மூன்று வயது சிறுவன் தன் உடைந்த பொம்மையை சரி செய்ய விரும்பி தன் தந்தையின் உதவியை நாடினான். அப்போது அவனின் தந்தை; "நாம் ஏன் அதை சரிசெய்ய வேண்டும்? அதை மீண்டும் செயல்பட வைப்பதற்கா?" எனக் கேட்டார். அதற்கு மகன்; "அப்படி இல்லை, ஏனென்றால் நாம் அதை நேசிக்கிறோம் அல்லவா" என்று சொன்னான்.
வீழ்ச்சி:
ஏதேன் தோட்டத்தில், ஆதாமும் ஏவாளும் தடைசெய்யப்பட்ட மரத்தின் பழங்களைச் சாப்பிட்டார்கள், நல்லவனைப் போல வேடமணிந்த சாத்தானால் அவன் வார்த்தைக்கு மயங்கினர். ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தார்கள் என்று தேவன் அறிந்தார். தடை செய்யப்பட்ட மரத்தில் இருந்து கனிகளை உண்டால் பின்விளைவுகள் ஏற்படும், மேலும் மரித்து போகக் கூடும் என தெளிவாகக் கூறியிருந்தார். ஆனாலும், கீழ்ப்படியாமையும் கலகமும் அவர்களை ஆவிக்குரிய ரீதியாக சாகடித்து விட்டது, தேவனோடு இருந்த உறவில் இருந்தும் துண்டிக்கப்பட்டனர்; அதனால், ஒளிந்து கொண்டனர் (ஆதியாகமம் 3). இப்படியான பின்பு தேவன் என்ன செய்திருக்க வேண்டும்? என்பதாக பல ஊகங்கள் இறையியலாளர்கள் மற்றும் தத்துவவாதிகளால் சொல்லப்படுகின்றன.
அவர்களை கொல்வது:
தேவன் அவர்களை உடல் ரீதியாக கொன்று ஏதேன் தோட்டத்தின் ஒரு மூலையில் புதைத்திருக்க முடியும். மேலும் தேவன் வேறு வேறு பெயர்களுடன் மற்றொரு ஜோடியை உருவாக்கி, அவருடைய நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டே இருக்க முடியும்.
முழு சிருஷ்டிப்பையும் அழிப்பது:
ஒன்றுமில்லாதவற்றிலிருந்து உலகம் முழுவதையும் தேவன் படைத்தார். மீண்டும் உலகத்தை ஒன்றுமில்லாத நிலைக்கு அனுப்ப முடியுமா? ஆம் முடியும், இறையாண்மையுள்ள கடவுள் அதை எளிதாகச் செய்திருக்க முடியும்.
வெளியேற்றப்படுவது:
லூசிபர் தேவனுக்கு எதிராக கலகம் செய்தபோது, அவன் பரலோகத்திலிருந்து வெளியேற்றப்பட்டான். அதே வழியில், தேவன் ஆதாமையும் ஏவாளையும் பூமியிலிருந்து, ஒருவேளை ஆகாயத்தில் இருந்தும் வெளியேற்றியிருக்க முடியுமா? ஏதேன் தோட்டத்திலிருந்து நாடு கடத்தப்படுவதற்குப் பதிலாக, அவர்கள் பூமியிலிருந்து நாடு கடத்தப்பட்டிருக்கலாம்.
அதிகப்படியான அக்கினி:
இறுதியில், சாத்தானும் விழுந்த தேவதூதர்களும் அக்கினி கடலில் (நரகத்தில்) வீசப்படுவார்கள் (வெளிப்படுத்துதல் 20:10). தேவன் ஆதாமையும் ஏவாளையும் அதே இடத்திற்கு அனுப்பியிருக்க முடியுமா? ஆம் முடியும், ஆனால் அவர் செய்யவில்லை.
தேவ அன்பு:
தேவன் ஆதாமையும் ஏவாளையும் தம் சாயலில் சிருஷ்டித்து, அவர்களை நேசித்தார். அந்த சிறுவன் எப்படி அந்த பொம்மையை சரிசெய்ய விரும்பினானோ அது போலவே மனிதகுலத்தை சரிசெய்யவும், ஒப்புரவாக்கவும், மீட்கவும் விரும்பினார். காரணம் அன்பு. அன்பே தேவன் (1 யோவான் 4:8). அவர் முதலில் நம்மை நேசித்தார் (1 யோவான் 4:19). தேவன் தம்முடைய குமாரனை அனுப்பினார், ஏனென்றால் அவர் மனிதகுலத்தை நேசித்தார் (யோவான் 3:16). ஆம், தேவ அன்பின் ஆழ அகலத்தைப் புரிந்துகொள்வது சாத்தியமில்லை (எபேசியர் 3:18).
மனிதர்கள் மீது தேவன் வைத்திருக்கும் அன்பு எனக்கு புரிகிறதா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்