டிசம்பர் 9ம் தேதி, 2022 அன்று நடந்த உலகக் கோப்பை போட்டியில் குரோஷியாவிடம் தனது அணி தோற்கடிக்கப்பட்ட பிறகு திறமையான பிரேசிலிய கால்பந்து வீரரான நெய்மர் டா சில்வா சாண்டோஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த செய்தி என்னவென்றால்; “நான் உளவியல் ரீதியாக உடைந்து விட்டேன்; இந்த தோல்வி என்னை மிகவும் பாதித்து விட்டது, இது என்னை செயலிழக்க வைத்தது; 10 நிமிடங்களுக்கு நான் இடைவிடாமல் அழுது தீர்த்தேன்" என்பதாக இருந்தது.
விளையாட்டு வீரனின் மனப்பான்மை:
விளையாட்டை விளையாடும் அனைத்து மக்களும் ஸ்போர்ட்ஸ்மேன் ஸ்பிரிட் எனப்படும், அதாவது எதையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பரிசு அல்லது கோப்பைக்காக அல்லது கௌவுரவத்திற்காக போட்டியிடும் போது விதிகள், மரியாதை, கண்ணியம், நியாயம் என எதிர் அணியோடு தாராள மனப்பான்மையுடன் நடந்தக் கொள்ள வேண்டும். அநியாயமான நன்மையை நாடுவது, ஏமாற்றுவது அல்லது தோல்வியை ஏற்க மறுப்பதெல்லாம் முதிர்ச்சியற்ற தன்மையை காட்டுகிறது, ஒரு விளையாட்டு வீரருக்கு அது அழகல்ல.
உளவியல் ரீதியாக பாதிக்கப்படல்:
ஒரு விளையாட்டு வீரர் வெற்றியை மட்டுமே வாழ்க்கை நோக்கமாகக் கருதும் போது, கடின உழைப்புக்குப் பிறகும், அத்தகைய கனவை அடையாதபோது, ஒரு நபர் உடைந்து போகிறார். நெய்மருக்கு, தனது நாடான பிரேசிலுக்கு தற்காலிகமாக, உலகக் கோப்பையை வெல்வது மட்டுமே அவரது வாழ்க்கையின் ஒரே நோக்கம். அந்த அணி எதிர்பாராதவிதமாக தோற்கடிக்கப்பட்டதால், அவர் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டார். இப்போது, அவருடைய வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமோ நோக்கமோ இல்லை. துரதிர்ஷ்டவசமாக, அவரது வாழ்நாள் முழுவதும் அவர் கனவை அடையாததற்காக வருத்தப்படுவார் அல்லது குற்ற உணர்ச்சியுடன் இருப்பார்.
இழப்பு மற்றும் அழிவு:
யோபு ஒரு பணக்காரர், பொன்னாக விளங்க சோதிக்கப்பட்டார். இருபத்தி நான்கு மணி நேரத்தில், அவர் பத்து குழந்தைகளை இழந்தார், அவருடைய ஆடுகள், கால்நடைகள், ஒட்டகங்கள்... போன்றவையும் இழந்தார். ஆனாலும் அவர் உளவியல் ரீதியாக பாதிக்கப்படவில்லை. வாழ்க்கையின் தோல்வியை தைரியமாக ஏற்றுக்கொண்டு அந்த இக்கட்டிலும் தேவனுக்கு நன்றி செலுத்தினார் (யோபு 1:21). தாவீதும் அவனுடைய ஆட்களும் சிக்லாக்கை அடைந்தபோது, நகரம் நெருப்பால் எரிக்கப்பட்டு, சூறையாடப்பட்டது, தாவீது உட்பட எல்லா ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் அமலேக்கியர்களால் அடிமைகளாகப் பிடிக்கப்பட்டனர். இருப்பினும், தாவீது உளவியல் ரீதியாக அழிந்து போகாமல், கர்த்தருக்குள் தங்களைத் திடப்படுத்திக் கொண்டான் (1 சாமுவேல் 30:1-6).
ஆவிக்குரிய ரீதியாக பலப்படல்:
தாவீதின் கூட இருந்தவர்களே அவர் மீது மன வருத்தமடைந்து கல்லெறியவும் விரும்பினர். ஆயினும்கூட, தாவீது கர்த்தருக்குள் தன்னைப் பலப்படுத்திக் கொண்டார், எதிர் உத்திகளை மேற்கொண்டார், அமலேக்கியர்களை வென்றார், மேலும் அவரது மனைவிகள், குழந்தைகள் மற்றும் நகர மக்கள் உட்பட கொள்ளையடிக்கப்பட்ட அனைத்தையும் மீட்டெடுத்தார் (1 சாமுவேல் 30:18).
மீட்சிப்பண்பு:
விஷயங்கள் சாதகமாக இல்லாதபோது, தோல்விகளைச் சந்திக்கும் போது, மக்கள் சோர்வடைந்து, முயற்சியை கைவிடுகிறார்கள். ஆனால் மீட்சிப்பண்பு உள்ளவர்கள், மீண்டு வருவார்கள்.
எனக்கு மீண்டெழுந்து வரக்கூடிய ஆவிக்குரிய பலம் உள்ளதா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்