தொடர் - 7
ஜெபசிங் இதயத்தில் ஒரு மலர் மலர்ந்து சிரித்தது. கவிதாவின் அழகிய முகம், அலை அலையாய் விரிந்த கேசம், அழகிய நீண்ட விழிகள் , அதில் தேங்கி நிற்கும் அன்பு கனிந்த வேண்டல்! ஆம் அதில் ஏதோ ஒரு கேள்வி தொக்கி நின்றது. எதையோ அவரிடம் கேட்டது. அது என்ன? ஜெபசிங்கிற்கு அது புரிந்தும் இருந்தது. ஜெபசிங்கின் உள்ளத்தில் கொஞ்சம் கொஞ்சமாக கவிதா இடம் பிடிக்க ஆரம்பித்தாள். இன்று அவளுடைய பேச்சு “திருமணத்திற்குப்பின் உங்களுக்கு ஏற்ற உத்தம கிறிஸ்தவப் பெண்ணா விளங்குவேன்” என்றதே! அவளை மணந்து கொண்டால் தன் மணவாழ்வு மணம் வீசும் என நினைத்தார். உள்ளத்தின் ஆழத்தில் 2கொரி.6:14-18 வசனங்கள் நடனமாடின. “அந்நிய நுகம் வேண்டாம் புருஷனே! நீ உன் மனைவியை இரட்சிப்பாயோ அல்லவோ? உனக்கு எப்படி தெரியும்?” (1கொரி 7:16) கேள்விக்கணைகள் தொடுக்கப்பட்டன.
“இல்லை! இல்லை! கவிதா அமைதியான நற்குணமுடையவள்!” அவர் அன்பு மனம் வாதாடியது. எண்ணக் குவியலில் சிக்கியிருந்தபோது, இடையில் நுழைந்த துரைராஜ் கடந்த ஆண்டு பள்ளியில் பயின்ற வஸந்தி விஷம் குடித்து மருத்துவமனையில் உள்ளாள் என்ற அதிர்ச்சியான செய்தியைக் கூறிச்சென்றான். மருத்துவமனை சென்று , வசந்தியைப் பார்த்து வந்தார் ஜெபசிங். ஒரு வாரம் ஓடி மறைந்தது. குணமாகி வீட்டுக்கு வந்துவிட்ட வசந்தியைக் காணச்சென்றார் ஜெபசிங்! தன் ஆசிரியரைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்தாள் வஸந்தி! தன் படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தாள். கரங்கள் குவிந்தன! அவள் உள்ளம் அலைபாய்ந்தது! வசந்தியின் தாயின் விழிகள் கலங்கினாலும் தன் மகள் வாழ்வில் நல்ல மாற்றத்தை ஆசிரியரின் வருகை ஏற்படுத்தும் என நம்பினாள். நாற்காலியை எடுத்துப்போட்டு அமரச் செய்தாள். மெல்லப் பேச்சைத் துவக்கினார் ஜெபசிங்.!
“வசந்தி! பைத்தியகாரத்தனமா நடந்துக்கிட்டேயேம்மா! உன்னைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றோருக்கு நீ காட்டும் நன்றியா இது? கடவுளுடைய கிருபை பிழைத்துக் கொண்டாய். ஏதாவது ஆகியிருந்தால்...?” பாதியோடு நிறுத்தினார்.
“சார்! உங்களுக்கு எதுவும் தெரியாது சார்! நான்... நான் உயிரோடு இருக்கவே கூடாது சார்!” விம்மினாள் வஸந்தி.
“வசந்தி! எனக்கு எல்லாம் தெரியும்” அழுத்தமாகச் சொன்னார் ஜெபசிங்.
திடுக்கிட்டு நிமிர்ந்தாள் வஸந்தி! அவள் விழிகள் கலங்கின! அவளை அவமான உணர்வு கவ்விப்பிடித்தது. “எல்லாம் தெரியுமா? அப்படின்னா... அப்படின்னா” அவள் உள்ளம் அலை மோதியது. கண்கள் கண்ணீரைக் கொட்டின.
“வசந்தி!” ஜெபசிங்கின் குரலில் உறுதியிருந்தது. ஒரு மனித அன்புக்காக நீ இந்த உலகைவிட்டுப் போக விரும்புகிறாய். விண் மகிமை துறந்து உனக்காக இந்தப்பாவ உலகில் மனிதனாக அதுவும் ஏழை தச்சனுடைய மகனாகப் பிறந்து நம் பாவத்திற்காக சிலுவையில் மரித்த அந்த ஒப்பற்ற தேவனை புறக்கணித்துவிட்டாய்! அப்படித்தானே, ஏம்மா? இயேசுவின் சிலுவைப் பாடுகளை கொஞ்சம் நினைச்சுப் பாரேன். தலையில் முட்கிரீடம், அதில் கோல்கொண்டு அடித்து, அவர் தலையில் கொட்டி, முகத்தில் துப்பி, 'வாரினால் அவர் உடலை அடிச்சு பிளந்து, பாரச்சிலுவையை , அவரையே சுமக்கவைத்து சிலுவையில், அறைந்தார்களே பாவிகள், அந்த ஆணி என் அப்பன் இயேசுவின் கரங்களில், கால்களில் பாய்ந்தபோது எப்படி இருந்திருக்கும்? உணாச்சி வசப்படக் கண்கள் கலங்கி சிலுவைப் பாடுகளை விவரித்துக் கொண்டிருந்த ஜெபசிங்கை குறுக்கிட்டாள் வஸந்தி.
