்களுடன் ஒப்பிடும்போது, வரி வசூலிப்பவர்களிடம் எல்லாம் யார் பழகுவார்கள், ஆனால் ஆண்டவர் சகேயுவுடன் இரவு உணவு அருந்த விரும்பினாரே.
3) அசைக்கப்படுதல்:
நடந்ததையெல்லாம் கண்ட பேதுருவின் உள்ளம் அசைக்கப்பட்டது, அதனால் பேதுரு ஆண்டவராகிய இயேசுவிடம் தான் ஒரு பாவி, நீர் என்னை விட்டு போக வேண்டும் என்றான் (லூக்கா 5: 8-10). சமாரியப் பெண் அசைக்கப்பட்டதின் நிமித்தம் தன் பாவ வாழ்க்கையை தேவன் வெளிப்படுத்தினார் என்றும் தான் மாற்றம் பெற்றேன் என்றும் கிராமவாசிகளிடம் துணிவுடன் சொல்ல முடிந்தது. சகேயுவும் தனது பாவத்தை அறிந்து, மனந்திரும்பி, அவன் ஏமாற்றிய, தவறாக சம்பாதித்த, கொள்ளையடித்த மற்றும் சுருட்டிய அனைத்தையும் அனைவருக்கும் திருப்பிச் செலுத்துவதாக உறுதியளித்தான்.
4) தயாராகுதல்:
இவ்வாறு நிலையற்ற புல் போல இருந்த பேதுரு உறுதியான கல்லாக உருவம் பெற்றான் (லூக்கா 5: 10-11). இதுபோல தான் ஒவ்வொரு சீஷனின் பயணமும் அமைகின்றது, ஒரு சிற்பியின் திட்டத்தின்படி வடிவமைக்கப்பட்டு இறுதியில் ஒரு அழகிய வேலைப்பாடு வெளிக்கொணரப்படுகிறது. "ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்" (எபேசியர் 2:10).
தற்போது நான் எந்த நிலையில் இருக்கிறேன்: திகைத்துக் கொண்டா, அதிர்ச்சியடைந்தா, அசைக்கப்பட்டா அல்லது தயார் நிலையிலா?
Author : Rev. Dr. J. N. Manokaran