பொய்யை தேர்ந்தெடுத்த ஆகாப் இராஜா பொய் ஆவிகளால் தாக்கப்பட்ட தீர்க்கதரிசிகளால் தவறாக வழிநடத்தப்பட்டான் (1 இராஜாக்கள் 22:19-23). 22 வருடங்கள் ஆட்சி செய்த ஆகாப், தன் தகப்பன் ஓம்ரியைப் போல பொய்யான வழிபாட்டில் ஈடுபட்டு கர்த்தரை எரிச்சல் (கோப) படுத்திக் கொண்டு இருந்தான் (1 இராஜாக்கள் 16:33). வறட்சி மற்றும் மழை; வானத்திலிருந்து நெருப்பு என தேவன் ஆகாபிற்கு தன்னை அறிந்துகொள்ளவும், பின்பற்றவும் வாய்ப்பளித்தார் (1 இராஜாக்கள் 18:18-40). யோசபாத் ராஜா ஆகாபைச் சந்திக்க வந்தபோது, ராமோத் கிலேயாத்தை திரும்பப் பெற சீரியர்களுக்கு எதிரான யுத்தத்தில் சேரும்படி அவனை வற்புறுத்தினான். அவன் பயந்தான் மற்றும் தீர்க்கதரிசனத்தின் மூலம் உறுதிப்படுத்த விரும்பினான். அந்த நேரத்தில் தான் தேவன், ஆகாப் தேவ கோபத்திற்கு ஆளாகும்படி பொய்யான தீர்க்கதரிசிகளை அனுப்பினார். அவன் சத்தியத்தை நிராகரித்தான், பொய்யை நம்பினான், பொய்யான தீர்க்கதரிசிகளின் பொய்களைப் பின்பற்றினான். பொய்யான தீர்க்கதரிசிகள் கைப்பாவைகளைப் போலவும், பொய் ஆவிகளால் இழுக்கப்பட்ட சரங்களைப் போலவும், சாத்தானின் தாளத்திற்கு நடனமாடுகிறார்கள். உண்மையான தீர்க்கதரிசியின் குணங்கள் வேதத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
நெருக்கமான உறவு:
உண்மையான தீர்க்கதரிசிகள் தேவனுடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளனர். எனவே, அவர்கள் தேவனின் குணாதிசயங்கள் அல்லது பண்புகளை அறிந்திருக்கிறார்கள்.
வேதத்தை ஆழமாக அறிதல்:
தேவனின் உண்மையான தீர்க்கதரிசிகள் வேதத்தை நன்கு அறிவார்கள். தேவனுடைய வார்த்தையில் வெளிப்படுத்தப்பட்ட சத்தியத்தின் அர்த்தத்தையும் பயன்பாட்டையும் அவர்கள் அறிவார்கள்.
தீவிர பரிந்துரையாளர்கள்:
உண்மையான தீர்க்கதரிசிகள் தேவ அன்பால், தேவ ஆவியால் நிரப்பப்படுகிறார்கள். அவர்கள் பரிசுத்தத்தையும் நீதியையும் கனப்படுத்துகிறார்கள். மேலும், அவர்கள் பாவிகளுக்காக மனம் வருந்துகிறார்கள், ஆகையால் தேவ இரக்கத்திற்காக மன்றாடுகிறார்கள். தேவன் தனது ஜனங்களை மன்னிக்காவிட்டால், ஜீவ புத்தகத்திலிருந்து தனது பெயரை நீக்கப்பட மோசே தயாராக இருந்தான் (யாத்திராகமம் 32:32) . இஸ்ரவேல் தேசம் ஆசீர்வதிக்கப்படுவதற்கு தான் சபிக்கப்பட்டவனாக இருப்பதற்கு பவுல் தயாராக இருந்தான் (ரோமர் 9:3).
கனிகளால் அடையாளம்:
உண்மையான தீர்க்கதரிசிகள் ஏராளமாக கனிகளை பிறப்பிக்கிறார்கள், தேவனுடைய ஆவி அவர்களின் வாழ்வில் கிரியை செய்வதை வெளிப்படுத்துகிறது (மத்தேயு 7:16).
நேர்மை/உண்மை:
நேர்மைக்கு எதிரானது பாசாங்குத்தனம். மதத் தலைவர்கள் பரிசேயர்கள் மற்றும் சதுசேயர்கள் போன்ற போலித்தனமானவர்கள்.
செல்வத்தைப் பற்றி அலட்சியம்:
பிலேயாம் ஒரு பொய்யான தீர்க்கதரிசி, ஏனெனில் அவனது இலக்கு செல்வம். எலிசா செல்வத்தை மறுத்துவிட்டான், அதே நேரத்தில் கேயாசி அதைத் தொடர்ந்தான் (2 இராஜாக்கள் 5).
அவருடைய மகிமையை பெருக்க வேண்டும்:
யோவான் ஸ்நானகரைப் போலவே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பெருக வேண்டும், தாங்கள் சிறுக வேண்டும் என்று விரும்புகிறார்கள் (யோவான் 3:30).
கைப்பாவைகளால் நான் ஏமாற்றப்பட்டேனா அல்லது பகுத்தறிவுடன் உண்மையான தீர்க்கதரிசிகளை அடையாளம் காண்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்