“சார்! போதும் நிறுத்துங்க! ஏற்கனவே நான் வெந்துகிட்டிருக்கேன். நீங்க வேற என்னை குத்தாதீங்க! என்னால் இயேசுவின் பாடுகளை தாங்க முடியாது சார்! அதை நினைத்து அழுத நாட்கள் உண்டு சார்!”.
“ஏம்மா! உன்னை வேதனைப்படுத்தும் அந்த சிலுவை மரணத்தை ஏன் இயேசு ஏற்றுக்கொண்டார். உன்னையும், என்னையும் பாவத்திலும், சாபத்திலுமிருந்து மீட்க நீ இப்பொழுது உன்னை மீட்ட இயேசுக்கு அடிமை. அவர் எந்த நோக்கத்திற்காக உன்னைப் படைத்தாரோ? அதையெல்லாம் உதறிவிட்டு கேவலம் ஒரு மனிதனுடைய அன்பை எண்ணி ஏங்கி, தற்கொலை பண்ணி, சாத்தானுடைய பிள்ளையா நித்திய நரகாக்கினைக்குப் போறதுக்கா மருந்த குடித்தாய்?” உணர்ச்சி கொப்பளிக்கக் கேட்டார் ஜெபசிங்.
தன் காதுகளை தன் கரங்களால் பொத்திக்கொண்டாள் வசந்தி!” இல்லை.... இல்லை... இல்லை... சார்! சார்! எல்லோரும் நினைக்கிறதைப் போலத்தான் சார் நீங்களும் நினைக்கிறீங்க! அவனோட ... அவன்தான் பாஸ்கரோட நான் வாழ முடியலயேன்னு நான் சாகவிரும்பலைசார்! என்னை ஏமாத்திட்டானே. யாருக்குமே அடிபணியமாட்டேன்னு வாழ்ந்த என் வாழ்வை கலக்கிட்டானே! நீ இல்லாட்டி செத்துப்போயிடுவேன்னான் சார். அதுதான் சார் நான் சம்மதிச்சேன். என்னை வஞ்சித்துட்டானே!. இந்த உலகம் என்னைப் பார்த்து சிரிக்குதே சார்! இந்த அவமானத்தைத் தாங்க முடியலையே சார்! நான் வாழத் தகுதியற்றவள் சார்! மத்.5:28ன்படி பார்வையே குற்றமென்றால் நான்.... நான் பெரிய குற்றவாளிசார்... நான் வாழணுமா? நான் வாழணுமா சார்?” அவள் உணர்வுகள் மடை திறந்த வெள்ளம் போல பொங்கியது. புயலுக்குப்பின் அமைதி விளையும் என்ற நம்பிக்கையுடன் வசந்தியின் தாய் டிபன் தயாரிக்கும் சாக்கில் அடுப்படியிலேயே இருந்தாள்.
“நிச்சயமா வாழணும் வஸந்தி! ஒரு பாவத்தை மறைக்க மற்றொரு பாவமா? சிகரெட் பிடிக்கிறதை மறக்க சாராயம் குடிக்க ஆரம்பிச்ச மாதிரியிருக்குமா நீ பேசறது! பயங்கரமான பாவ வாழ்க்கை வாழ்ந்த ஸ்திரீயைக் கூட என் பரம தகப்பன் (லூக் 8:1-11), “நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை. நீ போ , இனி பாவம் செய்யாதே” என்றுதானே சொன்னார்.
“சார்! நான் கடவுளை நேசிச்சு வாழ்ந்தேனே சார்! என்னை ஏன் சார் சாமி கைவிட்டுட்டார்! நான் பாஸ்கரோடே பழகினதை ஆரம்பத்திலேயே அவர் தடுத்திருக்கலாமே! நான் படுகுழியில் விழவிட்டுவிட்டாரே!”
“நீ இந்தக் காரியத்தை கடவுள் பாதத்தில் வைத்து ஜெபித்தாயா? உம்முடைய சித்தம் என்னவென்று கேட்டாயா? வஸந்தி! நீ படுகுழியில் விழவில்லை! விழ இருந்த. தேவன் காப்பாத்திட்டார்ன்னு சொல்லு. பணத்திற்காக மனம் மாறிப்போகும் இனம்! திருமணத்திற்குப் பின் வேறு ஒருத்தியை நாடியிருந்தால்... உன்னைக் கைவிட்டிருந்தால் உன் நிலையை எண்ணிப் பார். அதனால் கடவுளுக்கு நன்றி செலுத்து.”
