உணவுக்குழாயை அழுத்தும் நோய், விழுங்கவியலாமை அதாவது உணவை விழுங்குவதில் சிரமம் ஏற்படுவதைக் குறிக்கிறது. அதிலும் சிலருக்கு திரவப் பொருட்களைக் கூட அதாவது உமிழ்நீரை விழுங்குவதில் கூட சிரமம் உள்ளது. இரைப்பை வாதம் என்பது ஒரு நோயாகும், இது செரிமானதிற்கு அதிக நேரம் எடுக்கும். தாமதமாக இரைப்பை செயல்படுவதை இது குறிக்கிறது. விழுங்கவியலாமை மற்றும் இரைப்பை வாதம் ஆவிக்குரிய நிலையிலும் உள்ளது. "காலத்தைப் பார்த்தால், போதகராயிருக்கவேண்டிய உங்களுக்கு தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களை மறுபடியும் உபதேசிக்கவேண்டியதாயிருக்கிறது; நீங்கள் பலமான ஆகாரத்தையல்ல, பாலை உண்ணத்தக்கவர்களானீர்கள். பாலுண்கிறவன் குழந்தையாயிருக்கிறபடியினாலே நீதியின் வசனத்தில் பழக்கமில்லாதவனாயிருக்கிறான். பலமான ஆகாரமானது நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சி செய்யும் ஞானேந்திரயங்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கே தகும்" (எபிரெயர் 5:12-14).
பக்குவம்:
"சகல துர்க்குணத்தையும், சகலவித கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமைகளையும், சகலவித புறங்கூறுதலையும் ஒழித்துவிட்டு நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்" (1 பேதுரு 2:2-3). அதற்காக எப்போதும் குழந்தைகளாகவே இருக்கக்கூடாது. விசுவாசிகள் வளர வேண்டும், அப்போது தானே மற்ற உணவை ஜீரணிக்க முடியும். ஒரு சில சத்திய வசனங்கள், பிடித்த வசனங்கள், சமூக வலைதளங்களில் பார்க்கும் வசனங்கள், சுவரொட்டிகளில் காணும் வசனங்கள் மற்றும் எப்போதாவது பிரசங்கங்களைக் கேட்பதில் பிழைக்கும் விசுவாசிகள் என பலர் உள்ளனர். இதெல்லாம் வளர்ச்சிக்கு உதவாது, ஆனால் ஊட்டச்சத்து குறைபாடும் பலவீனமும் மாத்திரமே ஏற்படும்.
பகுத்தறியும் வல்லமை:
ஒரு நபர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் வரும்போது, அந்நபருடைய மனம் திறந்ததாகவும், புதுப்பிக்கப்பட்டதாகவும், பகுத்தறிவும் நித்திய கண்ணோட்டமும் நிறைந்ததாக இருக்கும். இந்த பகுதிப் பயன்படுத்தப்படாவிட்டால், நித்திய தெரிவுகளுக்குப் பதிலாக அந்நபர் சாதாரணமான தெரிவுகளைச் செய்கிறார். உடன்படிக்கை ஆசீர்வாதம் மற்றும் வாக்குத்தத்ததை உள்ளடக்கிய முதற்பேறான சுதந்தரத்தை விட ஏசா ஒரு வேளை உணவைத் தேர்ந்தெடுத்தான் (ஆதியாகமம் 25:29-34).
பயிற்றுவிக்கப்படல்:
ஆயினும்கூட, பகுத்தறிவு திறன்கள் பயன்படுத்தப்பட வேண்டும், மேம்படுத்தப்பட வேண்டும் மற்றும் பயிற்சியுடன் புதுப்பிக்கப்பட வேண்டும், அப்போது சூழல் விரைவாக மாறுகிறது, ஆக, பயிற்சி இன்றியமையாததாகிறது. புதிய சவால்கள், புதிய வகையான சோதனைகள், புதிய கவனம் மற்றும் அறிவின் அதிகரிப்பு ஆகியவை உள்ளன. நீதியான செயல்களுக்காக தேவனுடைய வார்த்தையின் மூலம் பயிற்சி அளிக்கப்படுதல் அவசியமாகிறது.
தொடர் பயிற்சி:
மற்ற திறமைகளைப் போலவே பகுத்தறியும் திறன்களும் நிலையான பயிற்சியின் மூலம் மேம்படுத்தப்பட்டால் சரியானதாக இருக்கும். தேவனுடைய வார்த்தையைப் படிப்பது, வாசிப்பது, தியானிப்பது, மனப்பாடம் செய்வது மற்றும் கற்பிப்பது என இருக்கும்போது அந்நபர் தேவ ஞானத்தில் வளர உதவுகிறது.
நன்மை தீமைகளை வேறுபடுத்துதல்:
சரியான, புத்திசாலித்தனமான மற்றும் தேவனை மதிக்கும் தெரிவுகளை செய்வதே இதன் நோக்கம். உலகம் சிக்கலானது. நன்மையும் தீமையும் தெளிவாகத் தெரியாத பல பகுதிகள் உள்ளன. பலவகை கலவையுடனும் மற்றும் சிக்கலாகவும் தெரிகிறது. எனவே, வேதத்தின் வெளிச்சத்தில் சூழ்நிலைகள், சூழல்கள், சிக்கல்கள் மற்றும் பிரச்சனைகளை மதிப்பீடு செய்வது மிக அவசியம்.
நான் குழந்தையா அல்லது ஆண்டவரின் பக்குவமுள்ள பிள்ளையா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்