அழகான தேவபக்தியுள்ள பாடலில் காத்திருப்பின் ஏழு அம்சங்களைப் பற்றி தாவீது எழுதுகிறான். கிறிஸ்தவ வாழ்க்கை என்பது தேவனுக்காக காத்திருப்பதும், எப்போதும் அவருடைய சித்தத்தைச் செய்வதும் ஆகும். எஜமானுக்காகக் காத்திருக்கும் வேலைக்காரர்களைப் போல, நாமும் அவருக்காகக் காத்திருக்க அழைக்கப்படுகிறோம்.
1) இரட்சிப்புக்காக காத்திருத்தல்:
"கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன். கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர். யாருக்கு அஞ்சுவேன்?" (சங்கீதம் 27:1). உண்மையில் மனிதகுலத்திற்கு வாக்களிக்கப்பட்ட வித்து மூலமாகவும், இஸ்ரவேல் தேசத்துக்காக மேசியா மூலமாகவும் முழு மனிதகுலமும் இரட்சிப்புக்காகக் காத்திருந்தது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மாம்சமாகுதல், ஊழியம், மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவற்றில் அந்தக் காத்திருப்பு நிறைவேறியது. வாக்களிக்கப்பட்ட இரட்சிப்பைப் பெறுவதற்கு விசுவாசத்துடனும் மனந்திரும்புதலுடனும் மனிதகுலம் பதிலளிப்பதற்காக இப்போது கர்த்தர் காத்திருக்கிறார்.
2) வெற்றிக்காக காத்திருத்தல் (பாதுகாப்பு):
"எனக்கு விரோதமாக ஒரு பாளயமிறங்கினாலும், என் இருதயம் பயப்படாது; என்மேல் யுத்தம் எழும்பினாலும், இதிலே நான் நம்பிக்கையாயிருப்பேன்" (சங்கீதம் 27:3) என தாவீது காத்திருத்தலை வலியுறுத்தினான். பாவம், சுயநலம், மரணம், உலகம் மற்றும் சாத்தான் என அனைத்தின் மீதும் ஜெயம் கொள்ள முடியும் என தேவன் வாக்குத்தத்தம் அளித்துள்ளார். உலகில் வலி, வேதனை, பாடுகள், சோதனைகள், உபத்திரவங்கள் மற்றும் தவறு செய்வதற்கான வாய்ப்புகள் (தூண்டுதல்) என அனைத்தும் இருக்கும், ஆனால் இறுதியில் ஜெயம் கொள்ளப் போகிறவர்கள் நாம் தான்.
3) துதிகளை செலுத்த காத்திருத்தல்:
"கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சிசெய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன். இப்பொழுது என் தலை என்னைச் சுற்றிலும் இருக்கிற என் சத்துருக்களுக்கு மேலாக உயர்த்தப்படும்; அதினிமித்தம் அவருடைய கூடாரத்திலே நான் ஆனந்த பலிகளையிட்டு, கர்த்தரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணுவேன்" (சங்கீதம் 27:4,6) என்றான் தாவீது.
4) பதிலுக்காக காத்திருத்தல்:
"உமது முகத்தை எனக்கு மறையாதேயும்; நீர் கோபத்துடன் உமது அடியேனை விலக்கிப்போடாதேயும்; நீரே எனக்குச் சகாயர்; என் இரட்சிப்பின் தேவனே, என்னை நெகிழவிடாமலும் என்னைக் கைவிடாமலும் இரும். என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்" (சங்கீதம் 27:9-10). ஆம், கர்த்தர் கோபத்தில் தன்னை விட்டு விலகவோ, நிராகரிக்கவோ, கைவிட்டிடவோ கூடாது என கெஞ்சினான். அதே சமயம் தன் தகப்பனும் தாயும் கைவிட்டாலும் தேவன் கைவிட மாட்டார் என்று அறிக்கை செய்தான். தேவன் நம் ஜெபங்களுக்கு வெவ்வேறு வழிகளிலும், பல்வேறு வழிகளிலும் நம்முடைய புரிதலுக்கோ அல்லது கற்பனைக்கோ அப்பாற்பட்டு பதிலளிக்கிறார்.
5) சத்தியத்திற்கும் மற்றும் வழிகாட்டுதலுக்காகவும் காத்திருத்தல்:
தாவீது நேரான, பரிசுத்தமான, நீதியான வழியைக் கர்த்தர் போதிக்கக் காத்திருந்தார். தேவனின் வழிகாட்டல் இல்லாத வாழ்க்கை துன்பகரமானதாகும்.
6) வாக்குத்தத்திற்காக காத்திருத்தல்:
"நானோ, ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசியாதிருந்தால் கெட்டுப்போயிருப்பேன்" (சங்கீதம் 27:13) என்பதாக தேவனளிக்கும் வாக்குத்தத்தில் இருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறான்.
7) அவரின் வருகைக்காக காத்திருத்தல்:
"கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு" (சங்கீதம் 27:14) என தாவீது தைரியமாக கர்த்தருக்காக காத்திருக்கும்படி உற்சாகப்படுத்துகிறான். ஆம், புதிய ஏற்பாட்டு விசுவாசிகளாகிய நாம் கர்த்தருடைய வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம் அல்லவா!
நான் கர்த்தருக்காக ஆவலுடன் காத்திருக்கிறேனா?
Author : Rev. Dr. J. N. Manokaran