“அப்படியேயிருந்தாலும்.... இப்ப என் நிலையைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கத்தானே செய்யும் சார்! அது அவமானம் இல்லை!”
“பைத்தியம்! பைத்தியம்! உலகமாம் உலகம்! இந்த உலகம் வாழவும் விடாது! சாகவும் விடாது. வாழ்ந்தாலும் ஏசும்! தாழ்ந்தாலும் ஏசும்! அதை நாம் பொருட்படத்தக் கூடாது! வசந்தி! அவனோடே வாழ முடியலையேன்னு நீ வருத்தப்படலைன்னா நீ செய்த பாவத்துக்காக சாக வேண்டிய அவசியமே இல்லை. பாவம் செய்யாதவன் யார்? நீதிமான் ஒருவரும் இல்லை என்று தான் வேதம் சொல்லுகிறது. பேதுரு மறுதலித்தார். பின் மனந்திருந்தி மன்னிப்புப் பெற்று மாபெரும் காரியங்களைச் சாதித்தார். ஆனால் காட்டிக்கொடுத்த யூதா ஸ்காரியோத் (மத் 27: 1-5) “குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவஞ்செய்தேன்” என்று வருத்தமுற்று கலங்கினாலும் மன்னிப்பு வேண்டவில்லை! நான்றுகொண்டு செத்தான்! பலன் என்ன? நீ பேதுருவா? யூதாஸா!
“சார்! நான் என்ன சார் செய்யணூம்!” குழப்பத்தோடு நிமிர்ந்து பார்த்தாள் வசந்தி!.
மெல்லப் புன்முறுவல் பூத்தார் ஜெபசிங்! "வீணா கதை எதையும் நினைச்சுக் கலங்காதே! அழாதே! அதிக நேரம் வேதம் வாசிக்கிறதிலும், ஜெபிப்பதிலும் செலவிடு “நான்........ நான்” என்ற எண்ணத்தை விட! உன்னை முற்றிலும் கர்த்தருக்கு ஒப்புவித்து விடு! அனைத்தையும் அவர் பார்த்துக் கொள்வார்! செய்வாயா?”
“ஆகட்டும்” என்பதற்கு அடையாளமாக தலையை ஆட்டினாள் வசந்தி! அவள் ஒரு நல்ல தீர்மானத்திற்கு வந்துவிட்டாள் என்பதை அவள் முகம் காட்டியது. அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு ஹாஸ்டலை நோக்கி வந்துகொண்டிருந்த ஜெபசிங்கின் உள்ளத்தில், “நீ உன் வாழ்க்கையை கர்த்தரிடம் ஒப்படைத்து கர்த்தர் சித்தம் எதுவென்று கேட்டாயா!” என்ற வினா எழுந்தது.
அன்று கவிதாவின் காரியத்தை ஜெபத்தில் வைக்க எண்ணினார். வேதப்புத்தகத்தைத் திறந்தார். அன்று அவர் வாசிக்க வேண்டிய பகுதி 1இராஜாக்கள் 11வது அதிகாரம் வாசித்தார். திடுக்கிட்டார். ஞானி சாலமோன் கர்த்தரை விட்டு விலகக் காரணம் அவனுடைய அந்நிய ஜாதியாரான மனைவியர்! அவர் உள்ளத்தில் கர்த்தரின் . சத்தம் தொனித்தது! தேவனின் சித்தம் அறிந்தார்! அலைமோதிய உள்ளம் அமைதியடைய நித்திரையில் ஆழ்ந்தார்.
வார விடுமுறையை ஒட்டி இரு நாட்கள் விடுப்பு' எடுத்துக்கொண்டு தன் இல்லம் நோக்கிப் பயணமானார். டேனியல் காட்டேஜ் பங்களாவின் உள் நுழைந்தவர் வராண்டாவை அடைந்து காலிங்பெல்லை அழுத்தினார். தன் பின்னால் யாரோ வருவதை உணா்ந்தார்! நடுத்தர வயதுடைய பெண்மணி நரைத்த கேசமும், மெலிந்த உடலும் வயதுக்கு மிஞ்சிய முதிர்ச்சியை காட்டியது. இதற்குள் கதவைத் திறந்த ஜெபசிங்கின் தாய் தன் மகனைக் கண்டு மகிழ்ந்தவள் பின்னால் நிற்கும் பெண்மணியைக் கண்டு அதிர்ச்சியடைந்தாள்.
“நீ..... நீயா” வார்த்தைகள் தடுமாறின.
இதன் தொடர்ச்சி தேடிவந்த உறவு என்ற தலைப்பில் உள்ளது.
இந்த கதை இலட்சிய தீபம் என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.