நான் பாவியா அல்லது பரிசுத்தவானா? இது இப்போது புதிதாக கிறிஸ்தவர்கள் எதிர்கொள்ளும் குழப்பம் எனலாம். இதைப் பயன்படுத்திக் கொள்ளும் சில வழிபாட்டு குழுக்கள் உள்ளன, அதிலும் குறிப்பாக தேவ வார்த்தையின் அடிப்படையில் இரட்சிப்பின் நிச்சயத்தை அனுபவிக்காதவர்கள் தங்களுக்கு சாதகமாக உபயோகிக்கிறார்கள். இன்னும் சொல்ல வேண்டுமெனில், இந்த குழுக்கள் தங்கள் திரிபுபடுத்தப்பட்ட போதனைகளை விசுவாசிகள் ஏற்றுக்கொள்ளும்படி வேதவசனங்களை திரிக்கிறார்கள். உண்மையில், கிறிஸ்தவ வாழ்க்கை என்பது தேவனுடைய பணி.
1) பாவி:
"எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி…" என ரோமர் 3:23ல் வாசிக்கிறோம். தேவனுடைய ஆவியானவர் தேவ வார்த்தையின் மூலம் ஒருவரைக் கண்டிக்கும் போது அல்லது பாவத்தை உணர்த்தும்போது அவர் மனந்திரும்பி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கிறார். இப்போது அந்த நபர் நீதிமானாக்கப்படுகிறார் (ரோமர் 5:1; 8:33). இப்போது இந்த போதனையை திரிப்பவர்கள் “நீ பாவியா இல்லையா?” என்று கேள்வி கேட்பார்கள். நாம் பாவி என்று சொன்னால் அவர்கள் நம்மை தங்கள் சபையில் சேரச் சொல்வார்கள். நாம் இல்லை என்று சொன்னால், நாம் பொய்யர்கள் என்று சொல்வார்கள். "நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது" (1 யோவான் 1:8,10). எனவே, அவர்கள் நாம் பாவிகள் என்று சொல்வார்கள், நாம் அவர்களுடைய சபை அல்லது குழுவில் சேர வேண்டியிருக்கும்.
2) பரிசுத்தவான்:
பாவிகளாகவே இருந்து விடாமல், பரிசுத்தவான்களாக இருக்கவே கர்த்தர் நம்மை அழைத்திருக்கிறார் (ரோமர் 1:7). நமது கடந்தகால பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன; இந்த உலகில் ஒவ்வொரு நாளும் நாம் எதிர்கொள்ளும் சோதனைகளை முறியடிப்பதன் மூலம் நாம் ஜெயம் கொள்கிறவர்களாக இருக்க வேண்டும். இது ஒரு போராட்டம், ஆவிக்குரிய யுத்தம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆவிக்குரிய கவசத்தை எடுத்துக்கொண்டு, நாம் சாத்தான், உலகம் மற்றும் மாம்சத்திற்கு எதிராக போராட வேண்டும் (எபேசியர் 6:11-18) என வேதாகமம் தெளிவாக கூறுகிறது அல்லவா.
3) பரிபூரணம்:
கள்ளப் போதகர்கள் இந்த வசனத்தை மேற்கோள் காட்டி நீங்கள் நேர்த்தியானவரா என்று கேட்கிறார்கள். "ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்" (மத்தேயு 5:48). நாம் இல்லை என்று சொன்னால், அவர்கள் யோவான் அத்தியாயத்தில் உள்ள வசனத்தைக் காட்டி, நாம் பொய்யர்கள் என்று சொல்வார்கள். ஆம் என்று சொன்னால் ‘எப்படி’ என்று கேட்பார்கள். "அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்" (1 யோவான் 3:2-3) அவர் தோன்றும்போது நாமும் அவரைப்போல் இருப்போம் என்று அப்போஸ்தலனாகிய யோவான் தெளிவாகக் கூறுவது இன்றியமையாத மேற்கோளாகும். தேவன் நம் வாழ்வில் செயல்பட்டு நம்மை பரிபூரணமாக்குகிறார்.
பரிபூரணமாக மாற நான் மகிழ்ச்சியுடனும் முழு மனதுடனும் தேவனுடன் ஒத்துழைக்கிறேனா?
Author : Rev. Dr. J. N. Manokaran