இஸ்ரவேல் தேசத்தின் பாவத்திற்காக ஸ்தேவான் நேருக்கு நேர் எதிர்த்து நின்றார்; "வணங்காக் கழுத்துள்ளவர்களே, இருதயத்திலும் செவிகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே, உங்கள் பிதாக்களைப்போல நீங்களும் பரிசுத்த ஆவிக்கு எப்பொழுதும் எதிர்த்துநிற்கிறீர்கள்" (அப்போஸ்தலர் 7:51). ஆம், எதிர்த்து நிற்பதும் நிராகரிப்பதும் தொடர்ந்து இஸ்ரவேல் சந்ததியினரின் அணுகுமுறையாகவும் நடக்கையாகவும் இருக்கிறது.
1) முன்னேற்பாடு:
இஸ்ரவேலர்களின் நாற்பது வருட வனாந்தர பயணத்தில் தேவன் கிருபையாய் மன்னாவைக் கொடுத்து அற்புதமாக வழிநடத்தினார். ஆனால் அவர்களுக்கு அதில் சலிப்பு ஏற்பட்டது, அதை நிராகரித்தனர், இறைச்சிக்கு ஏங்கினர் (எண்ணாகமம் 11:6). தேவன் அளித்த மன்னா அது தூதர்களின் உணவான அப்பம், அதைதான் இஸ்ரவேல் ஜனங்கள் நிராகரித்தனர் (சங்கீதம் 78:25).
2) பாதுகாப்பு:
தேவன் மோசே மூலம் பத்து கட்டளைகள், வழிபாட்டுக்குரிய சட்டங்கள், உணவுக்கான சட்டங்கள் மற்றும் ஆவிக்குரிய சட்டங்களை வழங்கினார். அந்த பிரமாணங்கள் அவர்களை ஆவிக்குரிய ரீதியாகவும், ஒழுக்க ரீதியாகவும், சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதுகாத்தது.
3) தேவனுடைய ஆளுகை:
இஸ்ரவேல் தேசம் தன்னுடைய அரசாட்சியின் கீழ் வாழ வேண்டும் என்று தேவன் விரும்பினார். ஆனால் அந்த ஜனங்களோ, தேவன் ராஜாவாக இருந்து வழிநடத்துவதை நிராகரித்து விட்டு மற்ற அண்டை நாடுகளைப் போல ஒரு மனிதன் ராஜாவாக இருந்து வழிநடத்துவதை விரும்பினர். இதனால் சாமுவேல் மிகவும் வருத்தப்பட்டார். "அப்பொழுது கர்த்தர் சாமுவேலை நோக்கி: ஜனங்கள் உன்னிடத்தில் சொல்வதெல்லாவற்றிலும் அவர்கள் சொல்லைக் கேள்; அவர்கள் உன்னைத் தள்ளவில்லை, நான் அவர்களை ஆளாதபடிக்கு, என்னைத் தான் தள்ளினார்கள்" (I சாமுவேல் 8:7) என்றார். பின்பதாக "நான் கோபத்திலே உனக்கு ராஜாவைக் கொடுத்தேன்; என் உக்கிரத்திலே அவனை எடுத்துக்கொண்டேன்" என்பதாக கூட (ஓசியா 13:11)ல் வாசிக்கிறோமே.
4) தூது:
எசேக்கியேல் தீர்க்கத்தரிசியிடம் கர்த்தர், அவரை ஒரு ‘கலகக்கார ஜாதியாகிய அதாவது தீர்க்கத்தரிசன வார்த்தைகளுக்கு செவிமடுக்காத இஸ்ரவேல் புத்திரரிடம்' பேசுவதற்கு அனுப்பப் போவதாகக் கூறினார் (எசேக்கியேல் 2:3-5). தீர்க்கதரிசிகளைக் கொன்றதற்காகவும், பின்னர் அவர்களுக்கு நினைவுச் சின்னங்களைக் (கல்லறைகளை) கட்டியதற்காகவும் இஸ்ரவேல் தேசத்தை ஆண்டவராகிய இயேசு கண்டித்தார் (மத்தேயு 23:29).
5) மேசியா:
யோவான் ஸ்நானகன் ஆண்டவராகிய இயேசுவை இஸ்ரவேல் தேசத்திற்கு 'உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி' என்று அடையாளம் காட்டினார் (யோவான் 1:29). கர்த்தராகிய இயேசு தம்முடைய போதனைகள், அடையாளங்கள், அற்புதங்கள், பாடுகள், மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவற்றின் மூலம் அவர் மேசியா என்பதை நிரூபித்தார். ஆனால் அவர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நிராகரித்தார்கள். "தீர்க்கதரிசிகளில் யாரை உங்கள் பிதாக்கள் துன்பப்படுத்தாமலிருந்தார்கள்? நீதிபரருடைய வருகையை முன்னறிவித்தவர்களையும் அவர்கள் கொலைசெய்தார்கள். இப்பொழுது நீங்கள் அவருக்குத் துரோகிகளும், அவரைக் கொலைசெய்த பாதகருமாயிருக்கிறீர்கள்" (அப்போஸ்தலர் 7:52).
இஸ்ரவேலர்களின் சுபாவமே தேவனிடம் இருந்த வந்த அனைத்தையும் நிராகரிப்பதாக மாறியது. அவர்கள் அவருடைய கவனிப்பு, பாதுகாப்பு, வாக்குத்தத்தங்கள், சட்டம், உடன்படிக்கை, கர்த்தரே ராஜாவாக இருப்பது, தீர்க்கதரிசிகள், மேசியா மற்றும் நற்செய்தி என எல்லாவற்றையும் நிராகரித்தனர்.
அது நன்றியின்மையுடன் தொடங்கியது, விசுவாசமின்மைக்கு வழிவகுத்தது மற்றும் மனநிறைவின்மையாக வெளிப்பட்டது.
நான் நன்றியுள்ள, உண்மையுள்ள, தேவ ஆசீர்வாதங்களில் திருப்தியுள்ள ஒரு நபராக இருக்கிறேனா?
Author : Rev. Dr. J. N. Manokaran