சாலொமோன் ராஜா தேவன் கொடுத்த ஞானமும் ஐசுவரியமும் கொண்ட ஒரு புத்தியுள்ள ராஜா. செல்வத்தின் அடிப்படையில் இது ஒரு பொற்காலம் என்று அழைக்கப்பட்டாலும், அது ஆவிக்குரிய இருளின் நிழலின் கீழ் இருந்தது. சாலொமோனின் நாட்களில், வெள்ளிக்கு அவ்வளவு மதிப்பில்லை (2 நாளாகமம் 9:20). இந்த செழிப்பு இஸ்ரவேல் மக்கள் தங்கள் ஆவிக்குரிய வாழ்விலும், தரிசனத்திலும் மற்றும் அருட்பணியிலும் வளர உதவியதா? தேவனுடைய நியமனங்களுக்கும் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிய சாலொமோனின் ஆலயம் அவர்களுக்கு உதவியதா?
தரிசன உணர்வு:
இஸ்ரவேல் தேசம் ஒரு ஞானமான ராஜாவால் ஆசீர்வதிக்கப்பட்டது. அவர்கள் சாலொமோனைப் பயத்தினால் அல்ல, ஆனால் ஒரு தரிசனத்துடனும் மற்றும் நோக்கத்துடனும் பின்தொடர்ந்தார்கள். ஆலயம் கட்டுவது இஸ்ரவேலர்கள் அனைவரின் விருப்பமாக இருந்தது. அது அவர்களின் சொந்தக் கண்களால் நிறைவேறியதைக் கண்டதும், சுற்றியுள்ள நாடுகளில் இருக்கும் மற்ற மக்களை விட தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற திருப்தியையும் பெருமையையும் கூட அவர்களுக்கு அளித்தது.
இளைஞர்கள்:
இளைஞர்கள் தங்களைச் சுற்றி பெரும் செழிப்பைக் கண்டார்கள். தேசத்தில் பிரபலமாக இருந்த சாலொமோன், பிற கடவுள்களை வணங்கி வழிதவறத் தொடங்கினான். அரசியல் காரணத்திற்காக அல்லது கூட்டணிக்காக அவன் திருமணம் செய்துகொண்ட மனைவிகள், அவனை ஆவிக்குரிய இருளில் தள்ளினார்கள் (1 இராஜாக்கள் 11:4-9). இது இளைஞர்களின் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தியது.
ரெகொபெயாம்:
ரெகொபெயாம் ராஜாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, சாலொமோனின் ஞானத்திற்கோ, இராஜதந்திரத்திற்கோ, தலைமைத்துவத் திறமைகளுக்கோ அவன் பொருந்தவில்லை. செழிப்பு இருந்தபோதிலும், மக்கள் பெரும் வரி மற்றும் கட்டாய நிர்வாகத்தின் சுமையை உணர்ந்தனர். அவர்கள் ஒரு மாற்றத்தை விரும்பினர்.
ஆலோசகர்கள்:
ராஜா சாலொமோனுக்கு சேவை செய்த அனுபவமுள்ள ஆலோசகர்களை ரெகொபெயாம் அழைத்தான். அவர்கள் அவனிடம், "நீர் இன்று இந்த ஜனங்களுக்கு சேவகனாகி, அவர்களுக்கு இணங்கி, அவர்கள் சொற்படி செய்து, மறுமொழியாக நல்வார்த்தைகளைச் சொல்வீரானால், எந்நாளும் அவர்கள் உமக்கு ஊழியக்காரராயிருப்பார்கள் என்றார்கள்" (1 இராஜாக்கள் 12:7). ஆனால் ரெகொபெயாம் அந்த ஆலோசனையெல்லாம் புறந்தள்ளி விட்டு தன்னோடு இருந்த இளைஞர்களிடமிருந்து ஆலோசனையைப் பெற்றான்; அவர்களோ ஆபத்தான அறிவுரைகளை வழங்கினர், ரெகொபெயாம் முட்டாள்தனமாக அதைப் பின்பற்றினான் (1 இராஜாக்கள் 12:1-17).
முட்டாள்தனமான கொள்கை:
செழிப்பைக் கண்ட இளைஞர்களுக்கு கர்வம் வந்தது மற்றும் அநீதியான, பொல்லாத மனநிலையையும் கொண்டிருந்தனர். "அவனோடே வளர்ந்த வாலிபர் அவனை நோக்கி: உம்முடைய தகப்பன் எங்கள் நுகத்தைப் பாரமாக்கினார், நீர் அதை எங்களுக்கு இலகுவாக்கும் என்று உம்மிடத்தில் சொன்ன இந்த ஜனத்திற்கு நீர் சொல்லவேண்டியது என்னவென்றால்: என் சுண்டுவிரல் என் தகப்பனாருடைய இடுப்பைப்பார்க்கிலும் பருமனாயிருக்கும். இப்போதும் என் தகப்பன் பாரமான நுகத்தை உங்கள்மேல் வைத்தார், நான் உங்கள் நுகத்தை அதிக பாரமாக்குவேன்; என் தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று நீர் அவர்களோடே சொல்லவேண்டும் என்றார்கள்" (1 இராஜாக்கள் 12:10-11).
தேசம் பிளவுபட்டது:
யெரொபெயாம் பத்து கோத்திரங்களை இஸ்ரவேலின் தனி இராஜ்ஜியமாக மாற்ற வழிவகுத்தான் மற்றும் ரெகொபெயாம் யூதாவின் ராஜ்யத்தைத் தக்க வைத்துக் கொண்டான்.
ஆணவமும் முட்டாள்தனமும் பேரழிவுக்கு வழிவகுக்கும் என்பதை நான் உணர்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்