தலைமைத்துவத்திற்கான வேதாகம படங்களில் ஒன்று மேய்ப்பன். இஸ்ரவேலின் மத மற்றும் அரசியல் தலைமை, மீண்டும் மீண்டும், தேவ சித்தத்தைச் செய்யத் தவறிவிட்டது. ஆடுகள் சிதறுண்டதைக் குறித்து எசேக்கியேல் தீர்க்கதரிசி மேய்ப்பனின் குறைகளைப் பற்றி எழுதுகிறார். "நீங்கள் பலவீனமானவைகளைப் பலப்படுத்தாமலும், நசல்கொண்டவைகளைக் குணமாக்காமலும், எலும்பு முறிந்தவைகளைக் காயங்கட்டாமலும், துரத்துண்டவைகளைத் திருப்பிக்கொண்டு வராமலும், காணாமற்போனவைகளைத் தேடாமலும் போய், பலாத்காரமும் கடூரமுமாய் அவைகளை ஆண்டீர்கள். மேய்ப்பன் இல்லாததினால் அவைகள் சிதறுண்டுபோயின; சிதறுண்டு போனவைகள் காட்டு மிருகங்களுக்கெல்லாம் இரையாயின" (எசேக்கியேல் 34:4-5).
பலவீனப்படல்:
பலவீனமானவைகளுக்கு சிறப்பு கவனம் தேவை. ஆம், மந்தையில் இருக்கும் பலவீனமானவர்களை பலப்படுத்துவதற்கும், கற்பிப்பதற்கும், தகுதிப்படுத்துவதற்கும், திடப்படுத்துவதற்கும் பதிலாக, மேய்ப்பர்கள் அவர்களை மனச்சோர்வடையச் செய்து அழித்தார்கள். பலவீனமானவர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்கள் தாங்களாகவே பிழைத்துக் கொள்ள விடப்பட்டனர்.
நோய்வாய்ப்படல்:
ஆவிக்குரிய ரீதியாகவும், மன ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் ஜனங்கள் நோய்வாய்ப்பட்டனர். சரியான மேய்ச்சலும், நீர்நிலைகளும் இல்லாமல், மந்தையிலுள்ள ஆடுகள் நோய்வாய்ப்பட்டன. மனம் புதுப்பிக்கப்படாமல், உணர்வுகளின் கொந்தளிப்பை அனுபவித்தன. தேவையற்ற பயம், அறிவு இல்லாமை, பகுத்தறிவு ஆகியவை அவர்களை பலவீனமாக்கி சரீரத்தைப் பாழாக்கியது.
காயங்கட்டுதல்:
ஆடுகளுக்கு காயங்கள் அல்லது வெளியே தெரியும்படி தழும்புகள் இருந்தன, காட்டு விலங்குகளால் தாக்கப்பட்டன அல்லது கடுமையான கால சூழ்நிலையில் காயங்கள் மேலும் புண்ணாக்கியது. மேய்ப்பர்கள் அவற்றைச் சுத்தம் செய்யவோ அல்லது கட்டு போடவோ இல்லை. சாத்தானும் கள்ளப் போதகர்களும் சபையைத் தாக்குகிறார்கள், மேலும் மேலும் காயங்களை அதிகரிக்கிறார்கள்.
வழிதவறுதல்:
ஆடுகளுக்கு திசை உணர்வு இல்லை. எனவே, எப்போதும் வழிதவறிச் செல்லும் வாய்ப்பு உள்ளது. மேய்ப்பன் அவர்களுக்கு சரியான பாதையைக் காட்டவில்லை, அவர்களை நீதியின் பாதையில் நடத்தவில்லை அல்லது மரணப் பாதைக்கு அழைத்துச் செல்லவில்லை.
இழந்து போதல்:
மேய்ப்பர்களிடம் ஆடுகளின் எண்ணிக்கை இல்லை. எனவே, சில ஆடுகள் காணாமற் போய்விட்டன. ஆம், மந்தையின் ஒரு (பணக்கார) பகுதியை மட்டும் பராமரிப்பது என்றால் மந்தைக்குள் இருக்கும் மற்ற ஆடுகளை (ஏழை) புறக்கணிப்பதாகவே அர்த்தம்.
கொடுமைப்படுத்தப்படல்:
மெதுவாகக் கற்பிப்பதற்கும், அன்புடன் வழிநடத்துவதற்கும், வழியைக் காட்டுவதற்கும் பதிலாக, மேய்ப்பர்கள் ஆடுகளைத் துன்புறுத்தினர், வருத்தப்படுத்தினர். கீழ்ப்படிதல் என்பது கட்டாயப்படுத்தப்பட்டதேயன்றி அது அன்பினாலோ மற்றும் ஊழிய வாஞ்சையோடு (சேவை மனப்பான்மையோடு) செய்யப்படவில்லை.
கடுமையாதல்:
மேய்ப்பர்கள் தங்கள் அணுகுமுறையிலும் வார்த்தைகளிலும் கடுமையாக இருந்தனர். ஆடுகளை நேசிப்பதும், பராமரிப்பதும், உணவளிப்பதும் சரியான அணுகுமுறையுடன் செய்யப்படவில்லை. மேய்ப்பர்கள் தங்கள் மந்தைகளை உயிரற்ற பொருட்களைப் போல அதாவது மதிப்பற்று நடத்தினர்; விசுவாசிகளின் கண்ணியம் மற்றும் சுயமரியாதை கடுமையான போதகர்களால் சூறையாடப்படுகிறது.
நான் மந்தையைக் கூட்டிச் சேர்க்கிறேனா அல்லது சிதறடிக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்